ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரி வருகின்ற 15ம் தேதி தொடர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த ஏறு தழுவுதல் பாதுகாப்பு இயக்கத்தினர் ஆலோசனை கூட்டத்தில் அறிவித்துள்ளனர்.
ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்திட அனுமதி அளிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஏறு தழுவுதல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் புதுக்குடி ராஜா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற 25ம் தேதி ஸ்ரீவைகுண்டத்தில் மாநில அளவிலான ஜல்லிக்கட்டு நடத்திடும் வகையில் ஏறு தழுவுதல் பாதுகாப்பு இயக்கத்தினர் அதற்கான ஆயத்தப்பணிகளை கடந்த மாதம் 21ம் தேதி தொடங்கினர்.
இதையடுத்து ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அரசாணை வெளியிடக்கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் உதயகுமார் உள்ளிட்டவர்களை நேரில் சந்தித்து ஏறு தழுவுதல் இயக்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் மாநில அளவிலான ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசாணை வெளியிட்டு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் நடந்தது.
ஏறு தழுவுதல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் புதுக்குடி ராஜா தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகுதிகளில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்திட புதிதாக அரசாணை வெளியிட்டது போல் தூத்துக்குடி மாவட்டத்தை ஜல்லிக்கட்டு நடைபெறும் மாவட்டமாக அறிவித்து ஸ்ரீவைகுண்டத்தில் போட்டி நடத்திட அனுமதிக்க வலியுறுத்தி வருகின்ற 15ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த தீர்மானிக்கபபட்டது.
பின்னர் ஸ்ரீவைகுண்டம் துணை போலிஸ் சூப்பிரண்டிடம் தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி அளிக்கும்படி போராட்டக்குழுவினர் மனு அளித்தனர்.
இந்த கூட்டத்தில் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் கலந்து கொண்டனர்.