தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள உழக்குடியில், சுமார் 3000 ஆண்டுகளுக்கு பழமையான 14 அடி உயரமுள்ள குத்துக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறையில் ஆதிச்சநல்லூர்,சிவகளை ஆய்வு நடக்கும் வேளையில் வெளியே தெரிந்த இந்த குத்துகல் வரலாற்று முககியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
வல்லநாடு அருகே உள்ள உழக்குடியை சேர்ந்தவர் ஆறுமுக மாசான சுடலை. இவர் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரியில் வரலாற்று மாணவர். முனைவர் சி.சசிகலா வழிகாட்டுதலின்பேரில் இவர் முனைவர் பட்ட ஆய்வை மேற் கொண்டு வருகிறார் .உழக்குடி வடக்கு புறமாக அமைந்துள்ளதுதான் உழக்குடிகுளம். இந்த குளத்திற்கு அருகில் தென்மேற்கு திசையில் களியங்காடு உள்ளது. இக்காட்டில் தான் விவசாயி சு.அர்ச்சுணன், ஜெ.முருகன். ஆகியவர்களின் உதவியோடு முன்னோர்கள் சொன்ன வார்த்தைகளைக் கருத்தில் கொண்டு முதுமக்கள் தாழிகளைத் தேடினார் ஆறுமுக மாசான சுடலை. நீண்ட தேடலுக்கு பிறகு 1 முதுமக்கள் தாழியை கண்டுபிடித்தார். .இவர் தனது சொந்த ஊரில் கண்டெடுத்த முதுமக்கள் தாழிகள் குறித்து கட்டுரை எழுதி கல்லூரி மூலமாக வெளி கொண்டு வந்துள்ளார். இவ்வூரில் பாறையில் வரையப்பட்ட ஓவியம் ஒன்றைக் கண்டுபிடித்தார். உழக்குடியில் இருந்து கலியாவூர் செல்லும் சாலையின் ஓரமாக பல ஆண்டுகளுக்கு முன்பு ஓடை தோண்டினார்கள். அப்போது பல வகையான மட்பாண்டங்கள் உடைந்த நிலையில் வெளிப்பட்டன. தற்போது அவ்விடத்தில் மழை நீர் சேகரிப்பு தடுப்பணை கட்டுவதற்கு குழி தோண்டியபோது பல தொன்மையான பொருட்கள் வெளிப்பட்டன. அப்பொருட்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்ததாகும். கருப்பு&சிவப்பு நிற மட்பாண்டம், பளபளப்பான கருப்பு நிற மட்பாண்டம், உள்புறம் கருப்பு&வெளிப்புறம் சிவப்பு நிற மட்பாண்டம், மண்ணாலான நீர் வடிகட்டி, விளையாட்டுப் பொருட்கள், பானைகளுக்கு கீழ் வைக்கப் பயன்படுத்திய பரிமனைகள் ஆகியவைகள் இவருடைய ஆய்வில் கிடைத்துள்ளன.
எனவே இதுபோன்று கிடைத்த பொருள்களை மீண்டும் மூடி விட்டனர். எனவே பழமையான தொல் பொருட்கள் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் அப்பொருட்களை தொல்லியல் துறையில் பதிவு செய்வதற்கான வழிமுறைகள் தெரிவதில்லை. ஆகையால் தொல்பொருட்களைப் பாதுகாத்தல் மற்றும் பதிவு செய்யும் முறை பற்றி விழிப்புணர்வுகளுக்காக கருத்தரங்குகளை அனைத்து பள்ளி கல்லூரிகளில் நடத்துமாறு அவர் அரசுக்கு கோரிககை வைத்திருந்தார்.
இதற்கிடையில் உழக்குடியில் உள்ள காட்டுபகுதியில் தொல்லியல் துறைக்கு சம்பந்தப்பட்ட நெல்லை மாவட்டம் மருகால் தலை சமணர் படுகைக்கு அருகில் 1 கிலோ மீட்டர் தொலைவில் 13 அடி உயரமான நடுகல் ஒன்றை உழக்குடி விவசாயிகள் மூலமாக கண்டுபிடித்தார்.
இந்த கல் நடுக்காட்டுக்குள் இருந்த காரணத்தினால் வெளியே தெரியாமல் இருந்தது. இதற்கிடையில் ஆய்வு மாணவர் ஆறுமுக மாசான சுடலை இதை கண்டு தங்கள் கல்லூரியில் கூற, தினசரி பத்திரிக்கையில் இந்த செய்தி வெளிவந்தது.
இதற்கிடையில் ஆதிச்சநல்லூரில் அகழாய்வில் ஈடுபட்டுகொண்டிருந்த ஆகழாய்வு இயக்குனர் பாஸ்கர், தூத்துக்குடி மாவட்ட தொல்லியல் அலுவலர் லோகநாதன் மற்றும் ஆய்வு மாணவர்கள் அடங்கிய குழுவினர் உழக்குடிக்கு சென்றனர். அவர்கள் உழக்குடி குளத்து கரையில் வாகனத்தினை விட்டு விட்டு சுமார் 1 கிலோ மீட்டர் காட்டுக்குள் நடந்து சென்றனர். அங்கு இருந்த அந்த நடுக்கல்லை பார்வையிட்டனர்.
மேலும் உழக்குடியில் உள்ள முதுமக்கள் தாழிகள் உள்பட பல இடங்களில் பார்வையிட்ட அவர்கள், முறைப்படி தொல்லியல் ஆணையருக்கு அறிக்கை அனுப்பிவைப்பதாக கூறினர்.
இதுகுறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும்போது, மதுரை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கின் படி தற்போது ஆதிச்சநல்லூர், சிவகளை, தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள 37 இடங்களில் ஆய்வுசெய்ய தமிழக தொல்லியல் துறை ஏற்பாடு செய்துள்ளது. தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள 37 இடங்களில் பல இடங்கள் தற்போது அகழாய்வு செய்ய முடியாமல் பொதுமக்கள் வீடுகளை கட்டி விட்டனர். சிவகளையில் கூட அகழாய்வு செய்ய கூடிய பல இடங்கள் சரல் மண் அள்ளுயதால் பாதிக்கப்பட்டு விட்டது.
ஆனால் உழக்குடி அகழாய்வு களம் மருகால் தலை சமணர் படுகையில் இருந்து, உழக்குடி கலியாவூர் பகுதியில் வரை முதுமக்கள் தாழிகள் பல புதைந்து கிடக்கிறது. தற்போது நடுகல்லும் அகழாய்வு இயக்குனர் பார்வைக்கு வந்து விட்டது. எனவே தற்போது தாமிரபரணி கரை ஆய்வில் உழக்குடியை சேர்த்து ஆய்வு செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
உழக்குடியை ஆய்வு செய்யும் போது கீழடி , ஆதிச்சநல்லூர், சிவகளை போல உழக்குடியும் முக்கிய தொல்லியல் களமாகும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. மருகால் தலை சமணர் படுகை அருகே இந்த தொல்லியல் களம் இருப்பதால் மேலும் பல அபூர்வ தகவல் கிடைக்கும் என தொல்லியல் ஆர்வலர்கள் நம்புகிறார்கள்.


