

தோண்ட தோண்ட அதிசயமாக அபூர்வ பொருள்கள் கிடைக்கும் ஆதிச்சநல்லூரில் 3 மீட்டர் ஆழத்தில் இறங்கி அகழாய்வு பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி நதிக்கரை ஓரத்தில் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2020ம் ஆண்டு அறிவித்திருந்தார்.

அதன் முதல் கட்டமாக மத்திய தொல்லியல் துறை சார்பில் திருச்சி மத்திய தொல்லியல் மண்டல இயக்குனர் அருண் ராஜ் தலைமையில் அகழாய்வு பணிகள் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்பட்டது. இந்த அகழாய்வு பணியில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் இங்கேயே காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த அகழாய்வு பணிகள் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களில் நடந்து வருகிறது.

இந்த அகழாய்வு பணியில் 80க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கிடையில் ஆதிச்சநல்லூரில் சி சைட் என அழைக்கப்படும் அலெக்சாண்டர் ரியா கடந்த 100 வருடங்களுக்கு முன்பு அகழாய்வு செய்த பகுதியில் 30 செண்டி மீட்டர் ஆழத்தில் ஒரு தங்கத்தால் செய்யப்பட்ட காதணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பி. சைட்டில் முழு மனிதனின் மண்டையோடு உள்பட அனைத்து அங்கங்கள் உள்ள எலும்பு கூடுகள் கிடைத்தன. இதுபோன்ற பலவேறு தொல்லியல் எச்சங்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.

ஆதிச்சநல்லூரில் 1902&ஆம் ஆண்டு அலெக்சாண்டர் ரியா அகழாய்வு செய்த போது தங்கத்தால் செய்யப்பட்ட நெற்றிப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர் நடந்த 4 கட்ட அகழாய்வு பணியில் தங்கத்தால் செய்யப்பட்ட பொருள் எதுவும் கிடைக்கவில்லை. 120 வருடங்களுக்கு பிறகு தங்கத்தால் செய்யப்பட்ட காதணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் ஆதிச்சநல்லூரை நோக்கி தொல்லியல் ஆர்வலர்கள் கவனம் திரும்பியுள்ளது.

தற்போது சுமார் 3 மீட்டர் ஆழத்தில் தோண்டிய போது அங்கே நீளமான ஈட்டி போன்ற ஆயுதம், இடுக்கி போன்ற இரும்பு பொருள் ஆகியவை கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் இரும்பு பொருள் மீது படிந்த நெல்லின் படிமங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நெல்லின் படிமங்கள் கண்டு பிடிக்கப்பட்டது, இந்தியாவிலேயே முதல் முதலில் ஆதிச்சநல்லூர் தான் கிடைத்துள்ளது. இதனால் தொல்லியல் ஆர்வலர்கள் மகிழச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் 26.07.2022 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அகழாய்வு பணிகள் நடந்து வரும் இடத்தை பார்வையிட வந்தார். அவருக்கு மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ், தொல்லியல் ஆய்வாளர் எத்திஸ்குமார் ஆகியோர் விளக்கமளித்தனர்.
அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களையும், முதுமக்கள் தாழிகளையும் அவர் பார்வையிட்டார்.
தொடர்ந்து அகழாய்வு பணியில் 3 மீட்டர் ஆழமான குழியில் இறங்கி மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். அந்த குழியில் 135 செண்டி மீட்டர் நீளம் கொண்ட இரும்பால் செய்யப்பட்ட பாதாளகரண்டி எனப்படும் பொருளை பார்வையிட்டார். இந்த பாதாள கரண்டி சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் பொருட்கள் கிணறுகளில் தவறி விழுந்தால் அதை எடுப்பதற்கு பயன்படுத்தியது என்று தெரிவித்தனர்.

மேலும் இரும்பால் செய்யப்பட்ட பாத்திரத்தின் தகடு போன்ற ஒரு பகுதியும் இந்த ஆய்வுப் பணியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பாத்திரத்தின் மேல்பகுதியில் நெல்மணிகள் இருந்தற்கான சான்றாக உமி பதிந்துள்ளது. எனவே ஆதிகாலத்தில் இறந்த மனிதனுடன் அந்த இரும்பு பாத்திரத்தை வைத்தபோது அதன்மேல் பகுதியில் போடப்பட்ட நெல்லின் உமிகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோன்று இரும்பால் செய்யப்பட்ட பாத்திரத்தின் மீது நெல் படிபம் இந்தியாவில் நடந்து வரும் அகழாய்வு பணிகளில் எங்கும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஆதிச்சநல்லூர் அகழாய்வு மேலும் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
மாவட்ட ஆட்சிதலைவர் மிகவும் கஷ்டப்பட்டு ஏணி வழியே சுமார் 3 மீட்டர் கீழே இறங்கி ஆர்வத்துடன் அகழாய்வு செய்யும் இடங்களை பார்வையிட்டார். அதன் பின் மாவட்ட ஆட்சி தலைவர் மேலே வந்து தங்கம் கண்டு பிடித்து கொடுத்த புளியங்குளம் கல்யாணி மற்றும் பணியாளர்களை அழைத்துப்பாராட்டினார். அவர்களிடம் உங்கள் ஊரில் அடிப்படை வசதிகள் உள்ளதா? வேறு ஏதாவது உதவி வேண்டுமா? என்று கேள்வி கேட்டார். உடனே கல்யாணி, “எங்கள் ஊரில் பேருந்துகள் முறையாக நிற்க்க வில்லை. நடடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
மாவட்ட ஆட்சி தலைவர் ஆவண செய்வதாக வாக்களித்தார். அதன் பின் ஆதிச்சநல்லூர் பஞ்சாயத்தில் இடிக்கப்பட்ட பஞ்சாயத்து அலுவலகத்தினை பார்வையிட்டார். விரைவில் பஞ்சாயத்து அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். தொடர்ந்து அகழாய்வு அதிகாரிகள் தங்கி இருக்கும் இடத்தினை பார்வையிட்டு அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தருவதாக வாக்களித்தார்.
அவருடன், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், நலிந்தோர் நலத்திட்ட தாசில்தார் ரமேஷ், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சங்கர்கணேஷ், பொறியாளர் கலைச்செல்வன், ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர் அன்னராஜ், உதவி ஆய்வாளர்கள் தர்மர், ராபர்ட், கிராம நிர்வாக அலுவலர்கள் பாண்டி பெருமாள், கந்தசுப்பு உள்பட பலர் உடன் வந்தனர்.


