
. தவசி முத்து அய்யா சொல்கிற தகவல் எல்லாமே இதுவரை வெளியே அறிந்திராத தகவலாக இருந்தது. ஒரு வேளை நாம் கேள்விப்படாத தகவலாக கூட இருக்கலாம். பெரும்பாலுமே ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் தியாகிகள் என வ.உ.சி, பாரதியார், வீரபாண்டிய கட்டபொம்மன் என பட்டியலிடுவார்கள் கூறுவார்கள். ஆனால் இங்கே ஒரே கிராமத்தில் எத்தனை தியாகிகள் இருக்கிறார்கள். இதுபோக பட்டியலில் வராமல் எத்தனையோ தியாகிகள் இருக்கலாம். அவர்களைப் பற்றியெல்லாம் நாம் அறிந்து இல்லாமல் இருக்கலாம். தற்போது நாம் அவர்களை தேடிக்கண்டுபிடிக்கும் போது, மேலும் பல தகவல்கள் நமக்கு கிடைக்கலாம்.
கலாராணிக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. ஆர்வத்துடன் அவள் நூலகரிடம் சொன்னாள். “அய்யா உண்மையிலேயே நான் இந்த பிறவி எடுத்த வகைக்கு சந்தோசப்படுகிறேன். எத்தனை தியாகிகள் இந்த பூமியில் இருக்கிறார்கள். இதையெல்லாம் அறியாமல் போய் இருப்பேன். நல்லவேளை எனக்கு இவர்களையெல்லாம் அடையாளம் காட்டினீர்கள்” என சந்தோசப்பட்டாள்.
நூலகர் முத்துக்கிருஷ்ணன் சொன்னார். “இது ஊடகங்கள் பிரபலமாக உள்ள காலமாகும். வாட்ஸ்அப், முகநூல், இன்ஸ்டகிராம் என வலைதளப்பக்கம் நிறைய உள்ளது. குறிப்பாக இக்கால தலைமுறைகள் படிப்பதில் ஆர்வம் காட்டவில்லை என அனைவரும் கூறி வருகிறோம். ஆனால் தற்போது வந்த கொரோனா காலத்தில் படிக்கும் குழந்தைகள் எல்லோரும் செல்போன் மூலம் படிக்க வேண்டும் என்று கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உலக அதிசயங்களை எல்லாம் செல்லில் தட்டிப்பார்த்து கண்டுகொள்ளும் காலம் வந்து விட்டது. இதனால் மறைக்கப்பட்ட விசயங்களை எல்லாம் மக்கள் முன்னால் கொண்டுவள் சமூக வலைதளம் மூலம் காட்டி வருகிறார்கள். இதில் மாணவர்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதோடு அதிசய அபூர்வ செய்திகளை படிக்க மக்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் உன்னை போன்ற மாணவிகள் இது போன்ற அறியப்படாத தியாகிகள் குறித்து ஊடகங்களில் பேசினால் அவர்களை பற்றி எல்லா இடங்களுக்கும் கொண்டு சேர்த்து விடலாம். ஆகவே திருச்செந்தூர் பகுதியில் ஆறுமுகநேரி போன்ற ஊரில் மிக அதிகமாக விடுதலை போராட்ட வீரர்கள் இருந்தார்கள் என்ற செய்தியை நிச்சயம் நாம் வெளியே தெரிய வைத்து விடலாம்” என்றார்.
கலா ராணி அமோதித்தார். “நிச்சயம் நான் ஒரு யூ டியூப் சேனல் ஆரம்பித்து அதில் மறைக்கப்பட்ட தியாகிகள் பற்றி கூறப்போகிறேன்” என்று சந்தோசமாக கூறினாள்.
இருவரும் சந்தோசமாக கிளம்பும் போது தான் தவசி முத்து அய்யா மேலும் ஒரு தகவலை சொன்னார். “திருச்செந்தூர் தாலூகாவில் விடுதலை போராட்ட வீரர்கள் பற்றிய ஆவணங்களும் கல்வெட்டுகளும் மிக அதிகமாக உள்ளன”. என்றார்.
உண்மைத்தான் ஆறுமுகனேரி பேரூராட்சியில் கட்டிடத்தில் தியாகிகள் கல்வெட்டு உள்ளது. அதை தற்போது சென்றாலும் பார்க்கலாம். தியாகி த.தங்கவேல் நாடார் வீட்டின் அருகே காங்கிரஸ் கொடிக்கம்பத்தில் கல்வெட்டு உள்ளது. அதிகமான சுதந்திரபோராட்ட வீரர்களின் சுவடுகள் திருச்செந்தூர் பகுதியில் உள்ளது. ஆனால் இந்த இடத்துக்கெல்லாம் பெரிய அளவில் விளம்பரம் இல்லை. இதை தொடர்ந்து விளம்பர படுத்தவும் யாரும் முயலவில்லை. பாடத் திட்டங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் பகுதியில் இதுபோன்ற வரலாற்று நிகழ்வுகள் நடந்த இடங்கள் குறிப்பிடப்படவில்லை. இதையெல்லாம் நாம் தான் கொண்டு வரவேண்டும்.
அவர்கள் கிளம்பும் முன்பு, தவசி முத்து மாறன் அய்யா அவர்களிடம் “கொஞ்சம் இருங்கள் இன்னும் நிறைய தகவல்கள் விடுபட்டு விட்டது. அதைப் பற்றி உங்களிடம் கூறுகிறேன்”. என்றார்.
“என்ன தகவல் கூறுங்கள் அய்யா” கலாராணி ஆர்வத்துடன் கேட்டாள்.
தியாகிகள் ஜெயிலுக்கு செல்லும் போது அந்த வீரர்களுக்குப் பொருளுதவி, செய்தது பற்றி முனைவர் தவசி முத்து மாறன் பேசஆரம்பித்தார்.
