எட்டயபுரம் என்றாலே நாம் காட்டிகொடுத்தவன் எட்டப்பன் என்றும், எட்டயபுரம் ஜமீன்தார் ஆங்கிலேயர்களுக்கு அடிபணிந்து வாழ்ந்தார்கள் என்ற ஒரு செய்தி பரவி வருகிறது. ஆனால் அப்படியல்ல வரலாறு என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
எட்டயபுரத்தில் வாழ்ந்த கட்டையமணியக்காரர் பாரதியின் நெருங்கிய நண்பராக இருந்தார். இவர் ஜமீன்தார் காலத்தில் வாழ்ந்த புலவர்களை ஒருங்கிணைத்து “வித்வத் சபை” ஒன்று அமைத்து இலக்கியங்கள் பற்றி ஆராய்ச்சி செய்யத் தூண்டுகோலாய் விளங்கினார். இவர் காலத்தில் வாழ்ந்த பெண் பாற்புலவர்களாகிய சுப்பம்மாள் “குமாரகீதம்” என்ற நூலை இயற்றினார். இவரது காலத்தில் எஸ்.டி.சண்முகம் பிள்ளை திவானாக இருந்தார்.
தாத்தா மகராஜா ஆட்சிபுரிந்த காலத்தில் சிறந்த இஸ்லாமியக் கவிஞரும், சீறாப்புராணம் இயற்றியவருமான மகாகவி உமறுப் புலவருக்கு தமிழாண்டு 1094 தை மாதம் பிச்சைக்கோனார் என்பவர் உமறுப்புலவரின் சமாதியில் நினைவுச்சின்னம் எழுப்பினார். இதையட்டி அந்த தெருவிற்கு உமறுபுலவர் தெரு என்று பெயரிட்டப்பட்டது. தாத்தா மகராஜா மிகவும் எளிமையாக வாழ்க்கையை நடத்தியவர். முதிய வயதிலும் ஜமீன் ஆட்சியை மிகத்திறமையாக நிர்வகித்தார். உடற்பயிற்சியில் சிறந்து விளங்கினார். இவர் 13 ஆண்டுகள் ஆட்சி புரிந்து 1928-ஆம் ஆண்டு காலமானார்.
“தாத்தா மகராஜா” மரணத்திற்குப்பின்பு அவருடைய இரண்டு புதல்வர்களில் மூத்தவரான தங்கச்சாமிபாண்டியன் என்ற ஜெகவீரராம குமார வெங்கடேஸ்வர எட்டப்ப நாயக்கர் 1928&ஆம் ஆண்டு ஜமீனை பொறுப்பேற்றார். இவர் சிறந்த நிர்வாகி. ஜமீன் நிர்வாக சம்பந்தமான ரிக்கார்டுகளை நுண்ணிய அறிவுடன் ஆராய்ந்து உத்தரவுகள் இடுவதில் மிகத் திறமைசாலி. இதற்கு காரணம் ராஜா பட்டம் பெற்ற ராஜா மகாராஜா ஜமீன்தாராக இருந்த காலத்தில் அவருக்கு தங்கச்சாமி பாண்டியன் செயலாளராக இருந்த திவான் செய்யும் வேலைகளை இவரே முன்னின்று செய்தார். இவ்வாறு தனது இளமைக்காலத்திலிருந்தே நிர்வாகத் திறமையுடையவராகத் திகழ்ந்தார்.
இவரது ஆட்சிக்காலத்தில் குருகுஹதாஸ் பிள்ளை “திருநெல்வேலி சீமைச் சரித்திரம்” என்ற வரலாற்று நூலை எழுதி வெளியிட்டார். எட்டயபுரம் ஜமீன் பகுதியிலும் சுற்றுப்புறக் கிராமங்களிலும் இந்திய விடுதலை இயக்கம் விரிந்து பரவியது. திருநெல்வேலி நாவலர் சோமசுந்தர பாரதியின் முயற்சியால் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. அதையட்டி தமிழகம் முழுவதும் ஹரிஜன நலநிதி திரட்ட மகாத்மா காந்திஜி பிரயாணம் செய்தார். அந்தச்சமயம் நாவலர் முயற்சியால் 25&1&1934 ஆண்டு அண்ணல் காந்திஜி எட்டயபுரம் வருகை புரிந்தார். எட்டயபுரம் மக்கள் காந்திஜியே உற்சாகமாக வரவேற்றார்கள். பேரூராட்சி மன்றத்தின் சார்பில் காந்திஜிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. காந்திஜியின் ஹரிஜன நலநிதிக்கு எட்டயபுரம் பொதுமக்கள் பணமுடிப்புக் கொடுத்தார்கள். எட்டயபுரம் ஜமீன் பகுதிகளில் பிற்காலத்தில் தேசிய இயக்கம் பரவக் காந்தியடிகள் வருகை முக்கிய காரணமாய் அமைந்தது. சிறந்த நிர்வாகியாவும், தனது சகோதரர் காசி விஸ்வநாத பாண்டியரின் கலைப்பணிக்கு உறுதுணையாகவும் விளங்கிய தங்கச்சாமிப்பாண்டியன் 1934&இல் காலமானார்.
