செய்துங்கநல்லூரில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் ஊரில் இருபுறமும் பேரிகார்டு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்துங்கநல்லூர் வளர்ந்து வரும் நகரமாகும். இந்தஊருக்கு அருகில் உள்ள 42 கிராம மக்கள் இவ்வூரில் தான் அத்தியாவாசிய தேவைகளுக்கு கூடுகிறார்கள். இவ்வூரில் ரயில் நிலையம், பேருந்து நிலையம், காவல் நிலையம். யூனியன் அலுவலகம் உள்பட பல அலுவலகம் உள்ளது. எனவே தினமும் 10ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இங்குகூடுகிறார்கள். வாரம் தோறும் புதன்கிழமை சுமார் 50 ஆயிரம் மக்கள் கூடும் சந்தையும் உள்ளது. இந்த ஊரின் நடுவில் நெல்லை திருச்செந்தூர் மெயின் ரோடு செல்கிறது. இந்த சாலை வழியாக திருச்செந்தூர் முக்கிய திருவிழாக்களில் பாதசாரிகள் வேறு அதிகமாக செல்வார்கள். ஆனால் ஊருக்குள் சாலை குண்டும் குழியுமா உள்ளது. எனவே இங்கு வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்தினை ஏற்படுத்துகிறது.
இதுகுறித்து செய்துங்கநல்லூரை சேர்ந்த ரமேஷ் கூறும் போது, செய்துங்கநல்லூரில் வளர்ந்து வரும் நகரமாக இருந்தாலும் கூட போக்குவரத்து அதிகமாக உள்ள காரணத்தினால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இந்த ஊருக்குள் வரும் வெளியூர் வாகனங்கள் மெதுவாக வரவேண்டும் என நெடுஞ்சாலை துறை சார்பில் எங்கேயும் போர்டு வைக்க வில்லை. வேகதடையும் இல்லை. இதனால் தினமொரு விபத்து ஏற்படுகிறது. கடந்த 1 மாதத்தில் இரண்டு உயிர்கள் பறி போய் விட்டன. எனவே காவல் துறை சார்பாக செய்துங்கநல்லூர் நகரின் இருபுறமும் பேரிகார்டு அமைத்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.
செய்துங்கநல்லூரில் விபத்தினை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


