செய்துங்கநல்லூர் அருகே கார் அரசு பஸ் மோதியதில் கார் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டிய பட்டணம் ராஜீவ் நாகரை சேர்ந்தவர் சுப்பையா இவரது மகன் வன்னியபெருமாள் (47). இவருக்கு சொந்தமான வாடகை கார் உள்ளது. இதில் அவர் சாவரிக்கு திருநெல்வேலிக்கு சென்று, அவர்களை இறக்கி விட்டு விட்டு வீரபாண்டிய பட்டணத்துக்கு திரும்பி கொண்டிருந்தார். கருங்குளத்தினை அடுத்த புளியங்குளம் அருகில் வரும் போது எதிர்பாரத விதமாக எதிரே வந்த அரசு பேருந்து நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் கார் ரோட்டில் பல அடி தூரம் இழுத்து செல்லப்பட்டது. இடிபாடுக்குள் காரை ஓட்டி வந்த வன்னியபெருமாள் மாட்டிக்கொண்டார். சாலை முழுவதும் கண்ணாடி துண்டுகள் சிதறின. இதனால் இருசக்கர வாகனங்கள் கூட அவ்விடத்தினை கடக்க முடியாமல் போக்கு வரத்து தேங்கியது. இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் செய்துங்கநல்லூர் போலிஸ் சப் இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி, ஸ்ரீவைகுண்டம் சப் இன்ஸ்பெக்டர் முருகப்பெருமாள் ஆகியோர் சம்பவ இடத்துக்குசென்று இடிபாடுக்குள் சிக்கிய வன்னியம் பெருமாளை மீட்டு பாளை அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின் போக்குவரத்தினை சீர் செய்தனர். வன்னியம்பெருமாளுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலிஸ் சப் இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


