மத்திய கலாசாரத்துறை மந்திரியுடன் சந்திப்பு
ஆதிச்சநல்லூர் அகழாய்வு தொன்மங்களை கொண்டு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம்:
அமைச்சர் கே.பாண்டியராஜன் தகவல்
மத்திய – மாநில அரசுகள் இணைந்து அமைக்கும்
டெல்லியில் மத்திய கலாசாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேலை தமிழக அமைச்சர் கே.பாண்டியராஜன் நேற்று நேரில் சந்தித்து, கீழடி மற்றும் ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கைகளை விரைந்து வெளியிட வலியுறுத்தினார்.
தமிழக பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் 2 நாள் அரசுமுறை பயணமாக டெல்லி வந்துள்ளார். இதனை தொடர்ந்து நேற்று, மத்திய கலாசாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேலை சந்தித்தார். அப்போது கலை, பண்பாடு, தொல்லியல்துறை சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததுடன் தமிழகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்தும் அவரிடம் விவாதித்தார்.
மேலும், மத்திய தொல்லியல் துறையினரால் ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அறிக்கைகளை விரைந்து வெளியிடுவதற்கும், கீழடியில் அடுத்தக்கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்வதற்கும் விரைவில் உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டார். மத்திய அரசிடம் இருந்து தமிழக தொல்லியல் துறைக்கு கிடைக்க வேண்டிய விஷயங்கள் குறித்தும் கோரிக்கை விடுத்தார்.
உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம்
இது தொடர்பாக மத்திய தொல்லியல் துறை தலைமை இயக்குனர் வி.வித்யாவதியுடனும் அமைச்சர் கே.பாண்டியராஜன் கலந்துரையாடல் நடத்தினார். பின்னர் அமைச்சர் கே.பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-–
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த தொன்மங்களை கொண்டு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து விரைவில் அமைக்கும். எழும்பூர் அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அமராவதி ‘கேலரி’ புதுப்பிக்கப்பட்டு விரைவில் திறந்து வைக்கப்படும். தமிழகத்தில் கண்டறியப்பட்ட கல்வெட்டுகள் பிரதி எடுக்கப்பட்டு பொதுவெளியில் தொல்லியல் துறையின் வலைதளத்தில் வெளியிடப்படும். தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட அற்புதமான கலைப்பொக்கிஷங்களை திரும்ப கொண்டுவருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய தொல்லியல் துறையில் ஒரு தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
கொற்கை, அகரம், கங்கைகொண்ட சோழபுரம் அருகே மாளிகைமேடு உள்ளிட்ட 6 இடங்களில் அகழாய்வுகளை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 114 தொன்மையான கலைச்சின்னங்களை உலக தரத்துக்கு மேம்படுத்துவது குறித்தும் இந்த கலந்துரையாடல்களின்போது விவாதிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பின்போது தமிழக அருங்காட்சியகங்களின் இயக்குனர் எம்.எஸ்.சண்முகம் உடன் இருந்தார்.