உண்மைத்தானே இன்று ஆளும் கட்சியை எதிர்த்து போராடி விட்டு அவ்வூரில் வசிக்க முடியவில்லை. பல்வேறு வழக்கு போட்டு அவர்களை ஜெயிலில் தள்ளி விடுகிறார்கள். அப்படி இருக்கும் போது அந்த காலத்தில் ஆங்கிலேயர்கள் விடுவார்களா? ஆகவே ஜெயிலுக்கும் போகும் வீரர்கள் குடும்பத்துக்கு, வழக்கு செலவுக்கு என செலவு செய்ய முக்கியமானவர்கள் வேண்டும் அல்லவா? அப்படி செலவு செய்தவர் அய்யாவின் தந்தை தங்கவேல் நாடாரும் அப்படித்தான். மேகநாதன் என்ற விடுதலை போராட்ட வீரரும் இதுபோன்ற பல தியாகிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகிறார். அவரை ஆங்கிலேய அரசால் சிறையே பிடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு டிமிக்கி கொடுத்து, போலீஸ் கண்ணில் மண்ணை தூவி விட்டு மறைந்து வாழ்ந்தவர். லோன் துரை கொலை வழக்கு குற்றவாளிகளான தியாகிகளை தூக்கு மேடையில் இருந்து காப்பாற்றி கொண்டு வர மிகவும் காரணமாக இருந்தவர்.
அது பற்றிய தகவல்களை தவசிமுத்து மாறன் அய்யா கூறினார்.
“அந்த காலத்தில் லோன் துரையை கொலை செய்ய திட்டமிட்டதே எங்கள் வீட்டில் வைத்துதான். எங்கப்பா முன்னிலையில் தியாகி காசிராஜன் துப்பாக்கியை சரி செய்து கொண்டிருந்தார்.
எங்கள் வீட்டு தர்சாவில்தான் சுதந்திர போராட்ட வீரர்கள் பயிற்சி எடுப்பார்கள். அப்படி அவர்கள் பயிற்சி எடுக்கும் போதுதான் அந்த சம்பவம் நடந்தது. யாரும் எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு வெடித்தது. அதில் காசிராஜன் அவர்களின் கையில் குண்டு பாய்ந்தது. ரத்தம் கொட்டியது. ஆனால் அவர் அதை பொருட் படுத்தாமல் இருந்தார். அந்த அளவுக்கு வைராக்கியமாக சுந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நம்மவர்கள். இவர்களை பற்றித்தான் லோன்துரை கொலை வழக்கு குறித்து பேசும் போது நிறைய தகவல் வெளிவரும்” என்றார் அய்யா.
கலாராணிக்கு ஆர்வம் அதிகரித்தது. “ஆகா. நாம் நல்ல இடத்தில் நல்ல வழிகாட்டியை தான் தேடிவந்து இருக்கிறோம்” என அறிந்து கொண்டாள். நூலகர் முத்துகிருஷ்ணனும் சிரித்துக்கொண்டே சொன்னார். “ தவசி முத்து அய்யா மிகப்பெரிய தகவல் சுரங்கம். அவர் கிட்ட கேட்ட கேட்க நிறைய தகவல் வரும்”. என்றார்.
உண்மைத்தான் அய்யாவை கூட்டிக்கொண்டு நான் குலசேகரபட்டினம் செல்லவேண்டும். அங்கே நாம் நிறைய தகவலை சேகரிக்க வேண்டும் என்று முடிவு செய்தாள். அய்யா விடம், “ அய்யா குலசேகரபட்டினம் வரை வரஇயலுமா?” என்று கேட்டாள்.
அய்யா சிறிது நேரம் யோசித்தார்கள். கொஞ்சம் சோர்வாகத்தான் இருந்தது. ஏற்கனவே நிறைய அலைந்து விட்டார். ஆனாலும் விடுதலை போராட்ட வீரர்கள் வரலாறு வெளியே தெரியவேண்டும் . இதை தேடி ஒரு இளந்தலைமுறை வந்துள்ளது. அந்த பெண் மூலம் இதையெல்லாம் வெளியே கொண்டு வர வேண்டும் என்ற ஆர்வத்தில் அவர்களுடன் கிளம்ப தயாரானார்.
“இன்றைய தலைமுறைக்கு இந்த பகுதியில் உள்ள வழக்கு குறித்து விவரம் தெரியவேண்டும். அதற்காக நான் உங்களிடடம் இதையெல்லாம் காட்டித்தர வருகிறேன்” என்று ஆர்வத்துடன் கிளம்பினார்.
இவர்களின் கார் -குலசேகரபட்டினம் நோக்கி கிளம்பியது.
அங்கே அமலி நகர் என்ற ஊர் பலகை இருந்தது. அதை பர்த்தவுடன் தவசிமுத்து மாறன் அய்யா கூறினார் “இந்த அமலி நகர் ஊரில்தான் தியாகி பெஞ்சமின் அவர்கள் இல்லம் உள்ளது. அவரது நினைவிடம் இந்த ஊரில் தான் உள்ளது. இங்குள்ள கல்வி நிறுவனத்தில் இவரது சிலை உள்ளது. நியூ டெல்லியில் தமிழர்களுக்காக அவர் போராடி ஒரு தமிழர் குடியிருப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். அந்த குடியிருப்புக்கு “பெஞ்சமின் குடியிருப்பு” என்று பெயர்” என கூறினார்.
சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு விரிந்துகொண்டே போகிறதே. குறைந்த பட்சம் 27 வீரர்கள் இருப்பார்களா? என நினைத்துப் பட்டியலிட்டால் சுமார் 300 பேரை தொடுவார்கள் போல தெரிகிறதே. இப்போது பெஞ்சமின் என்பவரை போற்றுகிறார்கள். தென்னகத்தில் கடற்கரையோரத்தில் பிறந்த இவரது பெயர் தலைநகரான புது டெல்லியில் இருக்கிறதா?
ஆம். லோன்துரை கொலைவழக்கின் குற்றவாளிகளில் பெஞ்சமின் அவர்களும் முக்கியமானவர்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே ஆலந்தலையை தாண்டி குலசேகரபட்டினம் வந்து சேர்ந்தார்கள்.
“குலசேகரபட்டினத்தில் தியாகிகளுக்கு நினைவு மண்டபம் அரசு கட்டி உள்ளதா?” என கேட்டார் கலாராணி.
“ம். கூம் சுதந்திர போராட்டத்தில் குலசேகரன்பட்டிணம் பொன்விழா கொண்டாடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை குலசேகரபட்டிணம் கிராம இளைஞர் நற்பணி மன்றம் ஏற்பாடு செய்திருந்தது. அவர்கள் தான் தியாகிகளுக்கு சிறிய நினைவிடம் கட்டி, அதில் கல்வெட்டுகளை வைத்துள் ளார்கள்”
அய்யா கூறி முடிக்கவும் சரியாக அந்த இடத்துக்கு போய் சேர்ந்தார்கள். பயணிகள் தங்கும் இடம் போலவே அந்த இடம் இருந்தது.
