செய்துங்கநல்லூரில் பலத்த மழை பெய்த காரணத்தினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
செய்துங்கநல்லூர் வழியாக தாமிரபரணி நதியின் 7 வது அணைக்கட்டு மருதூர் மேலக்கால் ஓடுகிறது. பொதிகை மலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வாய்காலிலும் தண்ணீர் செல்கிறது. ஆனால் செய்துங்கநல்லூரில் போதிய மழை பெய்ய வில்லை. இதனால் நிலத்தடி நீர் கூட வற்றி காணப்பட்டது. வாய்க்கால் தண்ணீரை வாழைக்கு பாய்த்த போதிலும் மழை இல்லாத காரணத்தினால் வாழை பயிர்கள் திரட்சியாக இல்லை. அதுபோக குளத்தில் தண்ணீர் நிறைந்தும் விவசாயம் செய்ய பொதுமக்கள் பயந்து வந்தனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு செய்துங்கநல்லூர் பகுதியில் பலத்த மழை பொழிந்தது. நேற்று மதியமும் 1 மணி நேரம் மழை வெளுத்து கட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மழைக்காக இருசக்கர வாகத்தினை சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு ஓடிவந்தர்களும் வாகனங்களில் டயர் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த விவசாயி கண்ணன் கூறும் போது, கார் சாகுபடி ஜுன் மாதம் துவங்க வேண்டும். ஆனால் போதிய மழை இல்லாத காரத்தினால் துவங்க முடியவில்லை. அடுத்து செப்டம்பர் மாதம் பிசான சாகுபடி துவங்க வேண்டும். ஆனால் மழை இல்லாமல் வாய்காலில் வரும் தண்ணீரை நம்பி எங்களால் பயிர் செய்ய பயமாக இருந்தது. தற்போது பெய்த மழை எங்களுக்கு விவசாயத்தின் மீது நம்பிக்கை வர வைத்து விட்டது. தொடர்ந்து நாங்கள் பிசான சாகுபடிக்கான வேலையை துவங்குவோம். அதற்கு அரசு உத்தரவாதம் கொடுத்து, போதிய விதை உள்ளபட அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
மூன்று போகம் விளைந்த இவ்விடங்கள் தற்போது பிசான சாகுபடி மட்டுமே நடைபெறும் இடமாக மாறிவிட்டது. மேலும் பல வருடங்களில் பிசானமும் பொய்த்துபோய் விடும்.இந்த தடவை மழை பெய்தகாரணத்தினால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்.