செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவை கண்டித்து தாய் மகள் விஷம் குடித்த காரணத்தினால் பரபரப்பு ஏற்பட்டது. செய்துங்கநல்லூர் காவல்நிலையத்தினை உறவினர்கள் முற்றுகையிட்டு, சாலை மறியல் செய்த காரணத்தினால் பதட்டம் நிலவியது. இருதரப்பில் மோதல் ஏற்படாமல் இருக்க முத்தாலங்குறிச்சியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
செய்துங்கநல்லூர் அருகே உள்ள முத்தாலங்குறிச்சியைச் சேர்ந்தவர் மாரியப்பன்(45). இவர் அந்த பகுதியில் உள்ள சேம்பரில் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சங்கரம்மாள். இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஐஸ்வர்யா(17) என்ற மகளும் உள்ளனர்.
நேற்றைய தினம் (19.07.2020) சங்கரம்மாளின் ஆட்டை மற்றொரு பிரிவை சேர்ந்தவரின் நாய் ஒன்று கடித்துள்ளது. இந்த நாய் முத்தாலங்குறிச்சி இந்திராநகரை சேர்ந்த ராஜி என்பவரு¬க்கு சொந்தமானது என கூறப்படுகிறது. எனவே சங்கரம்மாள் தனது உறவினர்களை கூட்டிக்கொண்டு அந்தப்பகுதிக்கு சென்று ராஜை கண்டித்துள்ளார். அந்தசமயத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ராஜி மகன் சரவணகுமார் (26) என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் அருள்மொழி ரோஸ்லின் 26 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த பிரச்சனை குறித்து போலிசார் விசாரனை நடத்துவதற்காக நேற்று (20.07.2020) அதிகாலை 6 மணிக்கு சங்கரம்மாள் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. இன்ஸ்பெக்டர் அருள்மொழி ரோஸ்லின் சங்கரம்மாளை விசாரனைக்கு கூப்பிட்ட போது, எனக்கு வயது வந்த மகள் இருக்கிறாள் அவளை விட்டு விட்டு வர முடியாது என சங்கரம்மாள் கூறியுள்ளார். ஆனால் அவளையும் சேர்த்து கூட்டிட்டு வா என போலிசார் கூறியதால் மனமுடைந்த சங்கரம்மாள் அவரது மகள் ஐஸ்வர்யாவுடன் வீட்டுக்குள் சென்று விஷத்தினை அருந்தினர்.
அதன்பின் வெளியே வந்த தாயும் மகளும் போலிசார் முன்னிலையில் மயங்கி விழுந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலிசார், அவர்கள் இருவரும் விஷம் குடித்ததை அறிந்து அங்குள்ள தனியார் வாகனத்தில் இருவரையும் ஏற்றி பாளை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுபற்றி கேள்விப்பட்டவுடன், சங்கரம்மாள் உறவினர்கள் மற்றும் 20க்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் உள்பட பலர் பாளை அரசு மருத்துவமனையில் கூடினர். பின் அவர்கள் இந்த வழக்கில் சம்பந்தமில்லாத 26 நபர்களை போலிசார் சேர்த்து உள்ளனர். எனவே இந்த வழக்கில் திட்டமிட்டு சதி நடந்துள்ளது. இந்த பிரச்சனை உடனே தீர்க்கப்பட வேண்டும். பொய் வழக்கு போடப்பட்டவர்களை மீட்க வேண்டும் என்று போலிசாரை எதிர்த்து கோஷம் எழுப்பினர்.
இந்நிலையில், சங்கரம்மாள் உறவினர்கள், பெண்கள் மற்றும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரை கண்டித்து மதியம் 1.30 மணி முதல் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக செய்துங்கநல்லூர் காவல்நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருநெல்வேலி&திருச்செந்தூர் சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார், ஏ.டி.எஸ்.பி பழனிக்குமார், ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி சுரேஷ்குமார், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சந்திரன் உள்பட அதிகாரிகள் இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த செய்துங்கநல்லூர் காவல் நிலையத்துக்கு வந்தனர். அங்கு பார்வர்டு பிளாக் கட்சி மாநில இளைஞரணி தலைவர் சுரேஷ்தேவர், பசும்பொன் மக்கள் இயக்க தலைவர் இசக்கிராஜா தலைமையில் சங்கரம்மாள் உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர் கலந்து கொண்டனர். இந்த பேச்சு வார்த்தையில் கைது செய்யபட்டுள்ள பார்வதிநாதன், இந்த பிரச்சனையில் ஈடுபடவில்லை. எனவே அவரை விடுதலை செய்யவேண்டும், சம்பந்தம் இல்லாதவர்கள் மீது பொய் வழக்கு போடக்கூடாது, தாய் மகன் விஷம் குடிக்க காரணமாக இருந்த போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
எனவே காவல்நிலையத்தினை விட்டு வெளியே வந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் இந்த போராட்டம் நடந்தது. அதன்பின் மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பித்தது. ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர் போலிஸார் இந்த வழக்கில் நியாயமான நடவடிக்கை எடுப்பார்கள் என உறுதி அளித்தார். அதன் பின் விசாரணைக்கு சேரகுளம் காவல்நிலையத்தில் வைக்கப்பட்ட பார்வதிநாதன் விடுவிக்கப்பட்டார். அதன் பின் அனைவரும் கலைந்து சென்றனர். பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சங்கரம்மாள், ஐஸ்வர்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதை தொடர்ந்து முத்தாலங்குறிச்சியில் இரண்டு பிரிவினர் வசிக்கும் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுளளது.
இந்த சம்பவம் செய்துங்கநல்லூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
===


