திருச்செந்தூர் சாமி கும்பிடசென்றவர்கள் வேன் கவிழ்ந்தால் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 6 பேர் பலியானார்கள். 12 காயமுற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாண்டியன் நகர் 6வது தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (28). இவர் சிவகாசியில் உள்ள பட்டாசு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் அதே தெருவை சேர்ந்த தனது உறவினர்களுடன் திருச்செந்தூர் சென்று தங்கள் குழந்தைகளுக்கு நேர்த்தி கடன் செலுத்த முடிவு செய்தார். இதற்காக நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் அதே பகுதியை சேர்ந்த வேனை வாடகைக்கு அமர்த்தினார். அந்த வேனை திருத்தங்கல் ஆலமரப்பட்டி தெரு, சிறுவர் பூங்கா நகரை சேர்ந்த கோமதிநாயகம் மகன் முருகேசன் ஓட்டி வந்தார். இந்த வேனில் செந்தில்குமார், அவரது மனைவி செண்பக லெட்சுமி, குழந்தைகள் சுவேதா(8), விஷ்ணு(11), இவரது உறவினர் கருத்ததுரை மகன் அருணாசலபாண்டி(35). இவரது மனைவி கவுசல்யா(22). இவர்களது 3 மாத ஆண் குழந்தை அனீஸ் பாண்டி.
மேலும் உறவினர்கள், சுகுமாரன்(48) ஆகியோர் உள்பட 18 பேர் பயணித்தனர்.
அவர்கள் பயணித்த வேன் 1.30 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கருங்குளம் பாலத்தில் செல்லும் போது, எதிர்பாராத விதமாக வேன், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச்சுவரின் மோதி 20 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
இதில் வேன் முழுவதும் அப்பளமாக நொறுங்கியது. வேனில் இருந்த அனைவரும் இடிபாடுகளில் சிக்கினர். இவர்கள் அலறல் சத்தம் கேட்டு, அந்த வழியாக சென்றவர் போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதே நேரம் அந்தவழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட இசக்கிபாண்டி செய்துங்கநல்லூர் போலிசாருக்கு தகவல் கொடுத்தார். வண்டி அப்பளமாக நொறுங்கி இருந்த காரணத்தினால் அவர்களால் உள்ளே இருந்தவர்களை மீட்க முடியவில்லை. எனவே தீயணைப்பு படைவீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி அருண் பாலா கோபாலன், ஸ்ரீவைகுண்டம் பொறுப்பு டி.எஸ்.பி பால்துரை, தூத்துக்குடி டிஎஸ்பி பிரகாஷ் செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன், எஸ்.ஐ. ராஜா ராம்,சிலுவை அந்தோணி, ஸ்ரீவைகுண்டம் எஸ்.ஐ பெருமாள் உள்பட போலிசார் போராடி ஒவ்வொருவரையும் மீட்டனர்.
இதில் அருணாசலபாண்டி, அவரது குழந்தை அனீஸ்பாண்டி, ராமர் என்பவரின் மனைவி முத்துலட்சுமி(65), காளிராஜ் என்பவரின் மனைவி பாக்கியலட்சுமி(46), கோபாலகிருஷ்ணனின் மகன் நித்தீஸ்(4) அவர்களில் சுகுமாரின் மகன் ஜெகதீஸ்வரன்(12), ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.
மேலும் வேன் டிரைவர் முருகேசன்(45), செந்தில்குமார்(38), அவரது மனைவி செண்பகலட்சுமி(30), மகன் விஷ்ணு(11), மகள் ஸ்வேதா(8), கோபால் என்பவரின் மனைவி சூர்யபிரபா(21), சுகுமாரன்(48) அவரது மனைவி மாரீஸ்வரி(38), அருணாசலபாண்டி மனைவி கவுசல்யா(22), வைரம் மனைவி மல்லிகா(65), சுகுமாரன் மகன் முருகேசன்(42), கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகன் முகிலன் (5மாத குழந்தை) ஆகிய 12 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் பாளை அரசு மருத்துவ மனையில் சிகிச்கைக்காக அனுப்ப பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பின்பு விபத்தில் சிக்கிய வேன் கிரைன் மூலம் பள்ளத்தில் இருந்து மேலே தூக்கிவரப்பட்டது.
இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலிஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப்பதிவு செய்தார். மேல் விசாரணையை பொறுப்பு டிஎஸ்பி பால்துரை, இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
ஒரே குடும்பத்தினை சேர்ந்த சிறு குழந்தைகள், பெண்கள் உள்பட 6 பேர் இறந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.