செய்துங்கநல்லூர் அருகே 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்து கொண்ட அதிமுக பெண் கவுன்சிலர் வேட்பாளர் குறித்த பரிதாப தகவல் வருமாறு.
கருங்குளம் அருகே உள்ள தாதன்குளம் ஆர்.சி கோயில் தெருவைச் சேர்ந்தவர் உலகு ராஜ். அதிமுக பிரமுகரான இவர் தாதன்குளத்தில் உள்ள தனது சொந்தமான தோட்டத்தில் விவசாயம் செய்து வந்தார். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிவந்தி புரத்தினை சேர்ந்த நிர்மலா தேவி (வயது30) என்பவரை மனம் முடித்தார். நிர்மலா தேவிக்குத் தாய் தந்தையர் இல்லை. சித்தி அரவணைப்பில் தான் வாழ்ந்து வந்தார். உலகு ராஜை மணமுடித்த பின் மிகச் சந்தோஷமாகத் தம்பதிகள் தாதன்குளத்தில் உள்ள சொந்த வீட்டில் குடியிருந்து வந்தனர். இவர்களுக்கு நெல்சன் ராபர்ட்(6), என்ற மகனும், அபிஷா (5), ஜெனிஷா (3) ஆகிய 2 மகள்களும் பிறந்தனர். தாங்கள் தான் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறோம். தங்களது குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்று உள்ளூரில் அரசுப் பள்ளிகள் இருந்தும் கூட கொங்கராயகுறிச்சியில் உள்ள தனியார்ப் பள்ளியில் மூன்று குழந்தைகளையும் சேர்த்துப் படிக்க வைத்தனர். தினமும் அவர்கள் பள்ளி செல்வதை மகிழ்ச்சியுடன் கண்டு களித்து வந்தனர்.
திருமணத்துக்கு முன்பே கடந்த 2011 ம் வருடம் கருங்குளம் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் 14வது வார்டு கவுன்சிலர் தேர்தலுக்கு சுயேச்சையாக உலக ராஜ் போட்டியிட்டார். அப்போது குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இவர் தோல்வியடைந்தார். இதற்கிடையில் அதிமுக கட்சியில் இவர் சேர்ந்து பணிபுரிந்து வந்தார். இதன் பயனாக 2019 உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கட்சி சார்பாக 14வது நகராட்சி உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் வேட்பாளர் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்ட காரணத்தினால் உலகராஜ் தன் மனைவி நிர்மலா தேவியைக் களத்தில் இறக்கினார். கடும் போட்டிக்கு இடையில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் நிர்மலா தேவி தோல்வியுற்றார். இதனால் இவர்களுக்கு சுமார் 8 லட்சம் வரை கடன் ஆகி விட்டது. இந்த பிரச்சனையில் நிர்மலா தேவிக்கு மனஅழுத்தம் இருந்தது.
இதற்கிடையில் நிர்மலா தேவிக்கு வயிற்றில் கட்டி இருந்தது. இதனால் வலி தாங்க முடியாமல் துடித்து வந்தார். இதனால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர். ஏற்கனவே கடன் பிரச்சனை , இதற்கிடையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற போதிய வசதி இல்லை. அதே வேளையில் அரசு ஆஸ்பத்திரியில் கொரானா நோய் தாக்கம் இருப்பதால் தற்போது அதற்குச் சாத்தியமில்லாத நிலை இருந்தது. ஆனாலும் அவர் அரசு மருத்துவனையில மருந்து மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்தார். ஆனாலும் குணமாகாததால் மனமுடைந்த நிலையிலிருந்தார். எனவே தற்கொலை செய்ய முடிவு செய்தார். தனக்குப் பின்னர் தன்னுடைய குழந்தைகளை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று கருதினார்.
எனவே கடந்த 28 ந்தேதி காலையில் தனது மனதைக் கல்லாக்கிக்கொண்டு தன்னுடைய 3 குழந்தைகளுக்கும் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடிக்கக் கொடுத்தார். பின்னர் அவரும் பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்தார். அந்த இடத்திலேயே நிர்மலா தேவி மயங்கிச் சரிந்தார்.
