தாமிரபரணி ஆற்றில் 7வது அணைக்கட்டு மருதூர் அணைக்கட்டு. இந்த அணைக்கட்டில் மருதூர் மேலக்கால் பாசனம் மூலமாக பயன்பெறும் முதல் குளம் முத்தாலங்குறிச்சி குளம். இந்த குளத்தினை தூர்வாரி மேம்மைபடுத்தவும், குளத்துக்கு வரும் வரத்து கால்வாயான முக்கவர் சாணலை மேம்படுத்தவும் பொதுப்பணித்துறை நான்குநேரி சிறப்பு திட்ட உபகோட்டம் மூலமாக சுமார் 3 கோடியே 43 லட்ச ரூபாய் பொதுப்பணித்துறை ஓதுக்கீடு செய்துள்ளது.
இதற்காக முத்தாலங்குறிச்சி குளம் கரை மேம்படுத்தப்பட்டு, மடை மற்றும் புறமடை வேலை நடந்து முடிந்துள்ளது. ஆனால் அளவுக்குமேல் குளத்துக்குள் மணல் அள்ளியதால் குளத்தில் தண்ணீர் நிற்காமல் போய் விடுகிறது. எனவே மேடான இடத்தில் இருந்த மண்ணை பள்ளத்தில் அள்ளி போட்டு ஒன்றுபோல் குளத்தினை அமைத்து தரவேண்டும். உள்ளே உள்ள மண்ணை செங்கல் சூளைக்கு விற்றுவிடக்கூடாது என மாவட்ட ஆட்சி தலைவரிடம் மகளிர் மன்ற தலைவி குணேஸ்வரி மனுகொடுத்தார். அதன் படி கடந்த வாரம் ஒரு ஊர் நூறு கை திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சி தலைவர் சந்தீப் நந்தூரி இந்த திட்டத்தினை துவக்கி வைத்தார்.
இதற்கிடையில் திங்கள் கிழமை கருங்குளம் கிராம நலக்குழு செயலாளர் உடையார் தூத்துக்குடி மக்கள் குறைதீர்க்கும் நாளில் மாவட்ட ஆட்சி தலைவரிடம் ஏற்கனவே இந்த குளத்துக்கும் வரத்துக்கால்வாய்க்கும் சீர் செய்ய பொதுப்பணித்துறை 3 கோடியே 43 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. அந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தினாலே குளத்தினை சீர் செய்து விடலாம். அப்படி இருக்க ஓரு ஊர் நூறு கை திட்டத்தின் கீழ் இந்த குளத்தினை தூர் வாருகிறோம் என பொதுப்பணித்துறை மக்களை ஏமாற்ற பார்க்கிறது எனவே தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.
இது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கருங்குளம் கிராம மக்கள்நலக்குழு செயலாளர் கூறும்போது, நான் ஸ்ரீவைகுண்டம் வட்ட சட்ட பணிக்குழு மூலமாக எங்கள் ஊர் குளமான கருங்குளம் குளத்தினை தூர் வாரவேண்டும் என மனுசெய்திருந்தேன். அந்த மனுவுக்கு பதிலளித்த நான்குநேரி சிறப்பு திட்ட உபகோட்ட உதவிசெயற்பொறியாளர் ஜெயசுதா கருங்குளம் உள்பட 14 குளங்கள் தூர் வார பணம் ஒதுக்கீடு செய்துள்ளோம் என ஒரு பட்டியலிட்டு பதில் அனுப்பியிருந்தார். அதில் முத்தாலங்குறிச்சி குளம் 43 லட்சத்து 40 ஆயிரத்து 989 ரூபாய் செலவிலும், குளத்துக்கு வரத்து கால்வாய் முக்கவர் சாணல் 2 கோடியே 93 லட்சத்து 62 ஆயிரத்து 838 ரூபாய் செலவிலும் தூர் வார நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியிருந்தார். முத்தாலங்குறிச்சி குளம் கரை செம்மைபடுத்தப்பட்டு மடை, புறமடை கட்டப்பட்டு, போதிய ஷட்டர் அமைக்கப்படாமல் உள்ளது. முக்கவர் சாணல் வேலை ஆரமிக்கப்படவில்லை. இந்த பணமே முத்தாலங்குறிச்சி குளத்தினை மகளிர் குழுவினர் கூறிய படி நிரப்பி, மணல்கொள்ளை போகாமல் தடுக்க ஏதுவானது. ஆனால் அந்த பணத்தினை வைத்துக்கொண்டு மக்கள் பங்கீடு என பொதுப்பணித்துறை ஏன் திசை திருப்புகிறது. மக்களிடையே பணம் பிரிக்க ஏற்பாடு செய்துள்ளது என தெரியவில்லை. எனவே மாவட்ட ஆட்சிதலைவர் இதில் நேரில் தலையிட்டு, பொதுப்பணித்துறையினரே இந்த குளத்தினை மேடு பள்ளத்தினை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
இது குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் நடவடிக்கை எடுப்பாரா என மக்கள் எதிர்பார்த்து உள்ளனர். பொதுப்பணித்துறையினர் உடனே செயல்பட்டு இந்த குளத்தினை மழை பெய்யும் முன்பே சீரமைத்து தரவேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.