ஆதிச்சநல்லூரில் வாழ்விடங்களை தேடும் ஆய்வாளர்கள். ஆதிச்சநலலூர் ஊருக்குள் 5 இடங்களில் குழிகள் அமைத்து சுவடுகளை தேடும் பணிகளை நடத்தி வருகிறார்கள்.
உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் கடந்த மே 25ம் தேதி மாநில அரசு சார்பில் முதற்கட்டமாக அகழாய்வு பணி துவங்கியது. தொடந்து 40 நாள்களாக ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் மூலம் உலக நாகரீகத்தில் தமிழர்களின் மாண்பை அறியமுடியும்.
ஆதிச்சநல்லூர் அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் மற்றும் லோகநாதன் தலைமையில் இந்த அகழாய்வு பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். புளியங்குளம் பாண்டிய ராஜா கோயில் பரம்பு அருகில் தற்போது 20 குழிகள் வரை அமைத்து அகழாய்வு பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர். இங்கு வித்தியாசமான பொருள்கள் தொடர்ந்து கிடைத்து வருகிறது.
கடந்த 8ம் தேதி 3000 ஆண்டுகள் பழமையான 2 முதுமக்கள் தாழிகள் மற்றும் 2 கை மூட்டு எலும்புகளும், அதன்பின்னர் ஒரு முதுமக்கள் தாழியும் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது வரை 15க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே சிவகளையிலும் இதுவரை 20க்கு மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன.
கடந்த 28 தேதி சிவகளையில் வாழ்விடங்களை தேடி சாமியாத்து சாலையில் உள்ள திரட்டில் அகழாய்வு பணியை துணை இயக்குனர் சிவானந்தம் துவக்கி வைத்தார். அகழாய்வு இயக்குனர் பிரபாகரன், தொல்லியல் ஆய்வாளர் தங்க துரை ஆகியோர் கொண்ட குழு விரைவாக பணி செய்து வருகிறது.
ஆதிச்சநல்லூரில் வாழ்ந்தவர்களின் வாழ்விடங்களை கண்டறிவதற்காக ஊரின் மையப்பகுதிகளில் உள்ள இடங்களில் 5 குழிகள் புதிதாக அமைத்து ஆய்வு பணியானது நடைபெற்று வருகிறது.
அதில் முதல்கட்டமாக ஒரு குழியில் முன்னோர்கள் பயன்படுத்திய புலங்கு பொருட்கள் அதாவது மண்பாண்ட மூலமாக சமையல் செய்ய பயன்படுத்தும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆய்வாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த இடத்தில் தோண்டப்பட்ட மண் சாயல்கள் ஆய்வுக்கு அனுப்பப்படுகிறது. இதன் மூலம் இங்கு மண் படிந்த காலத்தினை கொண்டு இங்குள்ள குடியிருப்பு வருடங்களை கணிக்க முடியும் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். அதற்கான ஏற்பாடுகளையும் செய்துவருகிறார். ஆதிச்சநல்லூரில் உள்ள ஆதித்த நங்கை கோயிலில் உள்ள கல்வெட்டுகளை ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும் போது, மிகச்சிறப்பாக நடைபெறும் இந்த ஆய்வு நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் சுமார் 25 குழிகள் அமைத்து முதுமக்கள் தாழி மற்றும் மக்கள் வாழ்விடங்களை தேடி ஆய்வாளர்கள் பணி செய்து வருகிறார்கள். நமது மாநில அரசுஇதற்கான ஆய்வு அறிக்கையை விரைவில் தருவதற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றன. செப்டம்பர் மாதம் முடிவில் ஆய்வு நிறுத்தபட்டு சிறிது காலத்திலேயே அகழாய்வு அறிக்கையை வெளியிட அனைத்து நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறது. அதே வேளையில் 2004ல் நடந்த ஆய்வு அறிக்கையை மத்திய அரசு மதுரை உயர் நீதி மன்றத்தில் ஒப்படைத்ததாக கூறி வருகின்றனர். அந்த அறிக்கையை அவர்கள் முறையாக தொல்லியல் துறை மூலமாக நூலாக வெளியிட்டால் மிக உதவியாக இருக்கும். மாநில அரசு கீழடி அறிக்கையை 24 மொழிகளில் வெளியிட்டது போலவே 2004 ல் நடந்த ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை மத்தியஅரசு 36 மொழிகளில் வெளியிட வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் ஆதிச்சநல்லூரில் வேலி போடும் பணி 90 சதவீதம் முடிந்த நிலையில் மேலும் 10 சதவீதம் பணி கிடப்பில் கிடக்கிறது. இந்த பணியை உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும். என கோரிக்கை வைத்தார்.
ஆதிச்சநல்லூரில் ஆய்வு செய்யும் போது இவ்வூர் வழியாக தாமிரபரணி பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் ஓடிய சுவடுகள் தெரிகிறது. எனவே ஆய்வு முடிவில் பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறப்புகள் வெளிபடும் என உலகமே எதிர்பார்க்கிறது.
பாகஸ் போடலாம்.
மேலும் 1902ல் ஆதிச்சநல்லூர் பகுதியை ஆய்வு செய்த அலெக்சாண்டர் ரியா தாமிரபரணிக்கரையில் 37 இடங்களில் அகழாய்வு பணிகள் நடைபெற ஏதுவாக உள்ள இடமாக குறிப்பிட்டுள்ளார். அதனையும் ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தற்போது முதல் கட்டமாக ஆதிச்சநல்லூர் குடியிருப்பு பகுதிகளில் அகழாய்வு செய்து வருகிறார்கள். இதன் மூலம் இங்குள்ள வாழ்விடங்களில் வயதுகளை அறிந்து கொள்ள உதவும். இங்கு போடப்படும் ஒவ்வொரு குழிகளுமே வரலாற்று சிறப்பு மிக்கவையாகும். புளியங்குளம் பாண்டிய ராஜா கோயில் அருகில் தோண்டும் குழிகளில் அற்புத பொருள்கள் வெளிப்பட்டு வருகிறது. இங்குள்ள புகைப்பிடிக்கும் கருவி வெளிநாட்டுக்கும் நமக்கும் உள்ள தொடர்பை நிலைநாட்டுவதாக உள்ளது. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட 20 க்கு மேற்பட்ட முதுமக்கள் தாழிகளை ஆய்வுக்கு அனுப்பும் போது நமது முன்னோர்களின் வரலாறு நமக்கு சிறப்பாக தென்படும். எனவே வாழ்விடங்களை தேடும் பணி மும்முரப்படுத்தப்பட்டிருக்கிறது.
பாக்ஸ் போடலாம்.
மத்திய அரசு மாநில அரசுவுக்கு ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்ய அனுமதி கொடுத்து உள்ளார்கள். ஆனால் அவர்கள் பராமரித்து வைத்திருக்கும் 114 ஏக்கருக்குள் அனுமதி கொடுக்கவில்லை. எனவே மாநில அரசு பணிகள் தொல்லியல் துறை வேலியிட்ட இடங்களுக்கு வெளியே தான் நடைபெறுகிறது. இதனால் எடுக்கப்படும் பல பொருள்கள் உடைந்து காணப்படுகிறது. எனவே வேலிக்குள் உள்ள 114 ஏக்கரில் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது ஒவ்வொரு தமிழரின் கோரிக்கை யாக உள்ளது.