தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் ரயில்வே பாதுகாப்பு படை காவலர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி கந்தசாமிபுரத்தைச் சேர்ந்தவர் சுடலைமுத்து மகன் ரமேஷ் (45), இவர் வாஞ்சி மணியாச்சி ரயில்வே பாதுகாப்பு படையில் போலீசாக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை இவருடன் பணிபுரிந்த காவலருக்கு பிரிவு உபச்சார விழா நடந்தது. இதில் அவர் கலந்துவிட்டு தனது நண்பரான தூத்துக்குடியைச் சேர்ந்த இசக்கி பாண்டியன் என்பவருடன் தனது மோட்டார் பைக்கில் தூத்துக்குடிக்கு வந்து கொண்டிருந்தார்
சாமிநத்தம் அருகே ஒரு திருப்பத்தில் வரும்போது திடீரென பைக் நிலை தருமாறியதில் அருகில் இருந்த ஓடைக்குள் பைக் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வரும் வழியில் ரமேஷ் பரிதாபமாக இறந்தார். இசக்கி பாண்டியன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பொறுப்பு சைரஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


