–
ஸ்ரீ வைகுண்டம் அருகே ஊடரங்கு காலத்தில் தன்னுடைய முன்னோர்கள் செய்த பனையேறும் தொழிலைச் செய்து அசத்தி வரும் 11ம் வகுப்பு மாணவன். அவனுக்கு உதவியாகப் பதநீர் காய்க்கும் 8 ம் வகுப்பு படிக்கும் தங்கை. கிராமத்தில் நடைபெறும் சுவாரஸ்ய நிகழ்வு குறித்த செய்தி தொகுப்பு.
உலகம் முழுவதும் கொரோனா பிடியிலிருந்து மீண்டு வர வழி தெரியாமல் தவித்து வருகின்றனர். இதற்குத் தமிழகமும் விதிவிலக்கல்ல.
கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஊரடங்கு உத்தரவானது தற்போது வரை நீடித்து வருகிறது. இந்த கொரோனாவால் தமிழகத்தில் தினமும் பல ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். லட்சக்கணக்கானோர் தங்களது வேலை மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கிராமப்புறங்களில் வாழ்கின்ற மக்கள் தங்களது விவசாய நிலங்களைத் தேடி அதைப் பண்படுத்தி மீண்டும் விவசாயம் செய்துவருகின்றனர். வேலையின்றி தவித்து வரும் பொதுமக்கள் தங்களது பிழைப்புக்களை தங்கள் முன்னோர்கள் விட்டுச் சென்ற தொழிலை மீண்டும் புதுப்பித்து நடத்தி வருகின்றனர். ஆனாலும் கூட விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்குப் போதி விலையின்றி தவித்து வருகின்றனர். இதனால் மனம்நொந்து வருகின்றனர். ஆனாலும் தங்கள் நிலத்தில் அவர்கள் பார்க்கும் விவசாயம் அவர்களுக்கு மனநிறைவைத் தருகிறது. அதுபோலவே பலரும் தங்களது முன்னோர்கள் தொழிலை மீண்டும் செய்து சாதனை புரிந்து வருகின்றனர். அதில் 18 வயது நிரம்பிய வாலிபர் தனது படிப்பின் இடையில் தங்கள் முன்னோர்கள் தொழிலான பனையேறும் தொழிலைச் செய்து வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீ வைகுண்டம் அருகே உள்ள வல்ல குளம் பஞ்சாயத்து அரசர் குளத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் உப்பு வியாபாரி. இவரது மனைவி கோசலை. இவரும் தினமும் கூலி தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இதற்கிடையில் தாய் தந்தைகள் படும் பாட்டை கண்டார் இவரது மகன் கிருஷ்ண பெருமாள். இவர் இராமானுஜம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த வருடம் 11ம் வகுப்பு முடித்துள்ளார். மகள் கண்ணகி அதே பள்ளியில் 8ம் வகுப்பு முடித்துள்ளார்.
கொரோனா காரணமாகப் பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நகர்ப்புறங்களில் உள்ள மாணவ மாணவிகளும் வீட்டில் உள்ள ஸ்மார்ட் தொலைப்பேசிகளில் மூழ்கி உள்ளனர். கிராமப் புறங்களில் உள்ளவர்கள் பழைய விளையாட்டுகளைத் தூசி தட்டி விளையாடி வருகின்றனர்.
பாலகிருஷ்ணன் குடும்பம் சற்று வித்தியாசமாகவே உள்ளது. பாலகிருஷ்ணன் காலை 5 மணிக்கு உப்பு வியாபாரத்திற்குக் கிளம்புவார். அதில் பெரிய அளவு லாபம் இல்லை. அப்போது அவரது மகன் கிருஷ்ண பெருமாள் அவருக்கு உப்பு மூட்டையை வண்டியில் ஏற்றி வைத்து விட்டு யோசனை செய்தார். தற்போது ஊரில் பனை தொழிலுக்கு நல்ல மதிப்பு உள்ளது. ஒரு காலத்தில் 100க்கு மேற்பட்டவர்கள் இவ்வூரில் பனை ஏறினார்கள். தற்போது மூன்று பேர் தான் ஏறுகிறார்கள். பனங்கருப்பட்டி நல்ல மருந்து, அந்த பொருள்களுக்கு நல்ல டிமாண்ட் உள்ளது. எனவே பனை ஏற வேண்டும் என முடிவு செய்தார். எனவே தனது தங்கை கண்ணகியுடன் கலந்து ஆலோசித்தார். தான் பனை பேறி தங்கை பதனீர் காய்க்க முடிவு செய்தனர்.
தினமும் காலையில் டி.வி.எஸ் மைபைட்டில் தங்கை கண்ணகியை ஏற்றிக்கொண்டு அதிகாலை 5.30 மணிக்கு பனங்காட்டுக்குச் செல்வார்.
