தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட சிவகளை கிராமத்தில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள தொல்லியல் களத்தில் பழங்கால பாறை கிண்ணங்கள், இடைக்கற்கால கருவிகள், கல்வட்டங்கள், இரும்புக் கருவிகளின் கழிவுகள், முதுமக்கள் தாழிகள், கருப்பு சிவப்பு மண்பாண்ட வகைகள், எடை கற்கள், செம்பினால் ஆன பொருள்களைக் கிடைத்தன. இதனால் இந்த இடம் ஆதிச்சநல்லூருடன் இணைந்த தொல்லியல் இடமாகக் கோரி பல்வேறு ஆய்வாளர்கள் இங்கு ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் தமிழக தொல்லியல் துறையினர் சார்பில் ஆதிச்சநல்லூர் சிவகளையில் அகழாய்வு பணிகள் கடந்த மே 25ம் தேதி துவங்கியது. சிவகளை அகழாய்வு இயக்குநர் பிரபாகரன் மற்றும் தங்கதுரை தலைமையில் அகழாய்வு பணி இங்கு நடைபெற்று வருகிறது. இங்கு சுமார் 20 க்கு மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கிடைத்தன.
இந்நிலையில் சிவகளை பகுதியில் வாழ்விடங்களைக் கண்டறிவதற்காகக் கடந்த ஜீன் 28ம் தேதி துணை இயக்குனர் சிவானந்தம் வாலப்பான் பிள்ளை திரடு பகுதியில் அகழாய்வு பணி யை துவங்கி வைத்தார். தற்போது அந்த இடத்தில் 5 மண்பானை ஓடுகளில் கீறல்கள் மற்றும் குறியீடுகள் கிடைத்தன. இது ஆய்வாளர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
இது குறித்து கீழடி அகழாய்வு பற்றி அரசு ஆய்வேட்டில் கூறியிருப்பதாவது.
இந்தியாவில் கிடைக்கப்பெற்ற வரி வடிவங்கள் காலத்தால் தொன்மையானது. 4500 ஆண்டுகள் பழமையை வாய்ந்த சிந்து வெளி வரி வடிவங்களாகும். சிந்து வெளி பண்பாடு மறைந்ததற்கும் தமிழ் பிராமி எழுத்துகள் தோற்றியதற்கும் இடைப்பட்ட காலத்தில் ஒரு வரி வடிவம் இருந்தது. அவ்வரி வடிவத்தினை ஆய்வாளர்கள் குறியீடுகள் என்றும் கீறல்கள் என்றும் அழைக்கின்றனர். இவற்றைச் சாதாரண கீறல்கள் என்ற புறந்தள்ளி விட இயலாது. ஏனென்றால் இவை சிந்துவெளி வரிவடிவத்தின் நீட்சியாகவும் தமிழ் பிராமி எழுத்துகளின் முன்னோடியாகவும் இருக்க வேண்டும். சிந்து வெளி எழுத்துகள் போன்றே இவற்றைப் படித்தறிதல் முழுமை பெறவில்லை. செப்புக்கால பண்பாட்டிலும் அதன் தொடர்ச்சியாகப் பெருங்கற்கால பண்பாட்டில் இக்குறியீடுகள் கிடைக்கின்றன.
இத்தகைய குறியீடுகள் கருப்பு சிவப்பு பானை ஓடுகளில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இருப்பு காலத்தில் ஊர் இருக்கைளிலும், பெருங்கற்கால ஈமச்சின்னங்களிலும் காணப்படுகின்றன.
தமிழகத்தில் ஆதிச்சநல்லூர் ,கொற்கை, அழகன் குளம் , கொடுமணல், கரூர் உறையூர், மாங்குளம், உள்பட இடங்களில் அகழாய்வுகளில் குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. தமிழகம் மட்டுமின்றி இலங்கையில் இது போன்ற குறியீடுகள் கிடைத்துள்ளன. இந்தியத் துணை’கண்டத்தில் தமிழகத்தில் இவை பரந்த அளவில் சேகரிக்கப்பட்டுள்ளது . அதிலும் குறிப்பாகத் தென்னிந்தியாவில் கண்டெடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் 75 சதவீதம் தமிழகத்தில் கிடக்கப்பெற்றவை என்பது சிறப்பாகும்.
தமிழ் பிராமி’கு முந்தைய வரிவடிவமாக விளங்கிய குறியீடுகள் பெருங்கற்கால மற்றும் இரும்பு’ கால ம’க்களின் எண்ணத்தை பிரதிபலி’க்கும் எழுத்துவடிவமாகும். கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்படும் இத்தைய கீறல்கள் பொறித்த 1,001 பானை ஓடுகள் இரும்புக்காலம் தொட்டு இப்பகுதியில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதை உணர்த்துகின்றது.
என்று அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்படுகிறது. எனவே சிவகளையில் முதல் முதலில் ஆய்வு நடக்கும் போது இந்த குறியீடுகள் கிடைத்திருப்பது சிவகளை முக்கியத்துவத்தினை மிகவும் உணர்த்துகிறது.
1876 ல் ராபட் புருட் என்பவர் செய்த ஆய்வில் சாயர் புரம் தேரிக்காட்டில் பெருங்கற்கால கருவிகளைக் கண்டெடுத்தார். அதன் வயதை 10 ஆயிரம் ஆண்டு பழமையானது எனக் கண்டறிந்தார். எனவே கீழடி ஆய்வில் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் இதுபோன்ற கீறல்கள் மற்றும் குறியீடுகள் பெருங்கற்காலம் மற்றும் இரும்புக் கால மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கிறது எனக் குறிப்பிட்டு உள்ளார்கள். எனவே இந்த குறியீடு மிக முக்கியவத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது.
இதனால் இங்கு ஆய்வு செய்பவர்களும், ஆதிச்சநல்லூர் சிவகளை அனுதாபிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


