ஸ்ரீவைகுண்டம் தாலூகாவில் இருந்து துவங்கும் சடையனேரி கால்வாய் தூர் வாரப்படவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சடையனேரி கால்வாய் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தாமிரபரணி தண்ணீர் கடலுக்கு செல்லும் வேளையில் , தாமிரபரணி தண்ணீரை சடையனேரி கால்வாய் வழியாக திருப்பி பொன் தருவை மற்றும் புத்தன் தருவையில் தேக்கி வைக்க உருவாக்கப்பட்ட அருமையான திட்டம். இந்த திட்டம் கே.பி.கே அவர்கள் அமைச்சராக இருந்த போது வடிவமைக்கப்பட்டது. 1996 ல் பொதுப்பணித்துறை அமைச்சராக துரை முருகன் இருந்தபோது 12 அரை கோடி ரூபாய் செலவில் இத் திட்டம் விரிவு படுத்தப்பட்டது. இதற்காக இதன் தாய் கால்வாயான மருதூர்மேலக்கால் செம்மைபடுத்தப்பட்டு, கிளாக்குளம் என்னும் இடத்தில் இருந்து தனி கால்வாயில் தண்ணீரை கொண்டு சென்று கால்வாய் குளத்தில் தேக்கி வைத்து, அதன் பின் திருவரங்கபட்டி ஷட்டர் வழியாக சடையனேரி கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு செல்வார்கள். இந்த கால்வாய் உடையார் குளம், ஆனந்தபுரம் வழியாக சடையனேரியை சென்றடையும், அதில் ஒரு பிரிவு கருமேனியாற்றை கடந்து , சுப்பராயர் புரம், பொத்தகாலன் விளை வழியாக வைரவன் தருவை என்னும் பொன் தருவை மற்றும் புத்தன் தருவைக்கு கொண்டு செல்லப்படும். 1 தடவை தாமிரபரணி தண்ணீரை புத்தன் தருவையில் தேக்கி வைத்தால் சாத்தான்குளம் ,உடன் குடி பகுதியில் நிலத்தடி நீர் உப்பாவது தடுக்கப்படும். அதோடு மட்டுமல்லாமல் குடிதண்ணீர் பிரச்சனை ஏற்படாது.
இந்த திட்டம் நிறைவேற்றப்பட்ட 20 வருடங்கள் ஆகி விட்டது. அதன் பின் இந்த கால்வாய் தூர்வாரப்படவில்லை. அது மட்டுமல்லால் கிளாக்குளம் & கால்வாய் இடையே வாய்க்கால் உடைந்து தண்ணீர் வீணாக வெள்ளூர் குளத்துக்கு செல்வதை கூட பொதுப்பணித்துறை அடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மழை காலங்களில் சடையனேரி கால்வாயில் தண்ணீர் கொண்டு செல்வது கேள்விக்குறியாக உள்ளது.
இதுகுறித்து பேய்குளத்தினை சேர்ந்த விவசாய சங்க பிரமுகர் முருகேசன் கூறும் போது, சாத்தான்குளம் பகுதிக்கு பல நல்ல திட்டம் இருந்தும் கூட பொதுப்பணித்துறை அதிகாரிகளின் முறையற்ற அணுகுமுறையால் தண்ணீர் வீணாகி விடுகிறது. மணிமுத்தாறு 3 வது மற்றும் 4 வது ரீச், சடையனேரி கால்வாய் போன்ற கால்வாய்கள் தூர்வாரி ஷட்டர் பழுது பார்த்து சுமார் 25 வருடங்களை கடந்து விட்டது. ஆனால் எந்த மராமத்து பணியும் இல்லாமல் கால்வாய் அப்படி கிடக்கிறது. மழைக்காலங்களில் தண்ணீர் வரும் போது தண்ணீர் வீணாக சென்றுவிடுகிறது. எனவே உடனே சடைனேரி கால்வாயை சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் கூறினார்.
சடையனேரி கால்வாய் தூர் வாரப்படவேண்டும் என ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம் தாலூகா மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாக்ஸ் போடலாம்
மொத்த செலவுதொகை 21 கோடி
சடையனேரி கால்வாய்க்கு தண்ணீர் கொண்டு செல்லவேண்டும் என மருதூர் அணை, மருதூர் மேலக்கால்வாய், சடையனேரி கால்வாய் போன்ற இடங்களில் பணி செய்ய சுமார் 21 கோடி வரை செலவு செய்துள்ளார்கள். ஆனாலும் மழை காலத்தில் வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை முறையாக புத்தன் தருவை கொண்டு சேர்த்து வைக்க முடியவில்லை. எனவே செலவழித்த பணம் அனைத்து வீணாகி உள்ளது.