கிருஷ்ண பெருமாள் தினமும் சுமார் 5 பனையேறுவார். தங்கை கண்ணகி அவருக்குத் துணையாகப் பனையிலிருந்து இறக்கும் பதநீரைக் காய்க்கும் இடத்திற்கு எடுத்துச் சென்று , பாத்திரத்தில் ஊற்றி சுமார் 2 மணி நேரம் அந்த நெருப்பைப் பற்றவைத்து, காய்த்து தேங்காய் சிரட்டையில் ஊற்றி அதனைப் பக்குவப்படுத்தி கருப்பட்டியாக மாற்றி அதனை விற்கின்றனர். இதனால் தினமும் தாய்தந்தையருககு உதவியாகப் பணம் கிடைக்கிறது.
இது குறித்து பனையேறும் கிருஷ்ண பெருமாள் கூறும்போது, இந்த கொரோனா ஊரடங்கால் நாங்கள் வீட்டிலிருந்து கொண்டிருந்தோம். அப்போது எனது தாத்தா பனையேறும் தொழிலைச் செய்து வந்தது எனக்கு ஞாபகம் வந்தது. அந்த தொழிலை நாம் ஏன் செய்யக்கூடாது என்று நினைத்தேன். அதன் காரணமாக எங்கள் ஊர் அருகே உள்ள பனைமரக்காட்டில் சென்று தினமும் அதிகாலை 5.30 மணிக்கு பனையேறச் செல்வேன். அப்போது எனது தங்கையும் உடன் வந்து எனக்கு வேண்டிய உதவிகளைச் செய்வார். மேலும் அந்த காலத்தில் எங்கள் பகுதியில் அதிக அளவில் பனையேறும் தொழில் செய்து வந்தார்கள். ஆனால் தற்போது எங்கள் ஊரில் ஒரு வயதானவர் மட்டுமே செய்து வருகிறார். காரணம் அந்த காலத்தில் பனையிலிருந்து கீழே விழுந்தால் மரணம்தான். எனவே அந்த பணியினை காலங்கள் கடக்கக் கடக்க அனைவரும் விட்டு விட்டனர். தற்போது நான் இந்த நான் பனையேறும் தொழிலைச் செய்து வருகிறேன். எனவே இளைஞர்கள் இந்த பணியில் ஈடுபட அரசு பனையேறும் தொழிலுக்கு நவீன யுக்திகளைப் புகுத்த வேண்டும் என்றும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து கிருஷ்ண பெருமாளின் தங்கை கூறும்போது, அப்பா உப்பு வியாபாரத்திற்குக் கிளம்பும்போது நானும் அண்ணனுடன் பனையேறும் இடத்திற்கு வந்து விடுவோம். அண்ணனுக்கு உதவியாக இருப்பேன். பின்னர் அண்ணனிடம் பதநீரை பெற்றுக்கொண்டு அதனை விடுதியில் வைத்துக் காய்த்து கருப்பட்டியாக்கி விற்று எங்கள் குடும்பத்திற்குத் தேவையான பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்கிறோம். மேலும் இந்த ஊரடங்கை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்கிறோம் என்றார்.
மேலும் அந்த பகுதியில் பனை தொழிலாளி தங்க லெட்சுமி கூறும் போது, எங்கள் ஊரில் எனது கணவர் மட்டும் இந்த தொழிலைச் செய்து வந்தார். தற்போது எங்கள் ஊரைச் சேர்ந்த கிருஷ்ண பெருமாள் இளைய தலைமுறையில் பனையேறி வருவது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என அவர் தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து கிருஷ்ண பெருமாளின் தாயார் கோசலை கூறும்போது, எனது மாமனார் செய்த பனையேறும் தொழிலை எனது மகன் தற்போது செய்து வருவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களின் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த இது மிக உதவியாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும்போது,
ஒரு காலத்தில் பனை ஏறும் தொழிலாளிகள் நூற்றுகணககில் இருந்த ஊர் தற்போது, அவர்கள் வாரிசுகள் மற்ற வேலை தேடி வெளியூர் சென்ற காரணத்தினால் நலிந்து விட்டது. ஒரு காலத்தில் பனை ஏறினால் பெண் கட்டி தர மறுத்தார்கள். எனவே வாலிபர்கள் இந்த தொழிலை முழுவதும் மறந்து விட்டனர். கொரோனா தொற்று நோய் காரணமாகக் கிராமத்தினை நோக்கி வந்தவர்கள், தங்கள் முன்னோர்கள் விட்டுச் சென்ற தொழிலையும் நினைத்து பார்க்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் பனை வெல்லக் கூட்டுறவுச் சங்கம் உள்ளது. அந்த சங்கம் மூலமாக நலிவடைந்த இந்த தொழிலை இளைஞர்கள் மத்தியில் ஊககுவிகக உடனடியாக நவீன பனை ஏறும் இயந்திரங்களை வழங்கவேண்டும். பனை தொழிலுக்கு ஏற்ற மானியம் வழங்கவேண்டும். பனை தொழிலில் கிடைககும்பொருள்களை நல்ல விலையில் கொள் முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினார்.
எது எப்படியோ காணாமல் போய்க் கொண்டிருக்கும் பனையேறும் தொழிலை மீண்டும் அரசு தலை தூக்க வைக்க வேண்டும் என்பதே அனைத்து சாமான்ய மக்களின் கோரிக்கையாக உள்ளது.


