நடைபயணத்தில் சமூக ஒற்றுமை கோரும் கருங்குளம் நடை பயணம் சாகுல் அமீது, காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 15 ந்தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சிதவைலர் அலுவலகத்தில் இருந்து விருதுநகர் காமராஜர் மண்டபத்தினை நோக்கி நடைபயணம் செய்யவுள்ளார். இது குறித்த செய்தி தொகுப்பு வருமாறு.
மதுரை செல்லூரை சேர்ந்தவர் பக்கீர் முகம்மது மகன் சாகுல் அமீது(62). இவர் மூடி திருத்தும் தொழிலாளி. இவர் 15 வயது முதலே நடைபயணம் மூலம் சமூக ஒற்றுமை கோரும் பணியை மேற்கொண்டார். தன்னுடைய நடைபயணம் மூலமாக மக்களுக்கு தேவையான பிரச்சனைகளை அரச கவனத்தில் ஈர்த்து தீர்த்து வைப்பது. தலைவர்களை கண்டு மனுகொடுப்பது உள்பட பல தீர்வுகளை கண்டு வந்தார். இவர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலூகா ஆறாம்பண்ணையை சேர்ந்த லத்திபா (45) என்ற பெண்ணை மணமுடித்த பின் அவரது நெல்லை மாவட்டம் நோக்கி தனது வாழ்க்கை பயணத்தினை மேற்கொண்டார். ஆனாலும் இவர் நடைபயணத்தினை விடவில்லை. மதுரை தெப்பக்குளத்தினை 50 முறை 12 மணி நேரத்தில் கடந்து சாதனை புரிந்தார், 48 மணிநேரம் தெப்பக்குளத்தினை தொடர்ந்து நிற்காமல் நடைபயணம் செய்தார். இந்த வேளைகளில் எல்லாம் ஏதாவது மக்கள் பிரச்சனையை தீர்க்ககோரி விண்ணப்பத்துடன் நடைபயணம் மேற்கொண்டார்.
அதன் பின் அவர் கேரளா திருவனந்தபுரத்தினை நோக்கி மத நல்லிணக்கம் மற்றும் சாதி ஒழிப்புக்காக நடைபயணம் மேற்கொண்டார். மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மதுரையில் இருந்து 18 நாள் சென்னை கோட்டையை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் இருந்து 2010 மே மாதம் 24 ந்தேதிசென்னையை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். ஒரு தடவை அண்ணா பிறந்த நாளுக்கு மதுரையில் இருந்து காஞ்சி புரம் நோக்கி இவரது நடைபயணம் துவங்கினார். குழந்தைகள் பிச்சை எடுப்பதை தடுக்க வேண்டி மதுரையில் இருந்து அவர் நடைபயணம் மேற்கொண்டார். 2004 டிசம்பர் 23 ல் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு 48 மணி நேரம் மதுரை முக்கிய வீதிகளில் நடைபயணம் மேற்கொண்டார். மழை பெய்ய வேண்டி நெல்லையப்பர் கோயிலை சுற்றி இஸ்லாமியராக இருந்த இவர் நடைபயணம் மேற்கொண்டது சமூக ஒற்றுமையை வலியுறுத்துவதாக அமைந்தது. வன்முறையை தடைசெய்யவும், தமிழகம் கேரள உறவில் அமைதி நிலவ கோரி மதுரையில் இருந்து வடலூருக்கு நடைபயணம் மேற்கொண்டார்.
தற்போது கருங்குளம் அரசு மருத்துவ மனை எதிரே மூடி திருத்தும் கடை வைத்திருக்கும் இவரிடம் இந்த நடைபயணம் குறித்துகேட்டபோது, நான் 15 வயதில் இருந்தே எனது நடைபயணத்தினை மேற்கொண்டுள்ளேன். இதுவரை 1 லட்சம் கிலோ மீட்டருக்கு மேலே நடைபயணம் மேற்கொண்டுள்ளேன். தற்போது கருங்குளத்தில் மூடி திருத்தும் கடை வைத்துள்ளேன். நான் நடைபயணம் செல்லும் போது 1 மாதம் வரை கடை திறக்க முடியாது. அந்த வேளையில் வீட்டுக்கு தேவையான பணத்தினை சேகரித்து கொடுத்து விட்டே எனது பயணத்தினை துவங்குவேன். எனக்கு ஒவ்வொரு காவல்நிலையத்திலும் உதவி புரிவார்கள். அன்று தங்கும் வசதி, ஒரு நாள் சாப்பாடு வரை அவர்கள் உதவி கிடைக்கும். எனவே தான் நான் யாரையும் எதிர்பாரத விதமாக வேகமாக நடந்து செல்ல முடிகிறது. மதுரையில் ஒரு சமயம் சிட்டி பேருந்தை விட நான் வேகமாக நடந்து சென்று சாதனை நிகழ்த்தியுள்ளேன் என் அவர் கூறினார்.
நடை மன்னன் தனியொரு மனிதனாக இன்று இந்தியாவின் தென்கோடியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்து சமூக நல்லிணக்கத்துக்காக சுற்றி வருகிறார். வருகிற 15 ந்தேதி காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சமூக நல்லிணக்கதிற்காக நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த நடைபயணத்தினை மாவட்ட ஆட்சி தலைவர் சந்தீப் நந்தூரி காலை 11 மணிக்கு துவக்கி வைக்கிறார். இவர் புகழ் விரைவில் மத்திய அரசுக்கு தெரியவரும் என்பதில் சந்தேகமில்லை.