தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் சூரிய கிரகணத்தினையொட்டி எந்த பிடிப்பும் இல்லாமல் அந்தரத்தில் நின்ற உலக்கையால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று காலை 9.15 முதல் 11.10 வரை சூரிய கிரகணம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து பல்வேறு விசயங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வந்தது . முன்னோர்களும் சூரிய கிரகணம் அன்று உரலில் உலக்கையை வைத்தால் எந்த பிடிப்பும் இல்லாமல் அப்படியே அந்தரத்தில் நிற்கும் என கூறி வந்தனர். இதற்கிடையில் செய்துங்கநல்லூர் ஆர்.சி.கோயில் தெருவை சேர்ந்த வசந்தி என்பவர் தனது வீட்டில் உள்ள உரலை எடுத்து அதில் உலக்கையை வைத்தார் என் ஆச்சரியம் அது நின்றது. இந்த நிகழ்ச்சி காட்டு தீ போல பரவியது. எனவே ஆர்.சி.கோயில் தெருவில் பல வீட்டில் இதுபோல் உரலில் உலக்கை வைத்தனர். அதோடு மட்டுமல்லாமல் வெண்கல சட்டியிலும் உலக்கையை நிறுத்தி பார்த்தனர். அதுவும் நின்றது. தொடர்ந்து தென்னஞ்சோலை தெருவிலும் இதுபோல பல வீட்டில் உரல் உலக்கையை தேடி கண்டு பிடித்து நிறுத்தி பார்த்தனர்.
இதுகுறித்து வசந்தி என்பவர் கூறும் போது, சூரிய கிரகணத்தின் போது இதுபோல உரலில் உலக்கை நிற்கும் என எனது அம்மா கூறியிருந்தார். எனவே நான் தற்போது பயன்பாட்டில் இல்லாமல் ஓதுக்கி வைக்கப்பட்டிருந்த உரலையும் உலக்கையும் எடுத்து சேகரித்து வைத்திருந்தேன். இதற்கிடையில் வாட்ஸ் அப் குரூப்பில் உரலில் உலக்கை நிற்கிறது என் செய்தியை பார்த்தேன். ஆர்வத்தோடு நான் சூரிய கிரகணம் ஏற்பட்ட வுடன் உரலில் உலக்கையை வைத்தேன். என்ன ஆச்சரியம் அது அப்படியே அந்தரத்தில் நின்றது. தொடர்ந்து எங்கள் தெருவில் பலரும் வைக்க ஆரம்பித்தனர். ஒருவர் ஒரு படி மேலே போய் வெண்கல சட்டியில் உலக்கையை நிறுத்தினார். அதுவும் நின்று விட்டது என்று கூறினார்.
இது குறித்து பல்வேறு சமூக வலை தளங்களில் செய்திகள் வந்த வண்ணமாக இருக்கிறது. இதை பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்துவருகின்றனர்.