தாமிரபரணி ஆற்றில் திடிர் வெள்ளப் பெருக்கால் பாசன குளங்கள் நிரம்பாத நிலையில் ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து வினாடிக்கு 5000 கனஅடி தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது.
நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்ந்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர் அணை கீழக்கால் வாய்காலில் இருந்து பாசன குளங்களுக்காக 400கனஅடி தண்ணீரும் மேலக்காலில் இருந்து 1500கனஅடி தண்ணீரும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதைபோல், ஸ்ரீவைகுண்டம் அணை வடகாலில் இருந்து 303 கனஅடி தண்ணீரும் தென்காலில் இருந்து 1230 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மருதூர் அணையில் இருந்து 5250 கனஅடி தண்ணீரும் கடைசி அணைக்கட்டு அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீரும் வீணாக கடலுக்கு செல்கிறது.
தண்ணீர் வரத்து அதிகரித்து வரும் நிலையில் ஸ்ரீவைகுண்டம் வியாபாரிகள் சங்கத்தினர்களும் மக்கள் நலச்சங்கத்தினர்களும் இணைந்து அணையில் தேங்கியிருந்த அமலைச் செடிகளை அகற்றி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி ஆற்றில் மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணையும் பாசன வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள 53 குளங்களும் மிகவும் தூர்ந்து போய் உள்ளதால் அதன் முழுகொள்ளவை எட்டமுடியாத நிலை உள்ளது. தாமிரபரணி ஆற்றில் சிறிது தண்ணீர் வரத்து அதிகரித்ததாலும் பாசன குளங்களில் தண்ணீரை சேமிக்க முடியாமல் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது.
இதனால் 3 போக சாகுபடி செய்த விவசாயிகளுக்கு தற்போது ஒருபோகத்திற்கே தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீர் வீணாக கடலுக்கு செல்லாத வகையில் பாசன குளங்களையும் அணையையும் தூர்வாரிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
ஸ்ரீவைகுண்டம் அணையின் உட்பகுதியில் அமலைச் செடிகளும் கல்தூண்களில் அரசமர செடிகளும் அதிகரித்து காணப்பட்டது. அவற்றை அகற்ற வேண்டும் என பொது பணித்துறையினரிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் தாசில்தார் சந்திரன் மூலமாக, தொடர்ந்து, அமலைச் செடிகளை அகற்றி வருகின்றனர். இனிவரும் காலங்களில் அமலைச் செடிகள் அணையில் நிரந்தரமாகதேங்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஸ்ரீவைகுண்டம் மக்கள் நலச்சங்க தலைவர் பிச்சைகண்ணன் கூறும் போது,
தாமிரபரணி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வரும் காலங்களில் எல்லாம் 53பாசன குளங்களில் தண்ணீர் நிரம்பாத நிலையிலும் வினாடிக்கு 15ஆயிரத்திற்கும் மேலாக வீணாக தண்ணீர் கடலுக்கு செல்கிறது.
இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தண்ணீர் வினாக கடலுக்கு செல்லாத வகையில் பாசன குளங்களை தூர்வாரிட வேண்டும். உபரி நீரை சேமித்து தண்ணீர் இல்லாத வரட்சி பகுதியாக சாத்தான்குளம் பகுதிகளுக்கு தண்ணீரை திரும்பிவிடும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார் அவர்.