தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் தென் சிதம்பரம் என போற்றப்படும் சிவன் கோயிலில் ஆருத்ரா வைபவ திருநடன தரிசன திருவிழா 1 ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
தென்தில்லை என்று போற்றப்படும் சிவகாமி சமேத பதஞ்சலி வியாக்கரபாதீஸ்வரர் கோயில் மிகவும் பழமையானது. சிதம்பரத்தில் நடராஜர் திருநடன காட்சியை காட்டியது போலவே இங்கேயும் திருநடன காட்சியை காட்டுகிறார் என்பது ஐதீகம். எனவே சிதம்பரத்தினை போலவே இங்கேயும் 10 நாள் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. இதையட்டி வருகிற 1 ந்தேதி புதன் கிழமை முதல் 10 நாள்கள் காலையும் மாலையும் யாகசாலை பூஜைகளும் சுவாமி திருவீதி உலா எழுந்தருளும் வைபவமும் திரு நடன தீப ஆராதனை தரிசனமும் நடைபெற உள்ளது. இதையட்டி 31 ந்தேதி காலை 7.30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்ய பூஜை, கணபதி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெறவுள்ளது.
மாலை 5 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, ஆவாஹந திக் பலி, ரட்சா பந்தனம், கொடி பிரதட்சணம், தீபாராதனை நடைபெறவுள்ளது
1 ந்தேதி காலை 9 மணிக்கு முதல் நாள் யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகிறது. அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, விசேஷ ஹோமம், கொடிபட்டம் அபிசேகம், கொடியேற்றம், கொடிமரம், அபிசேகம், பஞ்சமூர்த்தி தீபாராதனை ,கொடி மரம் தீபாராதனை நடைபெற உள்ளது. மாலை 6 மணிக்கு மேல் முதல் நாள் யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகிறது. சுவாமி திருக்கோவில் உள்பிரகார வீதி உலா எழுந்ருளல் தீபாரதனை நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை ஆன்மீக பேரரவை செய்து வருகிறது.