மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்கக் கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப்புறப் பெண்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் புவிராஜ் தலைமையில், தூத்துக்குடி அருகே உள்ள எப்போதும்வென்றான், கணக்கன்கட்டை, வேலாயுதபுரம், அச்சன்குளம் மற்றும் குமாரரெட்டியாபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலும் வேளாண்மையே பிரதான தொழிலாக உள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஊரக வேலை உறுதித் திட்ட வேலைகள் எதுவும் நடைபெறாததால், கிராம மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் 100 நாட்கள் வேலைகளில் 50 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டு வந்தது. தற்போது வேலை கேட்டால் ‘நிதி இல்லை’ என்று அதிகாரிகள் கூறிவிடுகின்றனர். இந்த ஆண்டு கடும் வேலைவாய்ப்பின்மை நிலவுவதால், கிராம மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் உடனே வேலை வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெண்களின் கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர், இது குறித்து உடனே தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


