தாமிரபரணி ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து ஒரு வார காலமாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து அணைக்கட்டுகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் பாபநாசம், மணிமுத்தாறு அணைக்கு வரும் உபரிநீரை முழுமையாக தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சி பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பொதுமக்களை அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அதிகாரிகளிடம் நடைபெறும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
அதன்பின்னர் அவர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.
அதில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து மழை பெய்து வரும் காரணத்தினால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணியில் திறந்து விடப்பட்டுள்ள உபரி நீரான 60 ஆயிரம் கன அடி நீர் தூத்துக்குடி மாவட்டத்தின் முதல் தடுப்பணையான மருதூர் அணைக்கட்டு பகுதிக்கு தற்போது வந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் கரையோரங்களில் 7 இடங்களில் பாதிக்கப்படும் பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தற்போது போர்க்கால அடிப்படையில் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்டு பாதுகாப்பாக தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 50க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருடன் பேசி தண்ணீர் திறப்பு குறித்து கேட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.