தங்கச்சாமிப்பாண்டியன் என்ற ஜமீன்தாரரின் சகோதரரான காசி விஸ்வநாத பாண்டியன் சிறந்த ஓவியக்கலைஞர். புகைப்படங்கள் பிடிப்பதில் நிபுணர். இசைக்கலையிலே தேர்ந்தவர். இவரது அரண்மனையில் எப்போதுமே இன்னிசை முழங்கிக்கொண்டே இருக்குமாம். இவர் தீட்டிய அற்புத சித்திரங்களை அரண்மனை சுவர்களை அழகுபடுத்தி நிற்கும் இசைக் கலைஞர்களுக்கும், நாடக கலைஞர்களுக்கும் பரிசுப்பொருட்களை வாரி வாரி வழங்கிய வள்ளல் என இவரை கூறுகிறார்கள். இவரது அரண்மனையே ஒரு கலைப்பெட்டகமாகத்திகழ்ந்தது. இவர் “தேவராஜ் ஜெகதீச பாலகானசபை” என்ற நாடக கம்பெனியைத் தொடங்கினார். இதன் மூலம் பல இளைஞர்களை நாடகத்தில் பங்கேற்க வைத்தார். வி.நாராயணசாமி, வெங்கிடாசலம், இ.ஆர்.சகாதேவன் ஆகியோர் இந்த கம்பெனியின் நாடகங்களில் நடித்தவர்கள் தன்னால் வரையப்பட்ட சித்திரங்களையே பயன்படுத்தி நாடகக் கதாப்பாத்திரங்களுக்கேற்ப நடிகர்களை தேடி எடுத்து நடிக்க வைப்பதில் இவர் வல்லவர். இவரின் வேண்டுகோளுக்கிணங்க, டி.கே.சண்முகம் குழுவினரின் “இரத்தினாகிரி” நாடகம் எட்டயபுரத்தில் நடைபெற்றது. இந்த நாடகத்தில் நடித்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு வைரக்கற்கள் பதித்த தம் கடிகாரத்தையே இவர் அன்பளிப்பாகக் கொடுத்தாராம். சாத்தூரில் டி.கே.சண்முகம் குழுவினர் நாடகம் நடைபெற்ற போது தினந்தோறும் காசிப்பாண்டியன் சென்று பார்த்ததாக டி.கே. சண்முகம் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். பின்னாளில் டி.கே.சண்முகம் நாடக கம்பெனியைக் கலைத்துவிடும் நிலை எழுந்த போது காசிப்பாண்டியன் தன்னிடமிருந்த நாடகப்பொருட்களையும் சில திரைகளையும் டி.கே.எஸ். நாடக குழுவினருக்கு அளித்து மீண்டும் கம்பெனியைத்தொடங்க உதவி புரிந்தார்.
காசிவிஸ்வநாத பாண்டியன் “தயாளன்” என்ற நாடகம் எழுதியுள்ளார். அது இவரது நாடக அரங்கில் அரங்கேறியது. பின்பு இதே நாடகம் திரைப்படமாக எடுக்கப்பட்டது. இவரது நாட்டிய அரங்கு பின்னாளில் திரைப்பட அரங்காக மாற்றப்பட்டது..
தேசியப்பற்று மிகுந்த காசிவிஸ்வநாத பாண்டியன் தனது திரைப்பட அரங்கிற்கு “பாரதமாதா டாக்கீஸ்” எனப்பெயரிட்டு அழைத்தார். இந்தத்திரைப்பட அரங்கில் திரைப்பட காட்சி நடை பெறுவதற்கு முன்னால் சிங்கத்தின் அருகில் பாரதமாதா நிற்கக் கையில் தேசிய கொடியுடன் உள்ள சிலேடு காட்டப்படும். அத்துடன் காட்சிக்கும் முன்னர் பங்கிம் சந்திரர் சட்டர்ஜி எழுதிய வந்தேமாதரம் பாடல் இசைத்தட்டும் முதலில் ஒலிபரப்பப்படும். ஆங்கிலேய அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பின்னும் தொடர்ந்து இதைச் செய்தார்.இது தவிர இந்தப்பகுதியில் நடைபெறும் காங்கிரஸ் மாநாடுகள் இவரின் ஆதரவோடு நடைபெற்றன. 1924&ஆம் ஆண்டு முதன் முதலில் இவரது திரைப்பட அரங்கில் தான் நகர காங்கிரஸ கமிட்டி தோன்றியது. இந்தக் கமிட்டிக்கு வட்டக்கடை திருமலை அய்யங்கார் தலைவராகத்தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் திரு.ஸ்ரீவாச அய்யங்கார், கு.மாரியப்பநாடார், செல்லையா மூப்பனார், சி.எஸ்.நரசிம்மராவ், எஸ்.எம்.பி.கிருஷ்ணன் செட்டியார், துரைராஜ் நாடார், டெய்லர் சண்முக மணியக்காரர், சண்முகவேல் சேர்வைக்காரர் மற்றும் பலரும் இந்த கமிட்டியில் அங்கம் வகித்தார்கள்.
