முனைவர் த. த. தவசிமுத்து அவர்களின் வரலாறு -முத்தாலங்குறிச்சி காமராசு
(நான் எழுதிய ‘தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத தியாகிகள்’ நூலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டது. அதை முன்னிட்டு முனைவர் த. தவசிமுத்து அய்யா அவர்களைப் பற்றி நான் எழுதிய கட்டுரை இது. அவரின் மறைவையொட்டி இக்கட்டுரையை வெளியிடுகிறேன்.)
முனைவர் த. த. தவசிமுத்து அய்யா அவர்கள், தூத்துக்குடி மாவட்ட தியாகிகளின் வாரிசுகளை ஒன்றிணைக்கும் பணியைச் செய்து வந்தார். அதோடுமட்டுமல்லாமல், தியாகிகள் குறித்த வரலாறு சேகரிக்கச் சென்றால் அவர் நமக்கு வேண்டிய உதவிகளைச் செய்து தருவார்.
நான் களப்பணி சென்றபோது, ஆறுமுகநேரி, திருச்செந்தூர், குலசேகரபட்டினம், உடன்குடி, அமலிநகர், மெஞ்ஞானபுரம், காயாமொழி, குரும்பூர் உள்பட பல பகுதிகளுக்கு உடன் வந்து வேண்டிய உதவிகளைச் செய்தார். ஆங்காங்கே தியாகிகளின் வாரிசுகளை எங்களுக்காகக் காத்திருக்கச் செய்திருந்தார்.
தியாகி த. தங்கவேல் நாடார் – த. சண்முகக்கனி தம்பதியருக்கு மகனாய் ஆறுமுகநேரியில் பிறந்தவர் இவர்.
வரலாறு என்பது புதிய கண்டெடுப்புகள் மூலம் தன்னைப்புதுப்பித்துக் கொள்கிறது. புதிய கண்டெடுப்புகள், அயராத முயற்சியால் வெளிப்படுகின்றன. அவ்வகையில், குடநாடு என்று முற்காலத்தில் போற்றப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தின் பழமையான கற்காலம், சங்ககாலம் முதலான வாழ்வியற் தடயங்கள், கட்டடக்கலை, கல்வெட்டுகள், சிற்பங்கள், நாட்டுப்புறவியல் எனப் பல்வேறு ஆய்வுகளைச் செய்து, அதனைத் தமிழகத் தொல்லியல் கழகம் மூலமாகவும், நாளிதழ்கள் மூலமும் ஆவணப்படுத்திப் பதிவு செய்தவர் ஆறுமுகநேரி முனைவர் த. த. தவசிமுத்து.
இவர் ஓர் ஓவியர்; ஏராளமான ஓவியக் கண்காட்சிகளை நடத்தியுள்ளார். இவரது ஓவியத் திறனுக்கு “கலைச்சுடர்மணி” பட்டத்தைத் தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறை 2000-இல் வழங்கியுள்ளது. 1997-இல் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறையின் கல்வெட்டுப் பயிற்சி பெற்றார். கிராமப்புற மக்களின் பண்பாடு மற்றும் வழிபாட்டில் இடம்பெற்றுள்ள நிகழ்த்துகலையான வில்லிசைக் கதைப்பாடலில் மறைந்துள்ள வரலாற்று உண்மைகளைக் கண்டறிந்து, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
பானை ஓடுகளில் வரலாறு பற்றி ஆய்வு செய்துள்ளார். ஆறுமுகநேரியின் வடக்கே கொட்டமடைக்காடு, சிலாபக்காடு காடுகளில் கேட்பாரற்றுக் கிடந்த பானை ஓடுகள், முதுமக்கள் தாழிகள், சுடுமண் உறைகள், அளவிற் பெரிய செங்கற்கள், அறுக்கப்பட்ட சங்குகளில் காணப்பட்ட கீறல்கள், ஊது உலைகளின் துகள்கள் ஆகியவற்றிடையே பாண்டியரின் மீன் முத்திரைக் கல் இவரால் கண்டுபிடிக்கப்பட்டது. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்ககாலக் கொற்கைத் துறைமுகத்தில், அயல்நாட்டாரும் வந்து போன வியாபார மையம் இது என்ற கூற்றை இவர் ஆய்வு மூலம் நிரூபித்துள்ளார். அவ்விடத்தில் மண் அடுக்குகளில் இராஜராஜ சோழன் காலத்திய கோயில் விமானத்தின் சுடுமண் ஓடுகளைச் சேகரித்து வரலாற்றைப் பதிவு செய்தார்.
