தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ளது மருதூர் அணை. தாமிரபரணியில் 7 வது அற்புதமான அணை. இந்த அணையை பூதம் கட்டிய அணை என்பார்கள். சுமார் 4000 அடி நீளமாக வளைந்து நெளிந்து செல்லும் இந்த அணை கண்போரை கண்கவர செய்கிறது. இந்த அணையில் சிறு குழந்தைகள் கூட நின்ற குளிக்கலாம். அந்த அளவுக்கு அற்புதமாக உள்ளது. இந்த பகுதியில் ஒரு குறுநில மன்னர் வாழ்ந்தாகவும், அவர் இந்த பகுதியில் அணைக்கட்ட முயற்சி செய்தாகவும், அது முடியாமல் போகவே, யார் அணைகட்டி தருகிறார்களோ அவர்களுக்கு தோகை வல்லி, மருதவல்லி என்ற தனது இரு மகளை கட்டி தருவதாகவும் தண்டோரா போட்டார். இதை கேள்வி பட்ட வயதான முதிய சிவனடியார் ஒருவர் தன்னுடைய தவவலிமையால் இரவோடு இரவாக பூத படை மூலமாக மணக்கரை மலையில் இருந்து கல்களை தூக்கி வந்து மருதூர் அணையை கட்டி முடித்து விட்டார். மறுநாள் சிவனடியார் பெண் கேட்டு அரண்மனைக்கு சென்றார். இவரை மணக்க மணமில்லாத தோகை வல்லியும் , மருதவல்லியும் இதே அணையில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்கள். இவர்களுக்கான கோயில் மருதூர் அணையில் உள்ளது. தற்போதும் மழை இல்லையென்றால் விவசாயிகள் இங்கு வந்து பொங்கலிட்டால் மழை வரும் என்பது ஐதீகம். இந்த அணை வளைந்து நெளிந்து செல்வது பார்போர் மனதை கொள்ளை கொள்வதாக உள்ளது. இந்த அணைக்கு பாளையங்கோட்டை சீவலப்பேரி வழியாக அங்கிருந்த 5 கிலோ மீட்டர் தொலைவில் கலியாவூரை அடைந்து அணைக்கு செல்லலாம். தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் இருந்த 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கலியாவூரை அடைந்தும் இந்த அணையில் குளித்து மகிழலாம்.


