புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட கொள்கை முடிவு எடுக்காவிட்டால் தேவாலயங்களில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டங்கள் நடத்தப்படும் என்று அமலோற்ப மாதா மதுவிலக்கு சபையினர் அறிவித்துள்ளனர்.
தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அமலோற்ப மாதா மதுவிலக்கு சபை சார்பில் கடந்த நான்கு ஆண்டுகளாக தியாகத்தின் நாளாக அமைதி நாளாக கடைபிடிக்கப்படும் இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி அன்று தமிழகத்தில் மது கடைகளை அடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது
இந்நிலையில் கடந்த வாரம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமலோற்ப மாதா மதுவிலக்கு சபி சார்பில் இந்த ஆண்டு புனித வெள்ளிக்கு தமிழக முழுவதும் மதுக்கடையில் அடைக்க தமிழக அரசின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதற்கு எந்தவித பதிலும் அளிக்கப்படவில்லை. மேலும் டாஸ்மாக் நிர்வாகம் இது அரசின் கொள்கை முடிவு இதில் தலையிட முடியாது என பதில் அளித்துள்ளது.
இதைத் தொடர்ந்து இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அமலோற்ப மாதா மதுவிலக்கு சபை சார்பில் தமிழக அரசு இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு வரக்கூடிய சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் புனித வெள்ளி அன்று தமிழக முழுவதும் மதுக்கடைகளை அடைக்க கொள்கை முடிவு எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளும் குரல் எழுப்ப வேண்டும். இது தொடர்பாக வழங்கப்படும் மனுவை மாவட்ட நிர்வாகம் தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தேவாலயங்களில் கருப்புக்கொடி ஏற்றுவது உண்ணாவிரத போராட்டம் நடத்துவது மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.