சாயர்புரம் தேரியில் இடைக்கற்கால மனிதன் அணிந்த குவாட்ஸ் கல்லிலான பிரமிடு வடிவ அணிகலன் தமிழன் பெருமைக்குச் சான்று. இதுவும் இவரது கண்டெடுப்பாகும்.

ஆறுமுகநேரியில் உள்ள குருநாத சுவாமி கோயிலில் கி.பி. 1660 விஜயநகரக் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டினைக் கண்டெடுத்து, அதில் ஆறுமுகநேரி ‘அசுபநாடு’ என்ற நிர்வாகப் பிரிவில் இருந்தது என்ற குதிரை வணிகத்தோடு தொடர்புடைய புதிய செய்தியை உலகிற்குக்கொண்டு வந்தார்.
2006-இல் விளாத்திக்குளம் புதூர் அருகில் உள்ள சிவலார்பட்டியில் கிடைத்த பலகைக்கல்லின் மூலம், கி.பி. 1012 இராஜராஜசோழன் மெய்க்கீர்த்தியுடன் மாறந்தாய ஈஸ்வரம் கோயிலுக்கு [அங்கு இக்கோயில் தற்போது இல்லை] விளக்கெரிக்க சீவலணன் என்பார் சாவாமூவாப் பேராடு [ஆடுகள் கொடுக்கப்படும்; அவை வளர்ந்து குட்டி போட்டுப் பல தலைமுறையாகத் தொடரும். அவற்றின் பால் வழிபாட்டிற்குப் பயன்படுத்தப்படும்] மற்றும் நிலங்களும் கொடுத்ததைக் கூறி அவ்வூர் மக்களை ஆச்சரியப்பட வைத்தார்.
2005-இல் காயல்பட்டினம் நயினாத்தெருவில் கி.பி. 1433 நோனப்பா காழியாரின் மகள் வீவியாரின் மீசான்கல் வெட்டைக் கண்டெடுத்துள்ளார். அங்கு காசு சேகரிப்பாளர்கள் கொடுத்த பழங்காசுகளை ஆய்வு செய்து, அவைகள் 13-ஆம் நூற்றாண்டின் குலசேகரன் காசு, சேரனின் வில்சின்னம் பொறித்த காசு, விஜயநகர காலத்திய காசு என்பதை விளக்கிச் சொன்னார்.
2011-இல் திருச்செந்தூர் கோயிலில் கண்டுபிடிப்பதற்குக் கல்வெட்டு ஒன்றுமில்லை என்ற நிலையில், வள்ளி ஒளிந்த குகையில் எண்ணெய் பூசி வழிபடப்பட்டு வந்த பலகைக்கல்லில் எழுத்துகள் இருப்பதையறிந்து அதனைச் சுத்தம் செய்து, அது கி.பி. 1656-ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்று கண்டறிந்தார். கி.பி. 1648-இல் டச்சுக்காரர்கள் திருச்செந்தூர் கோயிலைச் சேதம் செய்து சென்ற பின்பு, முத்தையர் என்பவர் திருப்பணி செய்த தகவல் அந்தப் பலகை எழுத்தில் உள்ளது என்பதை உறுதி செய்தார்.
