நெற்பயிரில் இலை சுருட்டுப் புழு கட்டுப்படுத்த வழிமுறைகள்.
கருங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அறிக்கை.
கருங்குளம் வட்டார நெற்பயிர் சாகுபடி செய்யும் விவசாய பெருமக்களுக்கு கருங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
கருங்குளம் வட்டாரத்தில் நெல்பயிர் 1200 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. தொடர்ந்து நடவுப்பணி நடைபெற்று வருகின்றது. தற்போது 10 முதல் 30 நாட்களான வளர்ச்சி நிலையில் பயிர்கள் உள்ளது. நெற்பயிரில் ஆங்காங்கே இலை சுருட்டு புழு தாக்குதல் தென்படுகின்றது.
இலைகள் நீள்வாக்கில் மடிக்கப்பட்டிருக்கும். புழுக்கள் இலைகளின் பச்சை நிற திசுக்களை சுரண்டுவதால் இலைகள் வெண்மையாக மாறி காய்ந்துவிடும். தீவிர தாக்குதலின் போது முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல் காட்சி அளிக்கும். இலைகள் நீள்வாட்டில் சுருண்டு, புழுக்கள் அதனுள்ளே இருந்து விடும்.
இந்த இலை சுருட்டு புழு தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகள் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை முறைகளை மேற்கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் நெற்பயிரில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்திட விளக்கு பொறி வயலில் வைத்து தாய் அந்து பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்து அதனை சேகரித்து அழிக்கலாம். நடவு வயலில் வரப்புகளை சுத்தமாக வைப்பதின் மூலம் பூச்சிகளின் தாக்கத்தை குறைக்கலாம்.
மேலும் டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் என்ற முட்டை ஒட்டுண்ணி அட்டைகளை ஒரு ஏக்கருக்கு 2 சி.சி என்ற அளவில் வயலில் ஆங்காங்கே கட்டி பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். மேலும் வேம்பு பூச்சிக் கொல்லியான அசாடிராக்டின் 1மூ நுஊ – 40மி.லி என்ற அளவில் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு பயிர்களில் நன்குபடும்படி தெளித்து இலை சுருட்டு புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
மேலும் பூச்சித் தாக்குதல் குறிப்பிட்ட பொருளாதார சேத நிலையினை விட அதிகம் தென்பட்டால் விவசாயிகள் ஏக்கருக்கு பின்வரும் பூச்சி கொல்லி மருந்துகளான குளோரான்ட்ரானிலிப்பரோல் 6 மி.லி அல்லது தையோமீத்தாக்சோம் 4 மி.லி அல்லது இமிடோகுளார்பிரிட் 6 மி.லி என்ற அளவில் இதில் ஏதேனும் ஒரு மருந்தினை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு காலை அல்லது மாலை வேளைகளில் பயிர்களில் நன்கு நனையும்படி தெளித்து இலை சுருட்டு புழு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம் என கருங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் தெரிவித்துள்ளார்.


