ஸ்ரீவைகுண்டம் வளம் மீட்பு பூங்காவில் நடைபெற்று வரும் இயற்கை உரம் தயாரிக்கும் பணியை சார்-ஆட்சியர் பிரசாந்த் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டும் வகையில், கடந்த 2013-2014ஆம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நத்தம் பகுதியில் வளம் மீட்பு பூங்கா அமைக்கப்பட்டது.
ஆனால், இத்திட்டம் செயல்படுத்தப்படாமல், குப்பைகள் அனைத்தும் தாமிரவருணி ஆற்றின் கரையோரத்திலேயே கொட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், பேருராட்சிப் பகுதிகளில் சுகாதாரப் பணிகளை மேம்படுத்தும் விதமாகவும், வளம் மீட்பு பூங்காவை செயல்முறைக்கு கொண்டு வரும் வகையிலும், ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் உள்ள தேநீர் கடை, பேக்கரி, பலசரக்கு கடைகள் உள்ளிட்டவற்றின் வாசல் பகுதியில் கடை உரிமையாளர்கள் சிறிய அளவிலான குப்பைத் தொட்டிகளை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதில் சேரும் குப்பைகளில் மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து வளம் மீட்பு பூங்காவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு இயற்கை மண்புளு உரம் தயாரித்து விவசாயிகளிடம் விற்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பணிகளை சார்-ஆட்சியர் பிரசாந்த் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்போது வட்டாட்சியர் தாமஸ் பயஸ் அருள், பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழியன் ரெங்கசாமி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.