2012-இல் காயல்பட்டினம், ரத்னாபுரியில் உள்ள அழகிய மணவாளப் பெருமாள் கோயிலில் பல கல்வெட்டுகளைக் கண்டறிந்ததுடன், கோயிலின் முன்புறம் வடகிழக்குப் பகுதிச் சுவர்க் கல்வெட்டு, கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் துறைமுகமாயிருந்த காயல்பட்டினம் “உதயமார்த்தாண்டன் பட்டினம” என்று அழைக்கப்பட்டது என்ற புதிய தகவலைக் கூறினார்.
2014-இல் சாத்தான்குளம் புதுக்குளம் கிராமத்தில் பாசனக்கலிங்குக் கல்வெட்டுகள் மூன்றினைக் கண்டெடுத்தார். அக்காலத்தில் நீர்நிலைகள் மீது மக்கள் கொண்டிருந்த அக்கறையைக் கட்டுரையாகத் தந்தார்.
வீரபாண்டியன்பட்டினத்தில் 2016-இல் கல்லறைக் கல்வெட்டினைக் கண்டறிந்தார். சாத்தான்குளம் கொம்பன்குளத்தில் ஸ்ரீ கோதா சமேதா ராஜகோபால சுவாமி கோயிலின் சிற்ப நயத்தையும் கூறி, அங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுச் செய்தியையும் பகிர்ந்தார்.
2015-இல் சாத்தான்குளம் பன்னம்பாறையின் வடக்குப் பகுதியில் பல்லாங்குழி ஓடையருகே சங்ககாலத் தமிழன் விளையாடிய பல்லாங்குழி மற்றும் அதனருகே பெருவழிப்பாதைக் குழிகளையும் கண்டறிந்து, இப்பகுதி தமிழர்களின் பண்பட்ட நாகரிகத்தின் அடையாளம் என்று உலகிற்கு வெளிப்படுத்தினார்.
பன்னம்பாறை சிதம்பர விநாயகர் கோயிலுக்குரிய நிலம் குறித்த கல்வெட்டுடன் கூடிய சூலக்கல்லில், விநாயகருடைய எலியின் வடிவமும் அங்குசமும் புடைச்சிற்பமாக உள்ளதை ஆய்வு செய்து சொன்னார். திருநெல்வேலி அருகே சேதுராயன்புதூரில் நெல்லையப்பர் கோயிலுக்குரிய மயில், வேலுடன் கூடிய சூலக்கல் கண்டெடுத்தார்.
ஆதிச்சநல்லூர், கொற்கை, கழுகுமலை சிறப்புகளை ஆய்வுக் கட்டுரையாகவும், 2012-இல் தூத்துக்குடி மாவட்ட வெள்ளிவிழா மலரில் “தூத்துக்குடி மாவட்டக் கிராமங்களும் பெயர்களும்” என்ற சுவையான கட்டுரையும் வழங்கியுள்ளார்.
நாள் 26-10-2013 அன்று தமிழ்நாடு அரசு நிறுவனமான மதுரை உலகத்தமிழ்ச்சங்க ஓலைச்சுவடிகள் கருத்தரங்கம் நடந்தது. இதில் “சத்திரிய குலப்பெருமாள் கதைப்பாடல்” என்னும் ஆய்வுரையைச் சமர்ப்பித்தார்.
29, 30-01-2014 அன்று செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மற்றும் திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரித் தமிழாய்வுத்துறை இணைந்து நடத்திய ‘பண்டையத் தமிழரின் வாழ்வியலில் நுண்கலைகள்’ தேசியக் கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு சிறப்புச் செய்துள்ளார்.