எவ்வளவு பெரிய தியாகம் செய்த தியாகிகளுக்கு இங்கே பெரிய அளவில் நினைவிடம் அரசு சார்பில் இல்லை. மூன்று பேருக்குமே மனதுக்கு கஷ்மாகத்தான் இருந்தது.
அந்த இடத்தில் இறங்கி பார்வையிட்டனர். போதிய பாதுகாப்பும் இல்லை. பராமரிப்பும் இல்லை. குப்பை சேகரிக்கும் இடம் போலவே இருந்தது.
அந்த இடத்தினை பார்த்தவுடன் கலாராணிக்கு வேதனையாக இருந்தது.
“சுதந்திர போராட்டத்தின் போது, குலசேகரன் பட்டினத்தில் நமது தாய்த்திருநாட்டின் தன்மானத்தைக் காக்க போராட்டம் நடந்தது. அந்நிய ஆங்கில அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற நடந்த எண்ணற்ற விடுதலைப் போட்டங்களுக்கு முன்னோடி நமது தென்னகம் என்பது நமக்கெல்லாம் தெரிந்த ஒன்றே. நாடு விடுதலைபெற அனைத்துத் தியாகமும் செய்த நமது முன்னோர்களை நாடு முழுவதும் நினைவு கொள்ளும் சுதந்திர தினவிழா பொன் ஆண்டு கொண்டாடும் வேளையில், குலசேகரபட்டினம் ஊரைத்தலைமை இடமாகக்கொண்டு சுற்றுவட்டாரத்தில் புரட்சி ஏற்பட்டது. இளைஞர்கள் நடத்திய புரட்சிகளை இதயத்தில் ஏற்றி, எதற்காக அவர்கள் பாடுபட்டார்களோ அதை நன்கு நிலைபெறச் செய்வோம்”. என இளைஞர்கள் உருவாக்கியதே இந்த நினைவு மண்டபம்.”
தவசிமுத்து அய்யா ஒவ்வொரு தகவலாக சொல்ல கலாராணிக்கு குலசேரபட்டினம் லோன்துரை கொலை வழக்கு பற்றி அறியவேண்டும் என கூடுதலாக ஆசைப்பட்டாள். எனவே அய்யா மூலம் அந்த வரலாறு நமக்கு கிடைத்து விடும் என ஆனந்தம் அடைந்தாள்.
அவள் நினைத்தது போலவே தவசி முத்து அய்யா பேச ஆரம்பித்தார்கள்.
“நாட்டின் தந்தை மகாத்மா காந்தி 1942&இல் அறிவித்த ‘செய் அல்லது மடி’ என்ற கொள்கையைக் கொண்ட “வெள்ளையனே வெளியேறு இயக்கம்” என்ற ஆகஸ்டு புரட்சியில் குலசேகரன்பட்டணத்தைத் தலைமை இடமாகக்கொண்டு நடைபெற்றது. அதன் சுற்று வட்டார புரட்சி இளைஞர்கள் 1942 செப்டம்பர் 19 இல் சுற்று வட்டாரத் தந்திக் கம்பிகளை அறுத்துச் செய்தித் தொடர்பைத் தடை செய்தனர். குலசேகர பட்டினம் உப்பளத்தில் இருந்த 6 காவலர்களை காயப்படுத்தினர். அங்கிருந்த துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு உப்பளத்தின் அரசப் பிரதிநிதியான துணை இன்ஸ்பெக்டர் ‘வில்பர்ட் லோன்’ யை படுகாயப்படுத்திக் கொலைசெய்தனர்.
“புரட்சி இளைஞர்கள் கட்டுப்பாட்டில் இருந்த குலசேகரன் பட்டினமும் அதன் சுற்று வட்டாரமும அவர்களால் சுதந்திரபகுதி என அறிவிக்கப்பட்டது ஒரு வார காலத்திற்குப்பின் ஆங்கில அரசின் பெரு முயற்சியால் பிடிபட்ட புரட்சி இளைஞர்களில் இராசகோபாலன், காசிராசன், ஏ எஸ். பெஞ்சமின் ஆர். செல்லத்துரை, கே. பொன்னையா நாடார், பி.நாராயணபிள்ளை, தர்மம் கோயில்பிள்ளை. ரத்னசாமி என்ற பெருமாள் நாடார், மகராஜ நாடார், ஆறுமுகநாடார், தேவஇரக்க நாடார், தங்கையா நாடார், கனி நாடார், செல்லத்துரை. நாராயணன், நெல்லையப்ப சேர்வை, சிவந்திக்கனி என்ற முத்துமாலை நாடார், தங்கசாமி நாடார், மோட்டார் என்று அழைக்கப்படும் ரத்தினசாமி, பூவ லிங்கம் நாடார், இலட்சுமணன், தங்கையா என்ற ஆசீர்வாதம், சாமிநாடார், துரைசாமி நாடார். இலட்சுமண நாடார், வி.மந்திரகோன் உள்பட 26 பேர் மீது காவல்துறை லோன்துரை கொலை வழக்கு பதிவு செய்தனர்”.
என்று கூறிவிட்டு பெரும்மூச்சு விட்டார்.
உண்மைதானே சுதந்திர போராட்ட தியாகிகள் என்று பல்வேறு இடத்தில் பல்வேறு மக்களை கொண்டாடும் சமயத்தில் நமது ஊரில் பிரமாண்டமாக நடந்த ஒரு கொலை வழக்கு வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளது. இப்படி கூட சொல்லலாம். விளம்பரம் இல்லாமல் வெளியே தெரியாமல் இருக்கிறது. ஆகவே இந்த தகவலையெல்லாம் வெளியே கொண்டு வரவேண்டும் என்றால் இளைஞர்கள் தான் பாடுபட வேண்டும்.
“சரி. வாருங்கள் இந்த வழக்கில் கொலையான வெள்ளைத்துரையான லோன் துரை கல்லறையை உங்களுக்கு காட்டுகிறேன்” என்று அவர்களை அழைத்துக்கொண்டு சென்றார்.
