தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறையில் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டி நடந்தது.
சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை முறம்படி ஸ்ரீசுடலை தளவாய் மாடசுவாமி கோயில் கொடை விழாவை முன்னிட்டு பன்னம்பாறை தொழிலதிபர் மாசானம் என்பவர் நினைவாக சிறிய வண்டி மற்றும் பெரிய மாட்டு வண்டி போட்டிகள் நடந்தது.
8 பெரிய மாட்டு வண்டிகளும், 16 சிறிய மாட்டு வண்டிகளும் இந்த பந்தயத்தில் பங்கு பெற்றது. பெரிய மாட்டு வண்டி போட்டி 10 மைல் தூரமும், சிறிய மாட்டுவண்டி போட்டி 6 மைல் தூரமும் நடத்தப்பட்டது. இதில் பெரிய மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசாக 30 ஆயிரத்தை மருகால்குறிச்சி சுப்பம்மாள் வண்டி பெற்றது. இரண்டாம் பரிசான 27ஆயிரத்தை சங்கரபேரி ஆறுமுகப்பாண்டியன் வண்டியும் மூன்றாம் பரிசான 25 ஆயிரத்தை பாளையங்கோட்டை டிஎஸ்பி வெங்கடேஷ் வண்டி பெற்றது.
அதே போல் சிறிய மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசான ரூபாய் 25 ஆயிரத்தை நாலந்தூர் உதயபாண்டியன் வண்டியும், இரண்டாம் பரிசான 23 ஆயிரத்தை கடம்பூர் எஸ்.வி.எஸ் கருணாகரன் வண்டியும், மூன்றாம் பரிசான 21 ஆயிரத்தை நாலந்தூர் உதயபாண்டியன் வண்டியும் பெற்றது. போட்டியில் வென்ற வீரர்களுக்கு சாத்தான்குளம் டிஎஸ்பி பாலச்சந்திரன் தலைமை வகித்து பரிசு வழங்கினார்.
போட்டிக்கான ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டி மற்றும் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.