ஆழ்வார்தோப்பு அருள்மிகு ஏகாந்தலிங்க சுவாமி கோயில், ஆழ்வார்திருநகரி அருள்மிகு கைலாசநாதசாமி கோயில், ஸ்ரீவைகுண்டம் அருள்மிகு கைலாசநாத சுவாமி கோயில், காயல்பட்டினம் அருள்மிகு மெய்கண்டீஸ்வர சுவாமி கோயில், காயல்பட்டினம் அழகியமணவாளப் பெருமாள் சுவாமி கோயில், குலசேகரன்பட்டினம் அருள்மிகு அறம் வளர்த்த நாயகி அம்மன் கோயில், நங்கைமொழி காளகஸ்தீஸ்வர சுவாமி கோயில், கொம்பன்குளம் கோதா சமேதா ராஜகோபாலசுவாமி கோயில், குட்டம் ஆனந்தவல்லி அம்மன் திருக்கோயில் ஆகியவற்றின் வரலாற்றுடன், கட்டடக்கலை, சிற்ப நயங்கள் குறித்துக் கட்டுரை எழுதியுள்ளார்.
தாம் சேகரித்து வந்த ஓலைச்சுவடிகளை நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கியுள்ளார்.
ஆறுமுகநேரியின் தொன்மைச்சிறப்புகள், சுதந்திரப் போராட்டக் காலச் செய்திகளுடன் 2008-இல் “தியாக பூமி ஆறுமுகநேரி” என்ற நூலை வெளியிட்டுள்ளார். 2018-இல் “இந்திய விடுதலைப்போரில் தூத்துக்குடி மாவட்டம்” என்ற நூலை அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
வாழவல்லான் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராகவும், திருச்செந்தூர், சாத்தான்குளம் புதுக்குளம், சாத்தான்குளம் பன்னம்பாறை ஆகிய இடங்களில் தமிழாசிரியராகவும் பணிபுரிந்து பணிநிறைவு பெற்றவர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவரது தந்தை தியாகி த. தங்கவேல் நாடார், பெருந்தலைவர் காமராசர் மற்றும் தியாகசீலர் கக்கனுடன் இரண்டரை ஆண்டுகள் சிறைவாசம் இருந்தவர் ஆவார்.
தஞ்சாவூர், தமிழகத் தொல்லியல் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினர், தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர், மாநிலத் தணிக்கையாளர், ஓவியர் சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளர் எனப் பணியாற்றிய இவர், தென் தமிழகத்தின் தொல்லியல் வரலாற்றில் காணப்படாத புதிய செய்திகளைத் தேடிக்கொண்டிருப்பதும், கண்டெடுப்பதும் தமிழன்னைக்குச் செய்யும் சேவை என்பார். முகநூல் மூலம் பல்வேறு தொல்லியல் வரலாற்றுப் பதிவுகளைச் செய்துவந்தார்.
இவரும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களை ஆவணப்படுத்துவதில் முன்னணியில் இருந்தார்.
என்னோடு களப்பணியில் இவர் ஆறுமுகநேரி, காயாமொழி, குலசேகரபட்டினம், அமலி நகர் உள்பட பல இடங்களுக்கு வருகை தந்த காலத்தினை மறக்க இயலாது. அவருக்கு நாங்கள் தோரணமலையில் வைத்து, ஆதிநாராயணன் அய்யா நினைவு ‘தோரணமலையான் விருது’ வழங்கி கௌரவித்தோம். அந்த நாளை வாழ்வில் மறக்க இயலாது.
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் தியாகிகள் படத்தினை வைக்கும்போது, இவரது தந்தை தியாகி த. தங்கவேல் நாடார் படத்தினை வைக்க ஏற்பாடு செய்தோம். இதற்கிடையில் அய்யாவின் மறைவு எங்கள் அனைவரின் மனதையும் உலுக்கியுள்ளது.
அய்யா வீட்டுக்குச் சென்றால் அவரின் துணைவியாரின் உபசரிப்பு எப்போதுமே உண்டு. எப்போதுமே ஓய்வறியாமல் உழைப்பவர் அய்யா. அவரின் மறைவு ஆசிரியர், ஓவியர், தொல்லியல் ஆய்வாளர், கல்வெட்டு அறிஞர், எழுத்தாளர், சங்க ஒருங்கிணைப்பாளர் என அவர் வகித்த பல்வேறு பொறுப்புகளுக்குப் பேரிழப்புதான்.
அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
– முத்தாலங்குறிச்சி காமராசு