அவர்கள் மூவரும் அங்கிருந்து கிளம்பி கடற்கரை ஓரத்துக்கு சென்றார்கள். கம்பீரமாக இந்த மாகசமுத்திரம் லோசாய் அலை அடிக்க, அருகில் ஒய்யாமராய் வளர்ந்து நிற்கும் பனைமரங்களுக்கு அடியில் அங்கே ஒரிடத்தில் லோன் துரை கல்லறை மிகவும் கம்பீரமாக இருந்தது. பார்பதற்கே மிக பிரமாண்டமாக இருந்தது.
அருகில் சென்று பார்த்தார்கள். “வெள்ளைத்துரைக்கு இப்படி கல்லறையா?” ஆச்சரியத்துடன் பார்த்தாள் கலாராணி.
“அது தான் நமது இந்திய திருநாடு. வந்தோரை வாழவைக்கும் தமிழ் நாடு” நூலகர் சிரித்தார்.
“ஆமாம் மணியாச்சியில் வாஞ்சி நாதனால் கொலைசெய்யப்பட்ட ஆஷ்துரை கல்லறை திருநெல்வேலி பாளையங்கோட்டை இங்கிலிஷ் சர்ச்சிக்குள் ஆஷ் துரை கல்லறை ஒய்யரமாக உள்ளது. தூத்துக்குடியில் சப் கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆஷ் துரைக்கு நினைவிடம் உள்ளது”. நூலகர் இந்த தகவலை கூறினார்.
குலசேகரபட்டினத்தில் லோன் துரைக்கு கல்லறை மிகப்பிரமாண்டமாக உள்ளது. ஆனால் நமது தியாகிகளுக்கு பஸ் நிலையம் போல ஒரு சிறிய இடத்தில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. யாரு யாருக்கோ நினைவு மண்டபம் கட்டி பார்க்கும் அரசு 26 தியாகிகளுக்கு ஒரிடத்தில் நினைவு மண்டபம் கட்ட ஏன் இப்படி காலம் தாழ்த்துகிறார்களோ? தெரியவில்லை.
தவசி முத்து அய்யா கூறினார். “பார்தீர்களா லோன் துரை கல்லறை , ஆங்கிலேயர்கள் கல்லறையெல்லாம் தனி கல்லறை தோட்டத்தில் கடற்கரையில் மிகப்பிரமாண்டமாக உள்ளது. ஆனால் நமது தியாகிகளின் மண்டபம் சிறு பஸ் நிலையம் மாதிரியே ஊருக்குள் இருக்கிறது. அது மட்டுமா? 75 ஆண்டு சுதந்திர பொன்விழா ஆண்டில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலத்தில் தியாகிகள் புகைப்படத்தினை காட்சிப்படுத்தினார்கள். அதில் 300 பேர் கொண்ட தூத்துக்குடி தியாகிகள் மத்தியில் 27 தியாகிகள் புகைப்படத்தினை மட்டும் காட்சிப்படுத்தி விட்டு மற்றவர்கள் பற்றிய தகவல் எதுவுமே வைக்கவில்லை”.
அவர் சொல்லுவதும் உண்மைத்தான். லோன் துரை கொலைவழக்கில் தூக்கு மேடை வரை சென்று உயிர்தப்பித்தவர்கள் புகைப்படம் இல்லை. சுதந்திரபோராட்ட த்துக்கு பிறகு மக்கள் பிரதிநிதியாக வாழ்ந்து பல்வேறு சாதனைகள் புரிந்தவர்கள் புகைப்படமும் அங்கு வைக்கவில்லை. அது மிகப்பெரிய குறைதானே. அதை ஆட்சியாளர்களிடம் யார் எடுத்து சொல்வார்.
தவசி முத்து அய்யா சொல்லசொல்ல கலாராணியும், நூலகர் முத்துகிருஷ்ணன் அய்யாவும் அமைதியாக இருந்தார்கள்.
ஆனாலும் இவ்வளவு பிரமாண்டமான லோன் துரை கொலை வழக்கை பற்றி விரிவாக பேசவேண்டும் என்ற எண்ணமும் ஆர்வமும் அவர்களுக்கு தோன்றி கொண்டிருந்தது.
தவசிமுத்து மாறன் அய்யா கூறினார். எனக்கு நினைவு இருக்கிறது. தியாகிகள் நினைவு மண்டபத்தினை அரசு கட்டி அரசு விழா எடுக்காவிட்டாலும், நிகழ்ச்சி பெரும்மக்களால் மிகச்சிறப்பாகத்தான் நடந்தது. அதனால் எல்லோருக்கும் பெருமைதான்.
26.-1.-99 அன்று குடியரசு நன்னாள் அன்று குலசேகரபட்டணம் தியாகிகள் நினைவு கூடம் ஸ்தூபி பூங்கா திறப்பு விழா நடந்தது. இதில் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கொடியேற்றி, நேதாஜி பூங்காவை திறந்து வைத்தவர் மா.பொ.குருசாமி என்பவராவார். முனைவர் மா.பா.குருசாமி திருச்செந்தூரைச் சேர்ந்தவர். திறப்பு விழாவின் போது இவருக்கு 63 வயது இருக்கும். கல்லுபட்டி காந்தி நிகேதன் ஆசிரமத்தில் 2 ஆண்டுகள் பயிற்சியுடன் மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் காந்திய சிந்தனை இயக்குனராக 3 ஆண்டுகள், ஆதித்தனார் கல்லூரியில் பொருளாதார துறை விரிவுரையாளராக பேராசிரியராக மற்றும் முதல்வராக 25 ஆண்டுகள் பணி ஆற்றிப் பெருமை சேர்த்தவர். காந்திய மணம் கமழும் 102 நூல்களின் ஆசிரியர். மத்திய மாநில பரிசுகள் பல பெற்றவர். வள்ளல் அண்ணாமலைச் செட்டியார் நினைவு பரிசும் சிறந்த ஆசிரியர் மற்றும் சிறந்த கல்லூரி முதல்வருக்கான மாநில அரசின் விருதும் இவர் பெற்றிருந்தார்”.
“சிறப்பு தானே சிறப்பான 26 பேருக்கு நினைவு மண்டபம் திறக்க வேண்டும் என்றால் இதுபோன்ற முக்கியமான நபர்கள் தானே வேண்டும்”. நூலகர் முத்துக்கிருஷ்ணன் பெருமை பட்டுக்கொண்டார்.
“இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியவர் முன்னாள் எம்.எல்.ஏ தியாகி செல்வராஜன் அவர்கள். 1948 முதல் 1955 வரை நெல்லை ஜில்லா போர்டு மெம்பராகவும் மற்றும் உபதலைவராக இருந்தார். 1955, 1957, 1962, 1967 வரை மூன்று முறை சாத்தான்குளம், திருச்செந்தூர் தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்”.
“ஆமாம் இவரை பற்றித்தான் நீங்கள் ஆறுமுகநேரியில் வைத்து நிறைய சொல்லியிருக்கீறிர்களே. அவர் வீட்டுக்கு கூட நாங்கள் சென்று இருக்கிறோம்”. கலாராணி சிரித்தாள்.
இந்த நிகழ்ச்சியில் குலசேகரன்பட்டிணம் ஊராட்சி மன்றத் தலைவராக ஜவர்ஹோம் முன்னிலை வகித்தார். இவர்களது தந்தையார் மஸ்ஸீன் மரைக்காயர் பல ஆண்டுகள் குலசேகரன்பட்டிணம் பேரூராட்சி மன்றத் தலைவராக இருந்தவர். சிறந்த காங்கிரஸ் தொண்டர் பொதுநல ஊழியர். குலசைவாழ் மக்களின் பேரன்பைப் பெற்றவர்.
சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவிடத்தினை திறந்து வைத்தவர் தியாகி இலட்சுமி காந்தன். இவர் முதலமைச்சரின் ஒருங்கிணைப்பாளர். இளமையிலேயே நம் நாட்டு விடுதலைப்போரில் பங்குபெற்று 3 மாத காலம் சிறையில் இருந்தவர். தமிழக தியாகி பென்சன் பெற்று வந்தார். சிறந்த தமிழறிஞர். தந்தையார், தாயார் சகோதரி அனைவரும் தேச விடுதலை இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்ற பெருமை உடையவர்கள். இவர் நாவலர் சோமசுந்தர பாரதியாரின் பேரனுமாவார்.
தியாகிகளின் தியாக வரலாறு நூலை வெளியிட்டவர், தூத்துக்குடி துறைமுக சபை தலைவர் மச்சேந்திரநாதன். இவரது தந்தையார் வேலப்பனூர் சுப்பிரமணி அவர்கள். ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி. திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வணிக நிர்வாக இயல் துறை மாணவர் பட்ட மேற்படிப்பை தந்தையாரின் ரயில்வே பணி இடத்திற்கு ஏற்ப கொச்சி பல்கலைக்கழகத்தில் முடித்தார். 1977ல் 1979ல் குன்னூர் சிதம்பரம் சப் கலெக்ட்ராகவும் தஞ்சை கலெக்டராகவும் அரசின் நிதித்துறை உணவுத்துறை போன்ற பலதுறைகளில் இணைசெயலாளராகவும், மீன் வளத் துறை பூம்புகார் கப்பல் கார்ப்பரேஷன், சுற்றுலாத்துறை, சிறுசேமிப்புத் துறை போன்றவற்றில் மேலாண்மை இயக்குநராகவும் துணை தேர்தல் அதிகாரியாகவும் சிறந்த முறையில் பணியாற்றி தூத்துக்குடி துறைமுகச்சபை தலைவராகவும், சென்னைத் துறைமுகச்சபை பொறுப்பு தலைவராகவும் பணி செய்து கொண்டிருந்தவர். திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் முதல் ஐ.எப்.எஸ், ஐ.எ.எஸ் தேர்ச்சிப் பெற்ற மாணவர் என்ற பெருமைக்குரியவர்.
இந்த நூலின் முதல் பிரதியை பெற்றவர். இரா.ஸ்ரீனிவாசன் . இவர் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி. இவரது தந்தையார் அமரர் இராஜகோபாலச்சாரி மன்னார்குடி ஊராட்சி மன்றத் தலைவராயிருந்தார். தேச விடுதலைப் போரில் 1932&ல் வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகத்தில் ராஜாஜியுடன் பங்கேற்றார். 1941&இல் தனிநபர் சத்தியாக்கிரகத்தில் தண்டனை பெற்றார். அலிப்புரம் சிறையில் ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார். 1936 இல் வடுவூர் ஸ்ரீராமர் கோவிலில் அரிஜனங்களுடன் ஆலய பிரவேசம் செய்தார். அதன் காரணமாக சமூக பிரதிஷ்டம் செய்யப்பட்டார். தாயார் மன்னார்குடி ஊராட்சி மன்ற உப தலைவராக இருந்தார். 1937 இல் ராஜாஜி சென்னை இராஜ்ய முதலமைச்சர் பதவியை விட்டு விலகிய போது மன்னார்குடி நகராட்சி உபதலைவர் பொறுப்பிலிருந்து விலகினார்.
தியாகிகளின் கல்வெட்டு திறப்பாளர் கணபதிராமன். இவரும் ஒரு முக்கியமான ஆளுமை. இவர் தென்காசி, அய்யாபுரத்தினைத் சேர்ந்தவர். தினத்தந்தி சி.பா.சிவந்திஆதினத்தனார் அவர்கள் தென்காசி கோபுரம் கட்டும் போது தென்காசி கோயிலுக்கு தலபுராணம் எழுதியவர்.
சிறந்த தமிழறிஞர். ஜனாதிபதி விருது பெற்றவர். காட்சிக்கு எளியவர். நெல்லை, தூத்துக்குடி மாவட்ட சுதந்திரப்போர் வீரர்களின் வரலாற்றினை “பொங்கி எழுந்த பொருநை” என்ற பெயரால் நூலாக்கி வெளியிட்டு பெருமை பெற்றவர். தனி அதிகாரி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர்.
அதோடு மட்டுமல்லால் இந்த நிகழ்ச்சியில் சுதந்திரபோராட்ட தியாகிகள் ஆறுமுகநயினார், மேகநாதன், மங்களா பொன்னம்பலம், முத்து, ஆறுமுக பாண்டியன், சரவணப் பெருமாள், ரத்தினசாமி , புகாரி போன்ற தியாகிகள் கலந்துகொண்டனர்.
