இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ம. பேச்சியம்மாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்படி, 9ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10ஆம் வகுப்பில் தோல்வியுற்றவர்களுக்கு மாதம் ரூ. 200, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300, பிளஸ்- 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 400, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 600 வீதம் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும். தொடர்ந்து பதிவை புதுப்பித்திருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், மற்றவர்கள் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். உதவித்தொகை பெறுவதற்கு தகுதிகள் உள்ளவர்கள் அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் தூத்துக்குடி ஆசிரியர் காலனி, முதல்தெரு (கிழக்கு) பாண்டியன் கிராம வங்கியின் பின்புறம் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக.28ஆம் தேதிக்குள் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


