ஆதிச்சநல்லூரில் 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முதுமக்கள் தாழிகள் மற்றும் 2 கை எலும்பு கூடுகள் கண்டு எடுக்கப்பட்டுள்ளது.
உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் கடந்த மே 25ம் தேதி மாநில அரசு சார்பில் முதற்கட்டமாக அகழாய்வு பணி துவங்கியது.
ஆதிச்சநல்லூர் அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் தலைமையில் தொல்லியல் ஆய்வாளர் லோகநாதன் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்ட அகழாய்வு பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆதிச்சநல்லூரில் 4 குழிகள் அமைத்து அகழாய்வு பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக பாண்டிய ராஜா கோயில் அருகில் மூன்று குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணி நடந்து வருகிறது. கால்வாய் ரோட்டில் ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்களின் வாழ்விடத்தினை தேடி நான்காவது குழி தோண்டப்பட்டு பணி நடந்து வருகிறது.
முதலில் சிறுசிறு ஓடுகள், மற்றும் வட்ட வடிவில் உலை போன்ற அமைப்பு வெளியே தெரிந்தது. அதை ஆய்வாளர்கள் நுண்ணியமாக அகழ்ந்து ஆய்வு செய்துவருகிறார்கள். கிடைக்கும் பொருள்களை புளியங்குளம் முதுமக்கள் தாழி தகவல் மையம் அருகில் சேர்த்து வருகிறார்கள். கிடைக்கும் பொருள் சம்பந்தப்பட்ட அறிக்கைகள் உடனுக்குடன் சேகரித்து, விவரம் எழுதப்பட்டு வருகிறது.
15 வது நாளான நேற்று அகழாய்வு பணிக்காக தோண்டப்பட்ட இடத்தில் இரண்டு முதுமக்கள் தாழிகள் கிடைத்தன. இவை மேல்பகுதியில் சிதைந்தும். கீழ்பகுதி நல்ல நிலையிலும் உள்ளது. இந்த முதுமக்கள் தாழியை பாதுகாப்பாக அகழ்ந்தெடுககும் பணி நடந்து வருகிறது. மேலும் அதனருகில் எலும்பு கள் கிடைத்துள்ளது. இதில் உள்ள இரண்டு எலும்பு கூடுகள் கை எலும்பு கூடுகள் போல காட்சி தருகிறது. அவை எரித்து வைக்கப்பட்டது போலவும் தெரிகிறது. இதனால் ஆதிச்சநல்லூர் அகழாய்வு சூடு பிடித்துள்ளது. ஏற்கனவே அலெக்ஸாண்டர் இரியா தனது ஆய்வின் போது ஆதிச்சநல்லூர் 3500 வருடங்கள் பழமையானது என்று குறிப்பிட்டார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவின் மதுரை உயர்நீதி மன்ற கிளை வழக்கு தொடர்பாக 2004 அகழாய்வில் எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியை அமெரிக்கா புளோரிடாவுக்கு ஆய்வுக்கு அனுப்பிய போது, அவை 2900 வருடம் பழமையானது என உறுதி செய்யப்பட்டது. மேலும் தியாக சத்திய மூர்த்தி அவர்களின் அகாழ்வு அறிக்கையின் முதல் கட்டத்தில் எரிந்த நிலையில் தாழிக்குள் எலும்பு உள்ளது என குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது கண்டு பிடித்த முதுமககள் தாழி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது.
முதுமக்கள் தாழியை பொறுத்தவரை தற்போது சுமார் 2 அடியில் பிரமாண்டமாக தெரிகிறது. மேலும் மண்ணில் புதைந்தும் உள்ளது. எனவே முதுமக்கள் தாழியில் உள்ளே முன்னோர் காலத்தில் வாழ்ந்த மக்களை உட்கார்ந்த நிலையில் புதைத்திருக்க கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும் முழுமையாக அகழாய்வு செய்து முதுமக்கள் தாழியை வெளியே எடுக்கும்போது அதன் நிலை முழுவதும் தெரியும் என கருதப்படுகிறது. இங்கு கிடைத்த முதுமககள் தாழிகள் மற்றும், எலும்புகள் கார்பன்டேட்டிங் அனுப்ப பட்டால் இதன் வயதை அறியலாம். அதற்கான ஏற்பாடுகளை ஆதிச்சநல்லூர் அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
ஆதிச்சநல்லூரில் மாநில அரசு சார்பில் முதல் முறையாக நடைபெறும் அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது ஆய்வாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆதிச்சநல்லூர் வழக்கு முழுமையாக நிறைவேறுகிறது.
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆதிச்சநல்லூர் குறித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் .அதில் ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு செய்ய வேண்டும், சிவகளை, தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள 37 இடங்களில் அகழாய்வு செய்ய வேண்டும். , ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கவேண்டும். 2004ல் நடந்த அகழாய்வு அறிக்கை வெளிவரவேண்டும் என்பதே வழக்கின் சாரம். தற்போது மாநில அரசு ஆதிச்சநல்லூர், சிவகளை, தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள இடங்களில் அகழாய்வு பணியை துவக்கி விட்டது. மத்திய அரசு சைட் மியூசியம் அமைக்க பட்ஜெட்டில் நிதி ஓதுக்கி விட்டது. அகழாய்வு அறிக்கையை மத்திய தொல்லியில் துறை இயக்குனர் சத்திய பாமா மதுரை உயர் நீதி மன்றத்தில் சமர்பித்து விட்டார் எனகூறப்படுகிறது. கொரோனா நோய் காரணமாக தற்போது நீதி மன்ற பணிகள் ஸ்தபவித்து விட்டது. எனவே நீதி மன்ற பணிகள் சீரான உடன் 2004 அகழாய்வு அறிக்கை வெளிவரும். அப்போது உலக அளவில் தமிழன் நாகரீகம் போற்றப்படும் என நம்பப்படுகிறது. இந்த அறிக்கையும் வந்து விட்டால் எழுத்தாளர் வழக்கில் கேட்ட கோரிக்கை அனைத்தும் நிறைவேறிவிடும்.
ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்யும் இடத்தில் புளியங்குளம் முதுமக்கள் தாழி மையம் உள்ளது. இந்த மைய கட்டித்தினை சீர் செய்து கருங்குளம் பஞ்சாயத்து சார்பாக அகழாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைத்து உள்ளது நிர்வாகம். ஆனால் மின்இணைப்பு கொடுக்கவில்லை. இதனால் ஆரம்ப கட்ட பணிகளை செய்ய இயலாமல் தொல்லியல் ஆய்வாளர்கள் தவித்து வருகின்றனர். குறிப்பாக மின்னஞ்சல் அனுப்ப மற்றும், கம்யூட்டர் பணிகள் செய்ய மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இதனால் இரவு நேரம் தாங்கள் தங்கியிருககும் இடத்துக்கு வந்து தான் மின்னஞ்சல் அனுப்பமுடிகிறது. எனவே காலதாமதம் ஆகிறது. எனவே உடனடியாக புளியங்குளம் முதுமக்கள் தகவல் மையத்துக்கு மின்இணைப்பு கொடுக்கவேண்டும் என்று ஆதிச்சநல்லூர் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.