பொதிகையடியில் வாழ்ந்தவர் புருசோத்தமன். அவர்களின் தந்தை எம்.எஸ்.சுந்தரம் மலை ஏற்றம் செய்வதற்காகத்தான் முதலில் பொதிகை மலை வந்துள்ளார். சுந்தரம் அவர்கள் விக்கிரமசிங்கபுரம் ஹார்வி மில்லில் செயற்பொறியாளராகப் பணியாற்றினார். ஆசியாவிலேயே தண்ணீர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு இயங்கிய ஆலை விக்கிரமசிங்கபுரம் ஆலைதான். ஆசியாவில் தூண்களே இல்லாத மிகப்பெரிய நூற்பாலை இதுதான்!
செயற்பொறியாளராக சுந்தரம் அவர்களோடு பல ஆங்கிலேய அதிகாரிகள் அங்கு வேலை பார்த்து வந்தனர். அவர்கள் வேட்டையாடவும் காட்டுக்குள் சென்றுவருவது வழக்கம். இந்தச் சமயத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த கதிர்வேல் என்பவரின் குடும்பம் பொதிகை மலையில் எஸ்டேட் வைத்திருந்தனர். சுந்தரம் கதிர்வேல் நல்ல நண்பர்கள். எனவே இவர்கள் எஸ்டேட்டில் தங்குவது வழக்கம். இந்தச் சமயத்தில்தான் அகத்தியர் மலையின் ரகசியம் குறித்து அறிந்தார் சுந்தரம்.
1968&-69-ல் இந்த எஸ்டேட் வழியாத்தான் அகத்தியர் மொட்டைக்குச் சென்று வருவார்கள். அந்தச் சமயத்தில் இங்கு பணிபுரிபவர்கள் கொத்தடிமைகளாகத்தான் இருந்தார்கள். அந்த எஸ்டேட் வழியாக வெளியாட்கள் நடமாட முடியாது. ஆனால், அகத்தியர் மொட்டைக்குச் செல்பவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு. அகத்தியப் பெருமானை வணங்கச் செல்பவர்கள் நிறைய உணவுப் பொருள்கள் கொண்டுவருவார்கள். அதை அங்குள்ள தொழிலாளர்களுக்குச் சாப்பிட வழங்குவார்கள். எனவே இங்குள்ள தொழிலாளர்கள் பொதிகை மலைக்கு வரும் யாத்திரிகர்களை அதிகமாக நேசிப்பார்கள்.
ஒருசமயம், அகத்தியர் பீடம் சென்றவர்கள், அகத்தியரை வணங்கிவிட்டு, அங்கு கிடைக்கும் விபூதியை இடுப்பில் வைத்துக்கொண்டு இந்த எஸ்டேட் வழியாக வந்துள்ளனர்.
அப்போது, கொஞ்சம் விபூதி அங்குள்ள விளைநிலத்தில் விழுந்து, ஒரு அபூர்வ சக்தியை வெளிப்படுத்தியது! ஆம். மற்ற இடத்தின் விளைச்சலைவிட இந்த இடத்தில் விளைச்சல் மிக அதிகமாகக் காணப்பட்டது. இதனால் எஸ்டேட் முதலாளிக்கு ஏக சந்தோஷம். இந்த வழியாக அகத்தியரை தரிசனம் செய்ய மக்களை அனுப்பி வைத்தார். இதற்கிடையில்தான் சுந்தரம் அய்யா, “அந்த இடத்துக்கு நாம் போய், இங்கேதான் அகத்தியர் இருக்கிறார் என்று நினைத்துக் கொள்வதைவிட, அந்த இடத்தில் ஒரு சிலையை நிறுவினால் என்ன?” என்று நினைத்தார்.