இதனால் 3 குழந்தைகளும் கதறி அழுதனர். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து நிர்மலா தேவி மற்றும் அவருடைய 3 குழந்தைகளையும் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீ வைகுண்டம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அன்று மாலை 4 மணிக்கு நிர்மலா தேவி பரிதாபமாக உயிரிழந்தார்.
கண்ணீர் மல்க உறவுக்காரர்கள் அவரை மறுநாள் 29 ந்தேதி தாதன்குளம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்தனர். அந்த சமயத்தில் கடைசி குழந்தை ஜெனிஷா பரிதாபமாக உயிரிழந்தாள். அவளை 30 ந்தேதி அடக்கம் செய்யும் சமயத்தில் மகன் நெல்சன் ராபர்ட் உயிரிழந்தார். அவரை 1 ந்தேதி அடக்கம் செய்தனர். இரண்டு பேரையும் தாய் அருகே புதைத்தது கிராமத்தில் உள்ள அனைவர் மனதையும் உருக்குவதாக இருந்தது. தாதன்குளம் மட்டுமல்லாமல் சுற்றுப் பகுதியில் உள்ள கிராமத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.
தாதன்குளம் பஞ்சாயத்துத் தலைவர் சீதா சுடலை அவர்களுக்கு ஆறுதலாக உடனிருந்தனர். அனைத்து காரியத்தினையும் கவனித்துக் கொண்டிருந்தார்.
தற்போது இரண்டாவது குழந்தைக்குப் பாளை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை நடைபெற்று வருகிறது. அருகிலேயே அவரது தந்தை உலகராஜ் இருந்து மகளைக் காப்பாற்ற முயன்று வருகிறார்.
அவரை பார்க்கும் உறவினர்களும், ஊர் மக்களும் கண்ணீர் வடிக்கின்றனர். இவ்வளவு சோகத்திலும் உலகராஜ் சார்ந்திருக்கும் அதிமுக கட்சிக்காரர்கள் யாரும் அவரை வந்து பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து உலகராஜ் அண்ணன் செல்வராஜ் கூறும் போது, என் தம்பி மனைவி எல்லோரிடமும் அன்பாய் இருப்பார். குழந்தைகள் என்றால் அவளுக்கு உயிர். அதுபோலவே குடும்பம் மீது பற்று பாசமும் வைத்திருந்தாள். தேர்தலில் அவளுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது. எதிர்பாராத விதமாகத் தோல்வி அடைந்தார். கடன் இருந்தாலும் கூட கணவனும் மனைவியும் நன்றாக உழைத்து வந்தார்கள். ஒருவருடத்தில் கடனை அடைத்து விட வேண்டும் என்று உழைத்தனர். வீட்டில் ஓய்வாக இருக்கும் நேரத்தில் கூட கோழி வளர்த்து வந்தாள் என் தம்பி மனைவி. அவளுக்கு வயிற்று வலி இருந்தது. இதனால் அறுவைசிகிச்சை செய்ய ஏற்பாடு செய்து வந்தோம். கொரோனா நோய் பிரச்சனை முடிந்தவுடன் அறுவைசிகிச்சை செய்யலாம் என்று கூறி வந்தோம். அதற்குள் வலி தாங்காமல் இப்படி ஆகி விட்டதே. எப்போதும் எங்கள் வீட்டுக்கு வந்து செல்லும் குழந்தைகள் உயிரும் போய் விட்டதே. கொரோனா காரணமாக அருகில் நாங்கள் தினமும் செல்லும் கண்மலை ஆலயம் திறக்கவில்லை. திறந்திருந்தாள். காலையிலேயே குழந்தைகள் அங்குச் சென்றிருக்கும். இவளும் உடன்சென்று இருப்பாள். ஆலயம் திறக்காத காரணத்தினால் இப்படி ஆகி விட்டதே. என்று கதறி அழுதார்.
தொடர்ந்து தாய் இரண்டு குழந்தைகள் உயிர்ப் பலியான சம்பவம் தாதன்குளத்தினையே அதிர வைத்துள்ளது.
===


