ஆழ்வார்கள்குளத்தில் தீவிர காசநோய் கண்டறியும் முகாம். 2025ம் ஆண்டிற்குள் காசநோய் இல்லாத வலிமையான தூத்துக்குடியை உருவாக்கும் நோக்கத்தோடு துணை இயக்குநர், மருத்துவப் பணிகள் (காசநோய்) டாக்டர்.க.சுந்தரலிங்கம் அவர்களின் அறிவுறுத்தலின்போல், மாவட்டம் முழுவதும் தீவிர காசநோய் கண்டறியும் முகாம் 2ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதனடிப்படையில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.மு.சுந்தர் அவர்கள் மேற்பார்வையில் திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக ‘தீவிர காசநோய் கண்டறியும் முகாம்” 07.12.2019-10.12.2019 இரண்டு நாட்கள் ஆழ்வார்கற்குளத்தில் நடைபெற்றது.
முகாமிற்கு மருத்துவ அலுவலர் டாக்டா.பிலிப் பாஸ்கர் அவர்கள் தலைமை தாங்கினார். இம்முகாமில் சுகாதார குழுவினர் ஆழ்வார்கற்குளத்தில் வீடு வீடாக சென்று காசநோய் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சளி பரிசோதனை செய்தார்கள். மேலும் இந்த குழுவினர் காசநோய் பாதித்தவர்கள் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள், காசநோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள், சுகாதார கல்வி மற்றும் காசநோய் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.மு.சுந்தர் அவர்கள் கூறுகையில் சென்னையிலிருந்து நவீன நடமாடும் எக்ஸ்ரே வாகனம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை வர உள்ளது. மாவட்டம் முழுவதும் இந்த எக்ஸ்ரே வாகனம் அனுப்பி வைக்கப்படுகிறது. வல்லநாடு பகுதிக்கு எக்ஸ்ரே வாகனம் வரும்12ம் தேதி வரஉள்ளதாகவும் தேவைப்படும் பொது மக்கள் தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இம்முகாமில் முதுநிலை காசநோய் ஆய்வுக்கூட மேற்பார்வையாளர் திரு.சுரேஷ், சுகாதார ஆய்வாளர் திரு.ஷாஹிர், கிராம சுகாதார செவிலியர் திருமதி.நஸீம் பானு, செவிலியர் திருமதி.சுப்புலக்ஷ்மி மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் திரு.அ.அப்துல் ரஹீம் ஹீரா அவர்கள் செய்திருந்தார்கள்.


