தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள முறப்பநாடு தாமிரபரணி ஆற்றின் படித்துறை அருகில் சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள அம்மன் சிலை கடந்த 10 நாட்களுக்கு முன்பு கிடைத்தது.
அப்பகுதியில் குளிக்க வந்த மக்கள் அந்தச் சிலையைக் கண்டெடுத்து முறப்பநாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அந்த சிலையை ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். அச்சிலையை முறைப்படி அருங்காட்சியத்தில் ஒப்படைக்கும் பொருட்டு வருவாய் துறையினர் அச்சிலையை பாதுகாத்து வருகின்றனர்.
இந்நிலையில் திருநெல்வேலி அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசக்தி வள்ளி ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அச்சிலையை முறைப்படி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜின் உத்தரவுக்குப் பிறகு அந்த சிலையை அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்லவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