தவசிமுத்து அய்யா, தகவல் சுரங்கம். பல தகவல்களை நமக்கு தந்து கொண்டே இருந்தார். தற்போது தியாகிகள் நினைவு மண்டம் திறப்பு விழா பற்றிய இவரது தகவல் நம்மை பிரமிக்க வைக்கிறது. திறப்பு விழா மிகப்பிரமாண்டமாக நடந்துள்ளது. ஆனால் அது பராமரிப்பு இன்றி கிடக்கிறது. என்று நினைக்கும் போது தான் மனதுக்கு வருத்தமாக இருந்தது.
இந்த வேளையில் தான் பொங்கி வரும் பொருநை நூலின் ஆசிரியர் கணபதி ராமன் குறித்து அய்யாவிடம் கேட்க வேண்டும் என்ற ஆசை கலாராணிக்கு ஏற்பட்டது.
“அய்யா கணபதி ராமன் அய்யா என்ற பெயரை நான் அடிக்கடி கேட்டிருக்கிறேன். குறிப்பாக தென்காசி கோயில் தல புராணம், குற்றால தல புராணம் என பல நூல்களை எழுதிய அறிஞர். அவர் நமது மாவட்ட தியாகிகள் வரலாற்றை எழுதியிருக்கிறார் என்பது சந்தோசமாக இருக்கிறது. அவரைப் பற்றி கொஞ்சம் கூறுங்களேன்” என்றாள்.
அந்த தகலை கூற நூலகர் முத்துக்கிருஷ்ணன் முன்வந்தார். இவர் நூலகத்தில் பொங்கியெழுந்த பொருநை நூல் இருக்கிறது. அந்த நூலில் இருந்து கணபதி ராமன் அய்யாவை பற்றி தெரிந்துகொள்ளலாம். என்று கூறி விட்டு அவர் பேச ஆரம்பித்தார்.
பொங்கியெழுந்த பொருநை என்ற நூல், பொருநையாறு என்று போற்றப்படும் தாமிரபரணியாறு பாயும் திருநேல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் விடுதலைப் போரில் கலந்துக் கொண்ட தியாகச்செம்மல்களின் வரலாற்று ஏடு. இந்த நூலின் ஆசிரியர் ச.கணபதி ராமன்.
தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள “அய்யாபுரம்” என்ற அழகிய கிராமத்தில் பிறந்தவர் ச.கணபதி ராமன். தமிழில் முதுகலை, முனைவர் பட்டம் பெற்று, தமிழ்த்துறை தலைவராகத் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சிறந்த பணி செய்தவர். இளைஞர் நலத்துறை இயக்குநர்- மனோன்மணியம் சுந்தரனார் பல்கைலக்கழகம், தனி அதிகாரி, அஞ்சல் வழிக் கல்வித்துறை அண்ணாமலைப் பல்கைலக்கழகம் ஆகிய பணிகளை இவர் ஆற்றியுள்ளார்.
பொருநை நாடு, வாழ்வாங்கு வாழ்ந்தவன், தமிழ் இலக்கிய வரலாறு, திருநெல்வேலிப் பகுதியில் சிறு தெய்வ வழிபாடு போன்ற சுமார் 20 நூல்கள் எழுதி வழங்கியவர். சிறந்த பேச்சாளர். “வாசீக கலாநிதி” என்ற சிறப்புப் பட்டம் பெற்றவர்.
இவர் தனது பொங்கியெழுந்த பொருநை என்னும் நூல் எப்படி உருவானது? என்று கூறியுள்ளார்”.
“அப்படியா? என்ன சொல்லியிருக்கிறார்”.
அறிஞர் தியாகி சோமயாசுலு தொகுத்த, நெல்லை மாவட்ட சுதந்திரப் போராட்ட வரலாறு”, சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ. சிவஞானம், எழுதிய விடுதலைப்போரில் தமிழகம்”, அறிஞர் ராமாலட்சுமி எழுதியுள்ள “தமிழ்நாட்டில் காந்தி” போன்ற எண்ணற்ற நூல்கள், எனக்கு, “பொங்கியெழுந்த பொருநை” என்ற நூலைப்படைப்பதற்குப் பெருந் துணை புரிந்தன என்று கூறியுள்ளார்.
பொருநை நாட்டில் இன்றும் வாழ்ந்து வரும் தியாகிகளின் கருத்துக்கள் இந்நூல் வளம் பெற உதவின. என்று அவர் அந்த நூல் எழுதும் போது இருந்த தியாகிகளையும் நினைவு படுத்தியுள்ளார்.
திருச்செந்தூர் ஆறுமுகநேரியில் வாழும், அறிஞர் ஆன்மீகச் செல்வர் தியாகி எம்.எஸ். செல்வராஜ் எம்.எல்.ஏ அவர்கள் அரிய பெரிய கருத்துக்களையும், நீதி மன்றத் தீர்ப்புக்களையும் இந்நூலுக்கு தந்து மேலும் அழகு சேர்த்தார்கள்.
இந்தியத் திருநாட்டில் தம்முடைய தன்னலத்தையே அடிப்படையாக் கொண்டு, அரசியல் நடத்தி வன்முறைக்கு வித்திடும் அரசியல் வாதிகள் இன்று நிறைந்துள்ளனர். அவர்களுக்கு இந்தநூல் ஒரு பாடமாக அமைய வேண்டும் என்று கருத்தைதெரிவித்து, தியாகச் செம்மல்களின் வரலாற்றை ஓரளவு எழுதியுள்ளார். பொருநைக்கரை இளைஞர்கள் பல்லாயிரம் பேர் விடுதலைப் போரில் கலந்து கொண்டார்களெனினும் அவர்களின் பெயரும் முகவரியும் முழுமையாகத் தெரியவில்லை. அரசின் பதிவேடுகளும், அறிஞர்களின் ஏடுகளும், கண்டறிந்த செய்திகளும், இந்நூல் வடிவம் பெறத் துணை செய்தன. என்று அவர் கூறியிருந்தார். அவர் மனதில் பலபேரை குறிபிட்டவில்லையே என்ற ஏக்கம் இருந்தது.
எத்தனையோ பல தியாகிகள் தங்கள் பெயரையும் முகவரியினையும் குறிப்பிடாது ஒதுங்கி விட்டனர். அவர்களின் பெயரையும் வரலாற்றையும் ஆராய்ந்து அடுத்த பதிப்பில் வெளியிட முனைவேன். என்றும் தகவல்தெரிவித்துள்ளார். அவர் சொன்னதை சொல்லி முடித்தவுடன் முத்துக்கிருஷ்ணன் மேலும் மகிழ்ச்சியுடன் பேச ஆரம்பித்தார்.
