ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் கலாச்சார தகவல் பலகைகள் அமைக்கும் பணிகள் தீவிரம்.
உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் கடந்த 2019ம் ஆண்டு மத்திய நிதிநிலையில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
இதன்காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மத்திய தொல்லியல் துறையின் திருச்சி மண்டல இயக்குநர் அருண் ராஜ் தலைமையிலான அதிகாரிகள் ஆதிச்சநல்லூருக்கு வருகை தந்தனர். அவர்கள் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் ஏராளமான பணிகள் நடைபெற உள்ளதாகத் தெரிவித்தனர்.
முதல் கட்டமாக ஆதிச்சநல்லூரில் 100 ஆண்டுக்கால வரலாற்றில் முதல் முறையாக 3 கலாச்சார தகவல் பலகைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த கலாச்சார தகவல் பலகையில் தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் ஆதிச்சநல்லூரின் வரலாறு பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அதில் இரும்புகால ஈமச்சின்னங்கள் ஆதிச்சநல்லூர் என்ற தலைப்பில் ஆதிச்சநல்லூர் இரும்புகால தொல்லியல் இடமானது 1876 ஆம் ஆண்டில் ஜெர்மன் தலைநகரமான பெர்லினை சேர்ந்த டாக்டர் ஜாகர் என்பவரால் முதலில் வெளி உலகிற்குக் கொண்டு வரப்பட்டது. இந்தியாவைப் பொருத்தவரை குறிப்பாகத் தென்னகத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய தொல்லியல் சார்ந்த இடங்களில் ஆதிச்சநல்லூர் மிகப்பெரிய இடமாகும் என்றும், 1905, 2004, 2005ம் ஆண்டில் இந்த ஆதிச்சநல்லூரில் மிகப்பெரிய அளவில் அகழாய்வு பணிகள் நடந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதிச்சநல்லூரில் மாநில அரசு சார்பில் கடந்த ஆண்டும் இந்தாண்டும் தொல்லியல் அகழாய்வு பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.


