தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் ஒன்றிய அலுவலக வளாகத்தில் அங்கன் வாடி பணியாளர்கள் தீடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித்தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கன் வாடி பணியாளர்களுக்கு தபால் ஓட்டு போடுவதற்காக கடந்த 23, 24, 25 ஆகிய மூன்று தேதிகள் ஓதுக்கப்பட்டது. ஆனால் அந்த தேதிகளில் கருங்குளம் ஒன்றியத்தில் உள்ள அங்கன் வாடி பணியாளர்கள் ஓட்டு போட இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு தேர்தல் பணி ஆணை 26 ந்தேதி கையில் கிடைத்தது. ஆனாலும் அவர்கள் 27 ந்தேதி தேர்தல் பணிக்கு செல்ல வேண்டியது இருந்த காரணத்தினால் அவர்களால் தபால் ஓட்டு அளிக்க வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது.
இதற்கிடையில் கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அங்கன் வாடி பணியாளர்களுக்கு தபால் ஓட்டுகள் வழங்கவில்லை என்று கூறி செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் 100 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் எங்களுக்கு தபால் ஓட்டுகள் வழங்க வேண்டும் என்று கோஷமிட்டனர். சுமார் 3 மணி அளவில் நடந்த இந்த போராட்டம் 5 மணி வரை தொடர்ந்தது. அதன்பின்னர் அவர்கள் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன், ஸ்ரீவைகுண்டம் வட்டாச்சியர் சந்திரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து சத்துணவு ஊழியர்கள் கூறும்போது, எங்களுக்கு தபால் ஓட்டு வேண்டும் என்று கேட்ட போது அதிகாரிகள் நீங்கள் பணிக்கு செல்லும் ஆணையின் நகலை தந்தால் மட்டுமே தபால் ஓட்டுகள் தர முடியும் என்று கூறிவிட்டனர். அதன்பின்னர் தொடர்ந்து தேர்தல் பணிகள் இருந்ததால் எங்களால் வாக்கு போட முடியவில்லை. எனவே இன்று தபால் ஓட்டுகளுக்கான படிவத்தை கேட்டோம். தர மறுத்து விட்டனர். எனவே தான் இந்த போராட்டம் நடைபெறுகிறது என்று கூறினார்கள்.
அங்கன் வாடி பணியாளர்கள் தபால் வாக்குகளை உடனே செலுத்த ஆவண செய்ய வேண்டும் என அங்கன் வாடி பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