பிற்காலத்தில் நிறைய பேரு சுதந்திரப்போராட்ட தியாகிகள் பற்றி எழுதியுள்ளார்கள் அதில் மற்றுமொரு முக்கியமானவர் உடன்குடி சுதந்திர போராட்ட வீரர்களை பட்டியலிட்ட எழுத்தாளர் செ.பெருமாள். இவரை நாம் நிச்சயம் பேசியே தீரவேண்டும்.
ஏன் என்றால் இறுதிகாலத்தில் உயிரோடு இருந்த தியாகிகளை நேரில் சென்று பேட்டிக்கண்டு, அவர்களை பற்றி எழுதிய புத்தகத்தினை வெளியிட்டவர் இவர். இவர் 2002 ல் இந்த நூலை வெளியிட்டுள்ளார்.
இவருக்கு சுதந்திரபோராட்ட தியாகிகள் பற்றி எழுதும் ஆவல் எதனால் ஏற்பட்டது. என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரது ஆசிரியர் ஞா.தேவபிரியம் பல முறை இவரைப் போன்ற மாணவர்களிடம் வரலாற்றை எழுதுங்கள் என்று கூறியது உண்டு. அவரது அறிவுரையின்படி தியாகிகளின் மேல் அளவு கடந்த பற்றுக் கொண்டிருந்தார்.
இவர் ஆசிரியராகப் பணியாற்றி வரும் உடன்குடி இராமகிருஷ்ண சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 15.08.1998 அன்று நடைபெற்ற விடுதலை நாள் விழாவில் ஏதேனும் ஒரு தலைப்பில் பேசுமாறு அவரது பள்ளியின் தலைமை ஆசிரியர் சு.சபாபதி கூறினார். தியாகி ஏ.டி.காசி எழுத்தாளருக்கு நன்கு அறிமுகமானவர். அவரிடம் விடுதலைப் போராட்டத்தில் உடன்குடியின் பங்கு பற்றி கேட்டுப் பேச வேண்டுமென இவர் எண்ணியதால் இந்திய விடுதலையில் உடன்குடியின் பங்கு என்ற தலைப்பை தேர்வு செய்தார்.
இதற்காக பண்டாரஞ்செட்டி விளையில் வசித்து வரும் தியாகி ஏ.டி.காசி அவர்களைச் சந்தித்தார். அவர் பலவிபரங்களைக் கூறியதோடு லோன்துரை கொலை வழக்குக் குறித்தும் பேசினார். இருப்பினும் தகுந்த ஆதாரங்களோடு பேசினால் நன்றாக இருக்குமே என எண்ணியதால் அந்நாளில் குலசேகரன்பட்டினம் காவல்துறை உதவி ஆய்வாளராக இருந்த மணிகண்டன் அவர்களைச் சந்தித்து லோன் துரை கொலை வழக்குத் தொடர்பான முதல் தகவல் அறிக்கை ஏதாவது தங்களுடைய காவல் நிலையத்தில் உள்ளதா? என்று கேட்டுள்ளார். அவர், விடுதலை போராட்ட வீரர்களால் 1942 ல் வில்பிரட்லோன் துரை கொலை செய்யப்பட்டுள்ளார். அது தொடர்பாக ஆவணங்கள் எதுவும் எங்கள் காவல்நிலையத்தில் இல்லை. ஆனால் திருச்செந்தூரில் வாழ்ந்து வரும் தியாகி பெஞ்சமின் என்பவரிடம் அந்தக் கொலை வழக்கு தொடர்பான தீர்ப்பின் நகல் உள்ளது. அதை வாங்கித் தருகிறேன் நீங்கள் ஜெராக்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.
அதன்படியே அவர் அந்த தீர்ப்பை வாங்கிதர, அதை நகல் எடுத்துக்கொண்டார். ஆங்கிலத்தில் இருந்த அந்தத் தீர்ப்பைப் படித்துப் பார்த்தபோது அரைகுறையாகப் புரிந்தது. அதிலிருந்து கிடைத்த புள்ளிவிவரங்களுடன் தியாகி ஏ.டி.காசி அவர்களிடம் கிடைத்த தகவலையும் சேர்த்து 15.08.1998 அன்று அவரது பள்ளியில் நடைபெற்ற விடுதலை நாள் விழாவில் இந்திய விடுதலையில் உடன்குடியின் பங்கு என்ற தலைப்பில் பேசினர். அப்போதே அவரது மனதில் நம் பகுதியில் தன் உயிரையே பணயம் வைத்து எத்தனையோ இளைஞர்கள் விடுதலைக்காகப் போராடி உள்ளனர். ஆனால் அவர்களின் அரிய பெரிய சாதனைகள் இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாமலலேயே போய் விடுமோ என்ற ஐயம் ஏற்பட்டது. அன்று முதல் உடன்குடி பகுதி தியாகிகளின் சாதனைகள் குறித்து புத்தகம் எழுத வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதுக்குள் எழுந்தது.
இதுகுறித்து குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்த அவரது நண்பர் முத்துகிருஷ்ணனிடம் பேசினார். அவர், தியாகி மந்திரம் என்பவர் திருச்செந்தூரில் இருக்கிறார். அவர் லோன்துரையால் காயப்படுத்தப்பட்டவர். அவரை எனக்கு நன்றாகத் தெரியும் எனக் கூறி தியாகி அவரிடம் அழைத்துச்சென்றார்.
17.08.1998 அன்று மந்திரம் அவர்களை சந்தித்த போது அவர் பல தகவல்களைத் தந்ததுடன் முதுபெரும் தியாகி சோமயாஜுலு அவர்கள் எழுதிய “நெல்லை மாவட்ட சுதந்திரப் போராட்ட வரலாறு” என்ற நூலை என்னிடம் தந்தார். அதில் லோன் துரை கொலை வழக்குத் தொடர்பான செய்திகள் இருந்தது. தொடர்ந்து குலசேகரன்பட்டிணம் அருள் மேல்நிலைப்பள்ளியில் தியாகிகளைக் கௌரவிக்கும் விதமாக ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த விழாவிற்கு, பேராசிரியர் கணபதிராமன் என்பவர் வருகைதர இருக்கிறார். அவர் “பொங்கியெழுந்த பொருநை” என்ற தலைப்பில் விடுதலைப்போராட்ட வீரர்கள் குறித்த புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அவரிடம் உங்களுக்கு ஒன்றை வாங்கித்தருகிறேன் எனக் கூறினார்.
