கருங்குளம் பகுதியில் பருத்திச் செடியில் நோய் அதிகரித்த காரணத்தினாலும், விலை பாதிக்குப் பாதி குறைந்த காரணத்தினாலும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கருங்குளம் பகுதியில் மணிமுத்தாறு 3வது ரீச் விளைநிலங்களுக்குப் பாத்தியப்பட்ட விவசாய நிலங்கள் இரமானுஜம்புதூர், சேரகுளம்,தீராத்தி குளம், வெட்டி குளம், இலுப்பை குளம், புதுக்குளம், அரசர் குளம், வல்ல குளம், கிளாக்குளம் உள்படப் பல பகுதியில் உள்ளது. இங்குக் கடந்த வருடத்தினை போல் அல்லாமல் குறைந்த அளவே பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் மணிமுத்தாறு அணை மூலம் தண்ணீர் வரத்துக் குறைவாக இருந்த காரணத்தினால் விவசாயிகள் கிணற்றுப் பாசனம் மற்றும் ஆழ் துளை கிணறு மூலம் பாசனம் செய்து நாட்டுப் பருத்தியை விவசாயம் செய்து வருகின்றனர். சுமார் 100 ஏக்கர் பகுதியில் பருத்தி விவசாயம் நடந்து வருகிறது. ஆனால் எதிர்பாராத விதமாக இந்த பருத்தியில் வேர் பூச்சி, அப்பள நோய் பெருமளவு தாக்கியுள்ளது. இதனால் தொடர்ந்து பருத்தி விளைச்சல் இல்லாமல் கருகி மகசூல் தர இயலாத நிலையில் பயிர் உள்ளது.
இதுகுறித்து வல்ல குளத்தினை சேர்ந்த விவசாயி முனியாண்டி கூறும் போது, நாங்கள் ஏககருககு 50 ஆயிரம் செலவு செய்து பருத்தி சாகுபடி செய்து வருகிறோம். பெரும்பாலுமே கடந்த வருடம் ஒரு குவிண்டாலுககு 5500 வரை விலை இருந்தது. அதுபோல் இந்த வருடமும் விலை இருக்கும் என நினைத்து வந்தோம். ஆனால் தற்போது பருத்தி குவிண்டாலுககு 3300 என வியாபாரிகள் எடுத்து வருகிறார்கள். தற்போது அப்பள நோய் தாக்கி சாகுபடி பாதிக்குப் பாதி குறைந்து விட்டது. இதனால் விவசாயத்தில் பயங்கரமான நஷ்டத்தினை விவசாயிகள் அடைந்துள்ளனர். எனவே அரசு எங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கூறினார்.
தண்ணீர் தட்டுப்பாடு, இதனால் புதிய போர் போடும் செலவு, விவசாய நிலங்களுக்கு உரம் விலை உயர்வு போன்று பல விலையேற்றம் ஆண்டுக்கு ஆண்டு கூடுதல் செலவு ஆகிறது. இதற்கிடையே கொள் முதல் மட்டும் ஆண்டுக்கு ஆண்டு பாதிக்குப் பாதியாகக் குறைகிறது . இதனால் பருத்தி விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.


