கொரனா காலத்தில் நிறுத்திய
அரசர்குளம்- கால்வாய் பேருந்துகள் இயக்கம்.
கிளாக்குளம்- முத்தாலங்குறிச்சி பேருந்தை மீண்டும் இயக்க
பொதுமக்கள் கோரிக்கை
கொரனா காலத்தில் நிறுத்திய அரசர்குளம்& கால்வாய் பேருந்தை மீண்டும் அரசு போக்குவரத்து கழகத்தினர் இயக்கினர். கிளாக்குளம் முத்தாலங்குறிச்சிக்கு முழுநேர பேருந்தை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருங்குளம் அருகே உள்ள இராமனுஜம்புதூர் மற்றும் நாகல்குளம், இராமனுஜம்புதூர் அரசர்குளம், கிளாக்குளம், கால்வாய் ஆகிய கிராமங்களுக்கு நான்கு அரசு பேருந்து திருநெல்வேலி சந்திப்பில் இருந்து இயக்கப்பட்டது. இந்த நான்கு பேருந்துகளும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கொரனா நோய் காரணமாக நிறுத்தப்பட்டு விட்டது. இதற்கிடையில் கடந்த மாதம் இராமனுஜம்புதூர் நாகல் குளம் பேருந்து மட்டும் மீண்டும் இயக்கப்பட்டது. ஆனால் மற்ற மூன்று பேருந்துகளும் இயக்கப்படவில்லை. இராமனுஜம்புதூர் பகுதியில் இரண்டு பேருந்துகள் தினமும் 7 வேளை இயக்கப்பட்டது. ஆனால் ஒரு பேருந்து மட்டும் இந்த வழிதடத்தில் இயககி விட்டு அரசர்குளம் பேருந்தை இயக்காமல் இருந்தனர். இந்த பேருந்து மூலமாக அரசர்குளம், இராமனுஜம்புதூர், கிளாக்குளம், வல்லகுளம், தெற்குகாரசேரி, தாதன்குளம், வள்ளுவர்காலனி ,சேரகுளம் உள்பட பல கிராமத்து மக்கள் அத்தியவாசிய தேவைகளுக்கு வெளியே வர இயலாமல் தவித்து வருகின்றனர். அரசர்குளம், கிளாக்குளம், கால்வாய் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என்று போக்குவரத்து அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் கூறியும் நடவடிக்கை இல்லை. எனவே உடனடியாக இந்த மூன்று பேருந்தையும் இயக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் அரசர்குளம் இராமனுஜம்புதூர் பேருந்து இயககப்பட்டுள்ளது. நேற்று முதல் கால்வாய் பேருந்து இயக்கப்பட்டு விட்டது. மேலும் கிளாக்குளத்திற்கு நிறுத்தப்பட்ட பேருந்தையும், முத்தாலங்குறிச்சிக்கு இயங்கி கொண்டிருக்கும் பேருந்தை முழுநேர பேருந்தாக உடனே இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
–