அதன்படி அந்த நூலும் பெருமாள் அவர்களுக்கு கிடைத்தது. தியாகி மந்திரம் அவர்களைச் சந்தித்து விட்டு தியாகி மேகநாதன் அவர்களையும், தியாகி பெஞ்சமின் அவர்களையும் சந்தித்தார். அவர்களும் பல தகவல்களையும் ஆவணங்களையும் தந்து உதவினார்கள். இதுபோலவே அவர் சந்தித்த தியாகிகள், மற்றும் தியாகிககளின் குடும்பத்தினர் தந்த ஒத்துழைப்பின் பேரில் இந்த நூலை எழுத முடிந்தது. அவரால் இயன்ற அளவு ஒவ்வொரு தியாகியின் இல்லத்திற்கும் சென்று தகவல்களைச் சேகரித்து உள்ளேன்.
உண்மையிலேயே இது ஆச்சரியப்பட வேண்டிய விசயமாக இருந்தது. தற்போது குலசேகரபட்டினம் லோன் துறை கொலை வழக்கு பேசப்பட்டு வருகிறது என்றால் அதற்கு இந்த நூல் மிக முக்கிய காரணமாகும் என்றார் நூலகர் முத்துக்கிருஷ்ணன்.
அவர் அந்த காலத்திலேயே தியாகிகள் பேச்சையெல்லாம் பிளாப்பி என்ற ஒலிபதிவு கார்டில் பதிவு செய்து வைத்துள்ளார். தற்போது அந்த பிளாப்பியை திறந்து பார்க்க வாய்ப்பு இல்லாமல் போன காரணத்தினால் தொடர்ந்து அவர்கள் பேச்சை கேட்க வாய்பில்லாமல் போய் விட்டது. என அவரை பார்க்கும் போதெல்லாம் எழுத்தாளர் குறைப்பட்டு கொள்வார்.
உடன்குடியில் நடைபெற்ற போராட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டதாக தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால் அவர்களின் பெயரோ, அவர்களோ, அவர்களின் குடும்பத்தார் வசிக்குமிடமோ தெரியாமல் போகவே அவர்களைப் பற்றிய தகவல்களை இங்கே தர இயலவில்லை. இந்த நூலை எழுதி முடிக்கும் இந்நாளில் அவருக்குள்ள மிகப்பெரும் குறையாதெனில் இந்நூல் வெளிவர எனக்கு பெரிதும் துணைபுரிந்த தியாகி மேகநாதன், தியாகி மந்திரக்கோனார், தியாகி பெஞ்சமின், தியாகி ஏ.டி.காசி, தியாகி பி.எஸ்.நாராயணன் ஆகிய ஐவரும் மறைந்து விட்டார்கள். என்று அவர் கூறியிருந்தார்.
இந்நூலுக்கு அணிந்துரை எழுதிய திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் இரா.சுதாமதி , வாழ்த்துரை வழங்கிய முதல் பிரதியை வெளியிட்ட மாண்புமிகு தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் , தலைமை தாங்கி நடத்திய தூத்துக்குடி மாவட்ட பம்புசெட் விவசாயிகள் சங்கத்தலைவர் பொன்.இராமநாத ஆதித்தன் , முதல் பிரதியை பெற்ற சென்னை சுங்கத்துறை அதிகாரியும், தாண்டவன் காட்டைச் சேர்ந்த என் இனிய நண்பருமாகிய கோபாலகிருஷ்ணன் , இந்தூல் வெளிவர பேருதவி செய்த காவல்துறை உதவி ஆய்வாளர் மணிகண்டன் , அச்சிட்டு உதவிய உடன்குடி சுதா கம்ப்யூட்டர் உரிமையாளர் பெ.லிங்கேசன் , இந்நூலுக்கு விளம்பரங்கள் தந்து உதவிய இனிய உள்ளங்களுக்கும் மற்றும் இந்நூலுக்காக எனக்குப் பேருதவி செய்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. என்று உதவியவர்களையெல்லாம் மிகவும் பெருமையாக கூறியிருந்தார்.
“ஆக இத்தனை தகவல் தந்த ஆசிரியரைப்பற்றி கொஞ்சம் கூறுங்களேன்”. கலாராணி நூலகரிடம் கேட்டாள். ஆசிரியரை பற்றி கூற ஆரம்பித்தார்கள்.
“உடன்குடியை சார்ந்த த.செல்லத்துரை நாடார் & தவமணி அம்மாளுக்கு மகனாக 21.04.1968&இ-ல் பிறந்தவர் பெருமாள். எம்.ஏ., பி.எட், பட்டதாரியான இவர் சாத்தான்குளம் ஒன்றியம் படுக்கப்பத்து மறக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.
இவரைப் பன்முகத் திறமை கொண்டவர். இவர் விவசாயம், தேனி வளர்ப்பு, கல்வித்துறை, பத்திரிகைத்துறை, புகைப்படத் துறை, அச்சகத் துறை, பட்டிமன்றப் பேச்சாளர் என பல துறைகளில் அனுபவம் பெற்றவர்.
உடன்குடி பகுதி தியாகிகளின் செயற்கரிய செயலை வரலாற்றில் இடம் பெறச் செய்த செ.பெருமாள் கந்தபுரத்தில் குடும்பத்தினருடன் குடியிருந்து வருகிறார். இவருக்கு அன்னசித்ரா என்ற மனைவியும், பார்க்கவி என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் இவருடைய எழுத்துப்பணிக்கு மிக உதவியாக உள்ளனர்.
கலாராணிக்கு மிகவும் பிரமாண்டமாக இருந்தது. உடனே லோன்துரை கொலையானது, அதன் பின் நடந்த சம்பவம் எல்லாம் வரலாறாக தெரியவேண்டும் என ஆசைப்பட்டாள்.
அதற்கான ஒரு வாய்பும் கிடைத்தது.
(குலசேகரபட்டினம் லோன் துரை வரலாறு தொடரும்)