தென்மாவட்டங்களில் உள்ள பனை மரத்தையும் பனை தொழிலாளர்களையும் காப்பாற்ற தற்போது நடைபெற உள்ள பட்ஜெட்டில் இந்த பகுதியில் பனை சார்ந்த தொழில் நடப்பதற்கும் அதனை ஊக்குவிப்பதற்கும் மத்திய அரசு அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.உலகிலுள்ள மொழிகளுக்கு எல்லாம் மூத்த மொழி நம் தமிழ் மொழி. நம் செந்தமிழ் எழுத்துக்கள் முதன் முதலில் எழுதப்பட்டது பனை ஓலையில்தான் என்ற வகையில் பனைமரம் தமிழரின் அடையாளமாக உள்ளது. நமது முன்னோர்கள் பனை மரத்தை ‘கற்பக விருட்சம்’ என்று பெயரிட்டு அழைத்தார்கள்.
கடந்த காலங்களில் இந்த பனைமரம் என்பது மிகவும் அழிவு நிலையில் தான் உள்ளது. பனைமரம் மட்டுமல்லாமல் பனைசார்ந்த பொருட்களும் அழிவு நிலையில் உள்ளது. இந்த நிலையில் தான் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு பனைமரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும், அதில் கிடைக்கும் கருப்பட்டியை ரேஷன் கடையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தது. இதனால் பனை ஏறும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இது குறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும் போது,
தென்மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் தான் இந்த பனைமரம் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் வடக்கு பகுதியில் உள்ள வேம்பாறு பகுதியில் இருந்து தொடங்கி திருச்செந்தூர், குலசேகரப்பட்டினம், உடன்குடி, சாத்தான்குளம், திசையன்விளை போன்ற பகுதியில் சுமார் 1 கோடிக்கும் அதிகமான பனைமரங்கள் உள்ளது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடியில் பனைவெல்ல கூட்டுறவு சங்கம் இருந்து செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது உள்ள சூழலில் அந்த சங்கம் பெயரளவில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. ஆங்காங்கே சில சில சிறு சிறு பனை சங்கங்கள் இருந்தாலும் அனைத்தும் முறையாக செயல்படுகிறது என்பது சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை.
எனவே இந்த தென்மாவட்டங்களில் உள்ள பனை மரத்தையும் பனை தொழிலாளர்களையும் காப்பாற்ற தற்போது நடைபெற உள்ள பட்ஜெட்டில் இந்த பகுதியில் பனை சார்ந்த தொழில் நடப்பதற்கும் அதனை ஊக்குவிப்பதற்கும் மத்திய அரசு அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.என்று அவர் கூறினார்.
இதுகுறித்து இந்த பகுதியைச் சேர்ந்த பனை ஏறும் தொழிலாளி முருகேசன் கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி பகுதி பனைஏறும் தொழிலாளர்கள் அதிகம் உள்ள பகுதி. தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் இந்த பகுதியில் இருந்து தான் கருப்பட்டி ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது பனைமரத்தை வெட்டக்கூடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி. ஆனால் பனை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஊதியம் வழங்குவது, லோன் வழங்குவது போன்ற செயல்களை மத்திய அரசு செய்து தர வேண்டும். மேலும் இதற்காக மானியம் அமைத்து, வாரியம் அமைத்து இந்த பனை தொழிலாளர்களை காக்க வேண்டும். பனைமரம் கற்பக விருட்சம். எனக்கு தற்போது 1500 பனைமரங்கள் உள்ளது. நான் கடந்த காலங்களில் 13 பேரை வைத்து பனையேறினேன்.
மத்திய-மாநில அரசுகள் வருடம் தோறும் இந்த தென் மாவட்டப்பகுதிகளில் வருடத்திற்கு 5 கோடி பனைமரங்கள் விதைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே இதனை கவனத்தில் கொண்டு பனை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்த தென் மாவட்டப்பகுதிகளில் பனை தொழிலுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்றார்