கருங்குளத்தில் அரசுப் பேருந்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேரை தனிப்படை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு 13 பேர் பலியாகினர். இதைக் கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கடந்த 25ஆம் தேதி உடன்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தை கருங்குளம் அருகே மர்ம நபர்கள் வழிமறித்து தீ வைத்து கொளுத்தினர். இதில், மூன்று பேர் காயமடைந்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 40-க்கும் மேற்பட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர் வெங்கடேசன், உதவி காவல் ஆய்வாளர் முருகபெருமாள் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இதுதொடர்பாக கருங்குளத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இரண்டு பைக்குகளில் வந்த 3 பேர், இரண்டு ஒரு லிட்டர் கேன்களில் பெட்ரோல் வாங்குவது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது தனிப்படையினருக்கு தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து பைக்குகளின் நம்பர்களை வைத்து தொடர் விசாரணை நடத்தியதில், மணக்கரையைச் சேர்ந்த அப்பாவு மகன் கள்ளவாண்டன்(32), இசக்கி மகன் பேச்சிமுத்து(எ) கோயா பேச்சி (27), கந்தசாமி மகன் சிவராமன் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த 3 பேரையும் தனிப்படை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், கள்ளவாண்டான் மணக்கரை ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் ஆவார்.


