தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட சிவகளை கிராமத்தில் அகழாய்வின் போது அடுக்கடுக்காக முதுமக்கள் தாழிகள் கண்டு எடுத்துள்ளனர். இன்று 15 ந்தேதி இரண்டு முதுமக்கள் தாழிகள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டதால் மேலும் அகழாய்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
சிவகளையில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள தொல்லியல் களத்தில் பழங்கால பாறை கிண்ணங்கள், இடைக்கற்கால கருவிகள், கல்வெட்டங்கள், இரும்புக் கருவிகளின் கழிவுகள், முதுமக்கள் தாழிகள், கருப்பு சிவப்பு மண்பாண்ட வகைகள், எடை கற்கள், செம்பினால் ஆன பொருள்களை கிடைத்துள்ளன.
இந்நிலையில் தமிழக தொல்லியல் துறையினர் முதல்முதாலாக ரூபாய் 32 லட்சம் மதிப்பீட்டில் சிவகளை அகழாய்வு பணிகளை மேற்கொண்டனர். கடந்த மே 25ம் தேதி அகழாய்வு பணிகள் துவங்கியது. சிவகளை அகழாய்வு இயக்குநர் பிரபாகரன் தலைமையில் இந்த அகழாய்வு பணியானது நடைபெற்று வருகிறது.
கடந்த 5ம் தேதி சிவகளை அகழாய்வு பணியில் 2000 ஆண்டுகள் பழமையான 2 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் உற்சாக மடைந்த ஆய்வாளர் மேலும் இரண்டு குழிகளை தோண்டினர்.
ஆணையாளர் உத்தரவின் பேரி தற்போது கூடுதலாக பணியாளர்களும், மிக அழமாக குழிகளும் தோண்டும் பணியும் நடந்தது வருகிறது. 40 பணியாளர்களும், 10 ஆய்வு மாணவர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்றைய தினம் கூடுதலாக 2 முதுமக்கள் தாழிகளும், உடைந்த நிலையில் 5 முதுமக்கள் தாழிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முன்னோர் காலத்தில் வாழ்ந்த மக்கள் இறந்தவர்களை புதைப்பதற்காக பாறை பிளவுகளில் மனிதனின் உடலை முதுமக்கள் தாழியில் வைத்து புதைத்துள்ளனர். தற்போது கிடைத்த முதுமக்கள் தாழிகள் அனைத்தும் பாறை பிளவுகளிலும், மேற்பரப்பிலும் காணப்படுகிறது. 2004 ன் ஆய்வு நடந்த போது ஆதிச்சநல்லூரில் மூன்று அடுக்குகளில் முதுமக்கள் தாழிகள் காணப்பட்டது. அதுபோலவே சிவகளையிலும் 2 அடுக்குகளிலும் முதுமக்கள் தாழிகள் தற்போது தென்படுகின்றன. எனவே ஆதிச்சநல்லூரை போன்றே சிவகளை நாகரீகமும் பெரிதாக போற்றப்படும் என சிவகளை தொல்லியல் அனுதாபிகள் நம்புகின்றனர்.
சிவகளையில் பாதுகாப்பு இல்லாமல் பல இடங்களில் முதுமக்கள் தாழிகள் உடைக்கப்பட்டு விட்டன. இதனால் கிடைக்கும் பொருள்களை தொல்லியல் துறையினர் எவ்வித சேதமும் இன்றி வெளியில் எடுத்திடும் பணிகளை தொடங்கி உள்ளனர். மேலும் முதுமக்கள் தாழியில் இறந்தவர்களின் எலும்புக்கூடுகள் கிடைக்கும் என்பதால் மிகவும் நுட்பகமாக எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சிவகளையில் நடைபெறும் அகழாய்வில் கிடைக்கும் பொருட்கள் மூலம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் நாகரீகம் வெளிப்படும் என்பது வரலாற்று ஆர்வலர்களின் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது


