தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதி கோயில்களில் ஒன்றான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், திருமஞ்சனம், தீர்த்த விநியோக கோஷ்டி நடைபெற்றது. பின்னர் சுவாமி நம்மாழ்வார் கொடிமரம் முன்பாக எழுந்தருளினார். கொடிபட்டம் சுற்றி வரப்பட்டு மாசி திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவிழா நாட்களில் தினமும் மாலையில் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் வீதி உலா நடைபெறுகிறது. மார்ச் ஐந்தாம் தேதி ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு கருட வாகனத்தில் சுவாமி பொழிந்துநின்ற பிரானும், ஹம்ச வாகனத்தில் சுவாமி நம்மாழ்வாரும் எழுந்தருளும் வீதி உலா நடைபெறுகிறது.
மார்ச் ஒன்பதாம் தேதி ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறுகிறது. மார்ச் பத்தாம் தேதி இரவில் சுவாமி நம்மாழ்வார் வீணை மோகினி திருக்கோலத்திலும் சுவாமி பொழிந்துநின்றபிரானும் எழுந்தருளும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. மார்ச் 11ஆம் தேதி இரவில் சுவாமி நம்மாழ்வார் எழுந்தருளும் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினரும் பக்தர்களும் செய்துள்ளனர்.