சிலைவடித்து விடலாம். அதைத் தூக்கிக் கொண்டு செல்ல முடியுமா..? அது என்ன சாதாரண காரியமா.? இது குறித்து தன்னோடு பொதிகை வரும் நண்பர்களிடம் பேசினார். மனம் தளராத பக்தர்கள் ஒரு யோசனை சொன்னார்கள். அவர்கள் சொன்ன ஆலோசனையின்படி சுந்தரம் ஒரு முடிவெடுத்தார். ஒருவர் மட்டுமே தூக்கிச் செல்லும்படியாக சிறு அகத்தியர் சிலை ஒன்றை வடித்தார். அதன் எடை 15 கிலோ இருக்கும். அதை தோளில் தூக்கி வைத்துக்கொண்டு நடந்தார். 1970-ம் ஆண்டு, மே மாதம் 1-ம் தேதி அந்தச் சிலையை ‘அகத்தியர் பாதம்’ என்று கூறப்படும் இடத்தில் பிரதிஷ்டை செய்தார்கள்.
அகத்தியப் பெருமானுக்கு பெருமை தரக்கூடிய இருப்பிடம். அவர் தியானம் செய்த இடம். அந்த இடத்தில் சிலையை பிரதிஷ்டை செய்தாகிவிட்டது. இனி, ‘அகத்தியர் எங்கே தியானம் செய்கிறார்?’ என்று தேடவேண்டிய அவசியம் இல்லை. ‘அகத்தியப் பெருமான் இருப்பிடம் இதுதான்’ என்று சிலையின் முன்பிருந்தே நாம் வணங்கி விடலாம்.
அகத்தியப் பெருமான் இங்கு ஏகாந்த நிலையில் இருக்கிறார். அவரது மனைவி உலோபமித்திரையும் இங்கு இல்லை. அம்பாசமுத்திரத்தில் தனித்தனி சன்னதியில் இருக்கிறார்கள். ஆனால், தென்றல் தோன்றும் இந்த அகத்திய மாமலையில் அகத்தியர் தனியாக தவத்தில் இருக்கிறார். ‘முற்றும் துறந்த முனிவரான அகத்தியப் பெருமானுக்கு எதற்கு திருமணம்?’ என்று ஒரு கேள்வி உங்கள் மனதில் எழலாம்… அந்தக் கேள்விக்கு குருநாதரே பதில் சொல்கிறார்.
அகத்திய முனிவரின் முன்னோர்கள் வனத்தில் பித்ருக்களாக தலைகீழாக மரத்தில் தொங்கிக்கொண்டு இருந்தார்கள். முனிவர் அதைக் கண்டு வருத்தம் அடைந்தார். பித்ருக்கள் வடிவில் உள்ள முன்னோர்கள், “நீ விவாகம் செய்யாமல் இருக்கிறாய். உனக்குப் பின் எங்களுக்குப் பிண்டம் (திதி) தருபவர்கள் இல்லை. நீ புத்திரன் பெற்றால் இந்த நிலையிலிருந்து நாங்கள் தப்புவோம்!” என்றனர்.
இதைக் கேட்ட குறுமுனி, விவாகம் செய்வதற்குத் தீர்மானித்தார். அந்தச் சமயத்தில்தான் விதர்ப்பதேச அரசன், தனக்கு குழந்தை பாக்கியமில்லை, குழந்தை வேண்டும் என்று முனிவரை வேண்டினான். அகத்திய முனிவரும், “அழகிய மகளைப் பெறுவாய். அவளை எனக்கு மனைவியாகத் தரவேண்டும்!” என்று அருள் பாலித்தார்.
காலங்கள் கடந்தது. விதர்ப்பதேச மன்னனுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு உலோபாமித்திரை என்று பெயர் வைத்தான். நிகரற்ற அழகு வாய்ந்தவளாக அவள் வளர்ந்தாள். விவாகத்திற்கு ஏற்ற பருவம் அடைந்தாள். முறைப்படி அகத்தியமுனிவருக்கும் உலோபமித்திரைக்கும் திருமணம் நடந்தது. இந்தச் செய்தியை கந்த புராணத்தில் ஆசிரியர் கச்சியப்ப சிவாச்சாரியார் எடுத்துக் காட்டியுள்ளார்.
