செய்துங்கநல்லூர் பிள்ளையார் கோயில் தெருவில் வசித்து வருபவர் சிதம்பரம் (59). இவர் சுமை தூக்கும் தொழிலாளி. தனது மனைவி பிரேமா மற்றும் குழந்தைகளுடன் செய்துங்கநல்லூரில் வசித்து வந்தார். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அவர் சுமை தூக்க சென்ற போது கால் இடறியது. அதில் அவர் வலது காலில் காயம் ஏற்பட்டது. அந்த காயத்திற்கு மருந்து போட்டு கொண்டிருக்கும்போது தீடீரென்று கால் உணர்ச்சியற்று போனது. தொடர்ந்து நடக்க முடியவில்லை. இதறக்கிடையில் ஆத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது காலுக்கு வரும் ரத்த குழாய் துண்டிக்கப்பட்டு விட்டது. இதனால் கால் செயலற்றுபோய் விட்டது. உடனடியாக கண்டுபிடித்து ஆபரேசன் செய்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம். தற்போது எல்லாம் கை மீறி போய் விட்டது வலது காலை எடுத்தால் மட்டுமே உயிரை காப்பாற்ற முடியும் என கூறினர். இதனால் இவரும் இவர் குடும்பத்தினரும் அதிர்ந்தனர். வேறு வழியில்லாமல் அவரது வலது காலை எடுத்துவிட்டனர்.
இதனால் மாற்றுதிறனாளியாக மாறிவிட்டார் சுமை தூக்கும் தொழிலாளியான சிதம்பரம். இவரால் குடும்பத்துக்கு வருமானம் கிடைக்காமல் போன உடன் மனைவி பிரேமா பீடி சுற்றிதான் குடும்பத்தினை காப்பாற்றியும், இவரது மருத்துவ செலவையும் சரி செய்து வந்தார். இதற்கிடையில் இவர் எம்.ஜி.ஆர் அதிமுக கட்சி ஆரம்பித்ததில் இருந்து கட்சியின் தீவிர தொண்டராக இருந்து வருகிறார். அந்த நம்பிக்கையும் ஆளும் அதிமுக கட்சியிடம் தொடர்ந் மனு கொடுத்து வந்தார். பல முறை தனக்கு மோட்டார் பொறுத்திய மூன்று சக்கர சைக்கிள் வேண்டும் என கோரிக்கை வைத்தும் இது வரை நடவடிக்கை எடுக்க வில்லை.
இது குறித்து சிதம்பரம் கூறும்போது, நான் அதிமுகவின் தீவிர தொண்டன். எனவே எனக்கு அரசு சார்பில் மூன்று சக்கர சைக்கில் வழங்கினால், அதில் தெருதெருவாக சென்று காய்கறி வியாபாரம் பார்த்து பிழைத்து கொள்ளலாம் என நினைத்தேன். இதற்காக கடந்த 8 ஆண்டுகளாக முயற்சி செய்துவருகிறேன். அம்மா முதலமைச்சராக இருக்கும் போது எனக்கு மூன்று சக்கர மோட்டார் பொறுத்திய சைக்கிள் தர அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. அதிகாரிகள் விசாரித்து விட்டு சென்றார்கள். ஆனால் சைக்கிள் வழங்கும் முன்பே அம்மா இறந்து விட்டார். அதன் பிறகு என்னை அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளவே இல்லை. நானும் மனு கொடுத்துக்கொண்டே இருக்கிறேன். கடந்த மாதம் பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க செய்துங்கநல்லூர் வந்த முதலமைச்சரிடம் இது குறித்து மனு கொடுத்தேன். என்னோடு மனுகொடுத்தவர்களுக் கெல்லாம் பதில் வந்துள்ளது. என் மனுவுக்கு பதில் இல்லை. அதிமுகவின் 25 வருட தீவிரமான தொண்டன் எனக்கே இந்த நிலையா என அவர் குமுறினார்.
காலை இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காமல் எப்படியும் தொழில் பார்த்து பிழைத்துக் கொள்வேன் என கூறும் அதிமுக அடிமட்ட தொண்டன் சிதம்பரத்துக்கு அதிமுக அரசு கருணை காட்டுமா என பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழும்பியுள்ளது.