இவ்வாறு கலை வளர்ச்சிக்கும், தேசிய இயக்கத்திற்கும் அரும்பணியாற்றிய காசி விஸ்வநாத பாண்டியன் 1940&இல் காலமானார்.
தங்கச்சாமிப்பாண்டியனின் ஒரே புதல்வரான முத்துக்குமார வெங்கடேஸ்வர எட்டப்பர். இவர் 1934ம் ஆண்டு ஜமீன்தார் பதவிக்கு வந்தார்.இவர் சிறந்த சங்கீத ரசிகர். தொழில்நுட்ப வல்லுனர். பொறியியல் மின்சாரம், மற்றும் மோட்டார் வாகனத் தொழில் துறைகளில் மிகத்தெளிவான ஞானமுடையவர். இவரது காலத்தில் தான் 1940&ஆம் ஆண்டு எட்டயபுரத்திற்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. இவர் சிறந்த கட்டிடக்கலைஞர். இவரே கட்டிடங்களுக்குண்டான படத்தை வரைந்து புதிய புதிய கட்டிடங்களை கட்டினார். இவரது காலத்தில் ஜமீன் அலுவலகம், சிங்காரத் தோப்பு, திரைப்பட அரங்கு, ஏகாதேசி மண்டபம் ஆகியன நவீன முறையில் நிர்மாணிக் கப்பட்டன.
தமிழகத்தின் தலைச்சிறந்த அறிஞர்களான பண்டிதமணி கதிரேசன் செட்டியார், வெள்ளக்கால் சுப்பிரமணியபிள்ளை, ரா.பி.சேதுபிள்ளை, உமாமகேஸ்வர பிள்ளை ஆகியோர் எட்டயபுரத்திற்கு வந்து தமிழ் ஆராய்ச்சி செய்து வந்தார்கள். இந்தப் புலவர்களை எல்லாம் நாவலர் சோமசுந்தர பாரதியார் தான் எட்டயபுரத்துக்கு அழைத்து வந்தார். நாவலரும், நாகூர்முத்துப் புலவர் எட்டயபுரத்தில் புலவர்களாக திகழ்ந்தார்கள். சோம-சுந்தர பாரதியார் எட்டயபுரத்தில் 1935ம் ஆண்டு தனது வீட்டைக்கட்டி அதற்கு “தமிழகம்” எனப்பெயரிட்டு அழைத்தார். இந்தப்புதுமனை புகுவிழாவிற்கு சிதம்பரனாரை நாவலரை அழைத்து இருந்தார். சுதேசிய கப்பல் கம்பெனியில் ஆட்சி பொறுப்பாளராக சில காலம் நாவலர் இருந்தார்.
இந்த ஜமீன்தாருக்கு தேசிய இயக்கத்தில் பங்கு கொண்ட பெரும் தலைவர்களான ராஜாஜி, கிருஷ்ணபாரதி, வைத்தியநாத அய்யர், கல்கி ஆகியோருடன் நெருங்கிய நட்பு உண்டு. இந்த நட்பின் காரணமாக 1945&ஆம் ஆண்டு எட்டயபுரத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலய பிரவேசம் நடைபெற்றது. ராஜாஜி தலைமையில் நடந்த இந்த ஆலய பிரவேசத்தில் மா.பொ.சிவஞான கிராமணியார், வைத்தியநாத அய்யர், கிருஷ்ணசாமி பாரதி மற்றும் தமிழகத்தின் சிறந்த தேசபக்தர்கள் கலந்து கொண்டார்கள். ஜமீன்தார் குடும்ப ஆசிரியரும், சிறந்த தேசபக்தருமான கட்டாலங்குளம் சிவத்தசாமி ஆலய பிரவேசம் நடைபெற ஜமீன்தாருக்கு உறுதுணையாக இருந்தார்.
