வல்லநாடு தாமிரபரணி பழைய பாலம் நினைவு சின்னமாக்கப்படுமா என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாமிரபரணி ஆற்றில் வல்லநாடு அருகே பக்கப்பட்டி ஆற்றுபாலம் கடந்த 1956 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஒரு காலத்தில் இந்த வழியாக தூத்துக்குடி செல்பவர்கள் ஆற்றுக்குள் இறங்கி தான் சென்றுள்ளனர். மாட்டு வண்டியில் செல்பவர்கள் கூட ஆற்றில் நீந்தி தான் மறு கரைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஒரு தடவை இந்த வழியாக மகாத்மா காந்தி வந்த போது கூட வில்லுவண்டியோடு அவரை தூக்கியபடி ஆற்றை கடந்து விட்டார்கள் என இப்பகுதி மக்கள் பசுமை நினைவாக பேசிகொள்வார்கள். இதற்கிடையில் இந்தியா சுதந்திரமடைந்தது.
திருநெல்வேலி மாவட்ட ஜில்லா போர்டு தலைவராக இருந்த கோபாலசாமி நாயக்கர் இப்பகுதியில் பாலத்தினை கட்ட ஏற்பாடு செய்தார். மிக பிரமாண்டமாக கட்டப்பட்ட இந்த பாலம் சுமார் 63 வருடங்களை தாண்டியும் தரமாகவே இருந்தது. ஆனால் நெல்லை தூத்துக்குடி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கம் காரணமாக ஒரு வழிச்சாலை பாலமான இந்த பாலத்தினை கடக்க முடியாமல் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.சில வேளைகளில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து வரும் லாரிகளால் பாலத்தில் வாகனங்கள் சிக்கி கொள்ளும் போது பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இந்த பகுதியில் எப்போதுமே முறப்பநாடு போலிசார் நிறுத்தப்பட்டு இருப்பார்கள்.
புதிய பாலம் இந்த இடத்தில் கட்டவேண்டும் என பொது மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையில் இந்தியா முழுவதும் நான்குவழிச்சாலை திட்டப் பணி அமல் பட்டது. அந்த சமயத்தில் நெல்லை கே.டி.சி. நகர் நான்குவழிச்சாலை மேம்பாலம் அருகே துவங்கி தூத்துக்குடி துறைமுகம் வரை 47 கி.மீ தூரத்திற்கு நீளும் புதிய சாலை திட்டப்பணி கடந்த 2004ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரூ232 கோடி திட்ட மதிப்பில் தொடங்கிய நிலையில் பாதி பணி கூட நிறைவு பெறாத நிலையில் ஒப்பந்தக்காரர் தனக்கு பேசப்பட்ட தொகை கட்டுப்படியாகாததால் கடந்த 2007ல் பணியை துவங்காமல் விட்டுச் சென்று விட்டார்.
இதனால் வழி நெடுக பாலங்கள் மற்றும் சாலைகள் அறைகுறையாக விட்டுவிட்டுப் போடப்பட்டிருந்தது. இந்த அறைகுறை வாகன ஓட்டிகள் செல்ல சிரமப்பட்டனர். அவ்வப்போது விபத்துக்களும் நடக்கத் தொடங்கின.
பாதியில் பணி நிறுத்தப்பட்டது தொடர்பாக வழக்கும் இருந்த காரணத்தினால் பணியை தொடர முடியாத நிலை நீடித்தது. இந்த நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு விடுப்பட்ட பணிகளுக்கு திட்டம் தயாரிக்கப்பட்டு மீண்டும் கூடுதல் நிதி ஒதுக்கினர்.
இதையடுத்து சாலை அமைக்கும் பணிகள் மும்முரமாக தொடங்கின. மொத்தம் ரூ320 கோடியிலான புதிய திட்ட மதிப்பில் நடைபெற்று வந்த சாலைப்பணியோடு வல்லநாடு பக்கப்பட்டி ஆற்றில் புதிய பாலமும் கட்டப்பட்டது. அதன் பின் போக்குவரத்தும் துவங்கப்பட்டது.
புதிய பாலம் கட்டப்பட்டு 5 வருடங்களிலேயே பெரிய பள்ளம் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கபட்டது. தொடர்ந்து பள்ளத்தினை சரி செய்வதற்கு சுமார் 1 வருடங்கள் கடந்துவிட்டது.
இந்த சூழ்நிலையிலும் பழைய பாலம் மிக பிரமாண்டமாக காணப்படுகிறது. போக்குவரத்து இல்லாமல் இந்த பாலம் தற்போது பொழிவிழுந்து கிடக்கிறதே தவிர. பாலத்தின் தரம் குறையவில்லை.
இது குறித்து நாட்டார்குளம் எஸ்.கே. திருப்பதி கூறும்போது, தாமிரபரணி ஆற்றில் கட்டப்பட்ட வல்லநாடு பக்கப்பட்டியில் கட்டப்பட்ட நான்கு வழி பாலம் சிதிலிமடைந்தாலும், மிகவும் பழமையான பாலம் மட்டும், மிக தரமாய் அப்படியே உள்ளது. இந்த பாலம் சுதந்திர இந்தியாவின் ஆரம்ப காலத்தில் கட்டப்பட்ட பாலம். நமது முன்னோர்கள் கட்டிய பாலம். இந்த பாலத்தினை நினைவு சின்னமாய் அறிவித்து பாதுகாக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் இந்த பாலத்தில் போக்குவரத்து இல்லாமல் இருந்தால் வருங்காலத்தில் பாலமே பாழடைந்து, கயவர்கள் கூடும் இடமாக மாறிவிடும். எனவே நெல்லை சந்திப்புக்கு வல்லநாடு வழியாக செல்லும் டவுண் பஸ் அனைத்தையும் இந்த பாலம் வழியாக அனுப்பி பக்கபட்டியில் ஆள் ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
பாலத்தினை பராமரிக்க உடனே மராமத்து பணியில் ஈடுபடவேண்டும் என இந்த பகுதியில் உள்ள பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.