தமிழகத்தில் ஏப்ரல் 6- ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தேர்தல் நடத்தும் அலுவலரும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவருமான செந்தில் ராஜ் உத்தரவின்படி ஸ்ரீ வைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 100 சதவீதம் வாக்குப்பதிவு என்ற இலக்கினை எட்டவும் அமைதியான முறையில் தேர்தல் நடத்திடவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஸ்ரீ வைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் மண்டல அலுவலர்களுக்கான கூட்டம் நேற்றைய தினம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்குத் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலருமான ஜீவரேகா தலைமை வகித்தார்.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் ஸ்ரீ வைகுண்டம் வட்டாட்சியருமான கோபாலகிருஷ்ணன், சமூக நலத்திட்ட வட்டாட்சியர் ரமேஷ் சாத்தான்குளம் வட்டாட்சியர் செல்வகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகள் எங்கு எங்கு உள்ளன என்பதைத் தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 6ஆம் தேதிக்கு முன்னர் முழுமையாக அறிந்திருக்க வேண்டும். வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சிகளைத் தெளிவாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் தேர்தல் மண்டல அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது.
கூட்டத்தில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன் பேசுகையில்,
சட்டப்பேரவை தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் பணியாளர்களும் கொரோனா நோய்த்தொற்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். வாக்குப்பதிவு நாளன்று முகக்கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை முழுவதுமாக வாக்குச்சாவடி மையங்களில் அமல்படுத்த வேண்டும். வாக்காளர்கள் யாரேனும் முகக்கவசங்கள் இன்றி வாக்குப்பதிவு செய்ய வந்தால் அவர்களை அனுமதிக்கக் கூடாது. வாக்குப்பதிவு மையங்களான பள்ளி, கல்லூரி வளாகங்களில் நோய்த் தொற்று உபகரணங்களை வீசி விடக்கூடாது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் முகக்கவசங்கள் உள்ளிட்ட நோய்த் தடுப்பு உபகரணங்களைப் பாதுகாப்புடன் அப்புறப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இதில் ஸ்ரீ வைகுண்டம் தேர்தல் துணை வட்டாட்சியர் சிவக்குமார் மற்றும் வேளாண்மைத் துறை, ஊரக துறை, நில அளவை துறை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலக துறை சார்ந்த தேர்தல் மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