இக்காலக் கட்டத்தில் எட்டயபுரத்திலும் ஜமீன் புறங்களிலும் விடுதலை இயக்கம் வீறுகொண்டெழுந்தது. எட்டயபுரம் பாரதமாதா திரையரங்கில் காங்கிரஸ் அரசியல் மாநாடு நடைபெற்றது. இதையடுத்து எட்டயபுரம் நகர காங்கிரஸ் கமிட்டியும் விறுவிறுப்புடன் இயங்கியது. ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 11&ஆம் தேதி எட்டயபுரம் வாசி செல்லையா மூப்பனார் பாரதியார் படங்களைத் தெருவெல்லாம் பாடிவந்து கவிஞருக்கு அஞ்சலி செய்து வந்தார். இவர் ஒரு தேசபக்தர். காந்திஜியின் தனிநபர் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கு கொண்டு சிறை சென்றார். இதன் பின்பு முத்துக்கருப்பன் பலருடன் சிறை சென்றார்கள். கடலையூரில் 1942 ஆகஸ்ட் “வெள்ளையனே வெளியேறு” போராட்டத்தில் பங்குக் கொண்டு மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடைபெற்றது. கைத்தறி நெசவாளர்கள் கைது செய்யப்பட்டார்கள். எட்டயபுரத்தில் பிறந்த எஸ்.ஏ. அய்யர் இந்திய தேசிய ராணுவத்தில் மிகத் தீவிரமாக செயல்பட்டார். நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஜனாதிபதியாக கொண்ட முதல் இந்திய சுதந்திர சர்க்காரில் பிரச்சார மந்திரியாகப்பணியாற்றினார்.
ஜமீன்தாருக்கு ஏற்கனவே இலக்கிய அறிவுகளுடன் ஏற்பட்ட பிணைப்பின் காரணமாகப் பிற்கால மகாகவி பாரதிக்கு மணிமண்டபம் எழுப்ப இவர் பேருதவி புரியத்தொடங்கினார். இக்காலகட்டத்தில் பல அன்பர்கள் சேர்ந்து “பாரதி இலவச வாசகசாலை”, “பாரதி இலக்கிய மன்றம்” ஆகியவற்றை தோற்றுவித்தார்கள். பாரதி இலக்கிய வாசகசாலையை சேர்ந்த அன்பர்களால் 1943ம் ஆண்டு நடத் தப்பட்ட பாரதி விழாவிற்கு கிருபானந்தவாரியார், நாகர்கோவில் ஆறுமுக நாடார் மற்றும் பல தமிழ் அறிஞர்கள் வருகை புரிந்தார்கள். இந்த வாசகசாலையரின் வேண்டுகோளுக்கிணங்க கே.பி. சுந்தரம்பாள் இன்னிசைக் கச்சேரியின் மூலம் பாரதியின் நினைவுச் சின்னத்திற்கு நிதி திரட்டப்பட்டன. இதற்கிடையில் பாரதி இலக்கிய மன்றம் “கல்கி” ஆசிரியர் ரா.கிருஷ்ண மூர்த்தியை இலக்கியக் கூட்டத்திற்கு அழைத்தார்கள். கூட்டத்தின் விளைவாக பாரதி மணி மண்டபம் நிதி கோரி கல்கி 1944&ஆம் ஆண்டு வேண்டுகோள் விடுத்தார். இந்த வேண்டுகோளுக்கிணங்க மக்கள் நிதியினை வாரி வழங்கினார்கள். கடல் பகுதியில் வசிக்கும் தமிழ் மக்கள் இந்த நிதிக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள். இதனால் 1945 ஜுன் மாதம் பாரதி மணிமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டு விழா ஜமீன்தார் தலைமையில் நடைபெற்றது. ராஜாஜி அடிக்கல் நாட்டினார். இவ்விழாவிற்கு மகாத்மா காந்தி, சரோஜினி நாயுடு, போன்றோர் வாழ்த்துரை அனுப்பினார்கள். பாரதி மண்டபம் நிறுவ ஜமீன்தார் நிலமளித்து அன்பளிப்பு வழங்கினார். இச்சமயத்தில் திரு.டி.கே. சண்முகம் குழுவினர் நடத்திய ஒளவையார் நாடகத்தின் ஒரு நாள் வசூல் ரூ1140 அடிக்கல் நாட்டு விழாவிற்கு செலவிற்கு நிதியாக வழங்கப்பட்டது.
எட்டயபுரம் சுதந்திர பேராட்டம் குறித்து மிக அதிகமான விழிப்புணர்வு இல்லாததும், மிக பிரமாண்டமான அரண்மனையை மக்களுக்கு காட்டாமல் இருப்பது வேதனையான விஜயம்தான்.


