மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு புனிதமான நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசிய பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள செய்துங்கநல்லூர் பஸ் நிறுத்தம் எதிரில் நேற்றைய தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, தூத்துக்குடி மாவட்ட தலைவர் சம்சுதீன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் நாசர்அலி, மாவட்ட துணைச்செயலாளர்கள் சிக்கந்தர்மீரான், இமாம்பரீது, ஹசன் சைபுதீன், செய்துங்கநல்லூர் கிளைத்தலைவர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பேச்சாளர் முஹம்மது ஒலி சிறப்புவிருந்தனராக கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து விரிவாக பேசினார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர் குலைக்கும் வகையில் முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் நபிகள் நாயகத்தை தொடர்ந்து இழிவுபடுத்தி பேசி வரும் பாஜக பிரமுகர் கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்திட வேண்டும். தொடர்ந்து இதுபோன்று பேசி வரும் இவரை கைது செய்திடவேண்டும் என்று பலமுறை இஸ்லாமிய சமுதாயத்தின் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், காவல்துறையை தன் கைவசம் வைத்திருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இது குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது கண்டனத்திற்குரியது என்பதோடு மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
இஸ்லாமியர்களுக்கு புனிதமான நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசியதோடு, சுதந்திரமாக நடமாடும் வகையில் பாஜக பிரமுகர் கல்யாணராமனை பாதுகாத்து வரும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகிட வேண்டும். இனியாவது, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கல்யாணராமன் கைது செய்திடவேண்டும், இல்லாத பட்சத்தில் எங்களின் இது போன்ற போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மாநில துணைப்பொதுச்செயலாளர் அப்துல்கரீம் தலைமையில், சமூக நல்லிணக்கம் பாதுகாக்கப்படவேண்டும் தமிழகம் அமைதி பூங்காவாக திகழவேண்டும், கல்யாணராமன் போல ரவுடிகள் ஒடுக்கப்படவேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினர்.
இதில், மருத்துவ அணி செயலாளர் ரஷீத்காமில், செய்துங்கநல்லூர் கிளை பொருளாளர் அப்துல்கனி, துணைச்செயலாளர் கரீம்பாட்ஷா மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் திரளாக கலந்துகொண்டனர். முடிவில், மாவட்ட துணைத்தலைவர் தமீம் அன்சாரி நன்றி கூறினார்.