இருவரும் மணம் முடித்தாலும்கூட அகத்தியரோ… முனிவர். காட்டில் வாழ்பவர். உலோபமித்திரையோ… இளவரசி. நாட்டில் வாழ்பவர். மணம் முடித்தபின் அவர் தன் மணாளன்கூடத்தானே வாழ வேண்டும். எனவே, முனிவருடன் ராஜகுமாரி காட்டிற்குப் புறப்பட்டார். அகத்திய முனிவர், ராஜகுமாரியிடம் உயர்ந்த ஆடைகளையும் அணிகலன்களையும் கழற்றி வைத்துவிட்டு வருக என்றார். அதன்படி ஆடை அணிகலன்களைத் துறந்துவிட்டு, மரவுரியும் தோலும் கட்டிக்கொண்டு முனிவருடன் சென்றார்.
கங்கா துவாரத்திலும் உலோபமித்திரை முனிவருடன் பல நாட்கள் விரதம் இருந்து பணிவிடை செய்துவந்தார். அகத்திய முனிவர், உலோபமித்திரையிடம் “உனக்குப் பத்து நல்ல மக்கள் வேண்டுமா அல்லது பத்துபேரை வெல்லக் கூடிய ஒரு மகன் வேண்டுமா!” என்று கேட்டார்.
“பகவானே! புகழுக்குரிய அறிவைப் படைத்தவனும் தருமத்தில் நிலை கொண்டவனுமான ஒரு மகனையே விரும்புகிறேன்!” என்று சொல்லி, அவ்வாறே பெற்றாள். அதன்பின் தன் முன்னோர்கள்
பித்ரு நிலையை இழந்தனர். குறுமுனி, உலோபமித்திரையை திருமணம் செய்யும் வரலாறு, பாண்டவர்கள் வனவாசத்தின்போது முனிவர்கள் கூறியதாக மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது,
இது அகத்தியப்பெருமானை பற்றி சிறப்பு வரலாறு. இனி அகத்திய பெருமான் பொதிகை மலை பிரதிட்சை செய்த சிலையை பற்றி காணுவோம்.
அகத்தியப் பெருமானின் சிலை நிறுவப்பட்டு பூஜை நடந்து வந்தது. ஒருநாள், திடீரென அந்தச் சிலை காணாமல் போய்விட்டது. ஆனாலும், அகத்தியர் பாதம்பட்ட இடத்தில் தீபம் ஏற்றி வழிபட ஆரம்பித்தனர். இந்த விஷயம், நெய்யாற்றங்கரையில் வசித்து வந்த சுவாமி விஷ்ணு தேவானந் அவர்களுக்குத் தெரியவந்தது. அவர் மற்றொரு சிலையைப் பிரதிஷ்டை செய்ய முடிவு செய்தார்.அந்தச் சிலை கொஞ்சம் பெரிய சிலையாக வடிவமைக்கப்பட்டது. அந்தச் சிலையை, போனக்காடு வழியாக சிறு வண்டியில் வைத்து கயிறு கட்டி இழுத்துக்கொண்டு மலைக்கு வந்தனர். இந்த செய்தி கேரளா மனோரமா புத்தகத்தில் படத்துடன் வெளிவந்திருந்தது.
பழைய இடத்தை விட்டு விட்டு புதிதாக ஒரு பீடம் அமைத்தனர். அந்த பீடத்தில் அவர்கள் கொண்டுவந்த அகத்தியர் சிலையை பிரதிஷ்டை செய்தனர். பக்தர்கள் அவரை வணங்கி சந்தோஷம் அடைந்தனர்.
காலம் கடந்தது. பக்தர்களின் சந்தோஷம் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. திடீரென்று ஒரு நாள், அந்தச் சிலையும் காணாமல் போய்விட்டது. இதைவிட பெரிய சிலையாக அகத்தியப் பெருமான்
எதிர்பார்க்கிறாரோ.? என பக்தர்கள் தடுமாறிவிட்டார்கள்.
அகத்திய மாமுனிவர் சிறப்பானவர். தனக்கு இப்படித்தான் சிலை அமைய வேண்டும் என்றுதான், இரண்டு முறை அமைத்த சிலையைக் காணாமல் செய்துவிட்டார். எனவேதான், தற்போது உள்ள சிலையை அவர் மிக உன்னதமாக பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்தார். ஆம்.. பக்தர்களின் ஆசைக்கு, அகத்திய முனி ஒரு அற்புதம் செய்தார்.
