ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் இன்று 100வது நாளை எட்டியது. இதை முன்னிட்டு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போராட்டக் குழுவினர் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தும், ஏராளமான காவல் துறையின் தடுப்புகளையும் தாண்டி ஆயிரக்கணக்கான கிராம மக்கள் திரண்டு வந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
போராட்டக்காரர்களுக்கும், அவர்களை தடுத்து நிறுத்த முயன்றபோது வன்முறை வெடித்தது. இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்த 7 பேரில் 3 பேரின் அடையாளம் தெரிய வந்துள்ளது. உசிலம்பட்டியைச் சேர்ந்த ஜெயராமன், தூத்துக்குடி லூர்தமாள்புரம் கிளாஸ்டின், ரயில்வே காலனி பகுதியைச் சேர்ந்த வெனிஸ்டா என்ற பெண்ணும் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி பலியாகியுள்ளார். இதில், வெனிஸ்டா பத்தாம் வகுப்பு தேர்வெழுதிவிட்டு, தேர்வு முடிவுக்காக காத்திருந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு, துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். காவல் துறையின் துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் பெண்கள் உட்பட 12 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


