வெள்ளூர் நடுநக்கர் மத்தியபதீஸ்வரர் திருக்கோயில் மாசித் திருவிழா தேரோட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூரில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பழமை வாய்ந்த அருள்மிகு சிவகாமி அம்பாள் உடனுறை நடுநக்கர் மத்திய பதீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் மாசித் திருவிழா கடந்த மாதம் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா நாட்களில் சுவாமி நடுநக்கர் மத்திய பதீஸ்வரர் சிம்ம வாகனம், ரிஷப வாகனம், இந்திர வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் வீதி உலா நடைபெற்றது. ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை 9 மணிக்கு சுவாமி அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளினர். காலை 10 மணிக்கு திருத்தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த திருத்தேரோட்டத்தில் திருத்தேரானது 4 வீதிகள் வழியாக வலம் வந்தது. பக்தர்கள் தேரோட்டத்தில் தேங்காய் பழம் உடைத்து சுவாமியை வழிபட்டனர்.