அசைக்க முடியாத தன் சிலையை, யாருமே எதிர்பார்க்காத வண்ணம் பிரதிஷ்டை செய்தார். அதுவும், தனி மனிதன் மூலமாக அல்ல.. ஒரு மாபெரும் சக்தி மூலமாக! ஆம்! 1982-ல், கேரள அரசுதான் மூன்றரை அடி உயரம் உள்ள தற்போதைய குறுமுனி சிலையை பிரதிஷ்டை செய்தது. இந்தச் சிலையின் எடை சுமார் அரை டன்னாவது இருக்கும். இதை தோளில் தூக்கிக் கொண்டு வரவில்லை. கயிறு கட்டியும் இழுத்து வரவில்லை. மாறாக, இந்தச் சிலையை ஹெலிகாப்டர் மூலமாகக் கொண்டுவந்து இறக்கினார்கள். வான் மேகங்கள் வழிவிட்டன. தூறல் மழை பூவாகப் பொழிய அகத்தியரின் சிலை, மலையில் இறங்கியது. அந்தச் சமயத்தில், தென்றல் காற்று உற்சாகமாக சுழன்று ஆடியது. மேகக் கூட்டங்கள் சந்தோஷமாக ஓடிப்போய் கைகுலுக்கிக் கொண்டன.
ஏகபொதிகையும், ஐந்துதலை பொதிகையும் அகத்தியர் வரவைக் கண்டு சந்தோஷப்பட்டு சிநேகமாகச் சிரித்தன. பள்ளத்தாக்கில் இருந்து எழுந்து மேலே வந்த மேகக் கூட்டங்கள் அகத்தியப் பெருமானை
வரவேற்று அரவணைத்துக்கொண்டன. அகத்தியரை ஹெலிகாப்டரில் பிரதிஷ்டை செய்ய வந்த அதிகாரிகள், அந்த இடத்தின் அழகைக் கண்டு மெய் மறந்தனர். அவர்களுக்கு இந்த இடத்தைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். மறு வருடம் கிளம்ப ஆயத்தமானார்கள். ஆனால், இந்த இடத்துக்கு ஏற வேண்டும் என்றால், 28 கி.மீ. கரடுமுரடான சாலையில் ஏறவேண்டும். அட்டைக்கடி, முட்டு ஏத்தம், யானை காடு . இதையெல்லாம் தாண்ட வேண்டும். இதற்கு அவர்கள் தயாராக இல்லை. எனவே, ஹெலிகாப்டரில் வந்தார்கள் ஆனால், மேகக் கூட்டம் மறைத்துவிட்டதால், வானத்தில் ஒருநாள் முழுவதும் வட்டம் அடித்து அகத்தியர் மொட்டையில் இறங்க முயற்சி செய்தார்கள். கடைசிவரை ஹெலிகாப்டர் இறங்கவே முடியவில்லை. கடைசியாக, எரிபொருள் தீரும் நிலை ஏற்பட்டதால், அதிர்ச்சியுடன் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். யாரும் எளிதாக அகத்தியர் மொட்டையில் இறங்க முடியாது. அதேநேரம் அகத்தியப் பெருமானை எளிதாகப் போய் தரிசிக்கவும் முடியாது. அதை உணர்ந்த அதிகாரிகள், அகத்தியரிடம் மன்னிப்புக் கேட்க, வழியாக நடந்துவந்து தரிசனம் செய்தனர். அந்த அளவுக்கு ஈர்க்கக்கூடிய பெருமை, அகத்தியருக்கு உண்டு.
இந்த சிலை பிரதிட்சை செய்த நாள் மே 1 ந்தேதி. புருசோத்தம்மன் அய்யா உயிரோடு இருக்கும் வரை மே மாதம் 1 ந்தேதி பொதிகை மலை பூஜைக்கு சென்று விடுவார். அங்கு அவர் தனக்கு எதுவும் வேண்டும் என்றும் கேட்கவில்லை. தாமிரபரணி வற்றாமல் இருக்க வேண்டும் என்றே பூஜை செய்து வந்தார்.
இதுபோன்ற தகவலை நீங்கள் மேலும் படிக்க வேண்டும் என்றால் நான் எழுதி விகடன் பிரசுரம் வெளியிட்ட சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை என்ற நூலை படியுங்கள்.
—–


