வல்லநாடு அருகே இடப்பிரச்சனையில் சமரசம் பேச அழைத்துச் சென்று வழக்கறிஞரை தீர்த்துக்கட்டியவரை நேற்று காலை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். தொடர்ந்து அங்கு 2வது நாளாக பதற்றம் நீடிப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள சென்னல்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் சண்முகவேல். விவசாயியான இவர், பாளை மகாராஜநகர் உழவர் சந்தையில் தேங்காய் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் வேல்முருகன்(27) வழக்கறிஞர். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் (28) என்பவருக்கும் இடப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இடப்பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளலாம் என்று கூறி செல்வம் தன் வீட்டிற்கு வேல்முருகனை அழைத்துள்ளார். இதனை நம்பிய வேல்முருகன், செல்வம் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பிறகு அவர், திரும்பி வரவில்லை. இதற்கிடையில் வேல்முருகன் கொலை செய்யப்பட்டதாக முறப்பநாடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்று சென்னல்பட்டி முழுவதும் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் செல்வம் வீடு வெளிபக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் அந்த வீட்டை திறந்து பார்த்தனர். அப்போது அங்கு வேல்முருகன், கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது. போலீசார், உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்பி அருண்பாலகோபாலன் வந்து விசாரணை நடத்தினார்.
வக்கீல் வேல்முருகன் கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:& வேல்முருகனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கும் இடப்பிரச்சனை இருந்த வந்துள்ளது. செல்வம் சொந்தமாக லோடு ஆட்டோ வைத்து வாட்டர்கேன் தொழில் செய்து வருகிறார். பிரச்சனைக்குரிய அந்த இடத்தை இருவரும் தங்களுக்குரியது என கூறி வந்துள்ளனர். இதுதொடர்பாக முறப்பநாடு போலீசிலும் புகார் உள்ளது.
இந்நிலையில் நேற்று வேல்முருகன் அங்குள்ள ஆற்றில் குளித்து விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை செல்வம் வழிமறித்து இடப்பிரச்சனை தொடர்பாக பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இதனை நம்பி அவரது வீட்டிற்கு சென்ற வேல்முருகனை செல்வம் மற்றும் அவரது உறவினர் அதே பகுதியைச் சேர்ந்த பிச்சையா மகள் அருள்ராஜ், கால்வாய் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மகேஷ் ஆகியோர் சேர்ந்து வெட்டிக் கொலை செய்துள்ளனர். பின்னர் 3 பேரும் உடலை அங்கேயே போட்டு விட்டு கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு பைக்கில் தப்பிச்சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை அம்பை செல்வதற்காக நெல்லை புதிய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த செல்வத்தை முறப்பநாடு போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. தலைமறைவாக உள்ள அருள்ராஜ், மகேஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட வழக்கறிஞர் வேல் முருகன் உடல் சென்னல்பட்டியில் தகனம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு 2வது நாளாக பதற்றம் நீடித்துள்ளதால் சென்னல்பட்டி கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
&&&